பு/ ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சியில் அளப்பரிய சேவையாற்றியவர் அதிபர் கே.தொண்டமான்
ஏ.எச்.பௌசுல் ஆசிரியர்
பு/ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் திரு.கந்தையா தொண்டமான் அவர்கள் தனது 58 ஆவது வயதில் 20 - 07 - 2023 திகதி அரச சேவையிலிருந்து ஒய்வு பெறுகின்றார்.
ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தை பல்வேறு சவாலுக்கு மத்தியில் உருவாக்கியவர். அவர் தனது 34 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
அவர் அரசக் கல்விக்கு ஆற்றிய சேவை மகத்தானது. எனவே அவரைப் பற்றி கல்வி சமூகம் தெரிந்து கொள்வதற்காக ஒரு சில வரிகள் எழுதலாம் என நினைக்கின்றேன்.
திரு. கந்தையா தொண்டமான் அவர்கள் ஆசிரியர் பணியில் 1989 - 09 - 01 ஆண்டு உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்பக் கல்வி ஆசிரியராக இணைந்து அப்பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கணிதம், புவியல் பாடங்களை கற்பித்ததோடு அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு உண்ணதமான பங்களிப்பாற்றியவராவார்.
அதனைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று ஒற்றப்பனை ஆரம்ப பாடசாலைக்குச் சென்றார். அப்பாடசாலையில் சக ஆசிரியராக கடமை புரிந்த காலத்தில் தன்னாலான பங்களிப்பை உண்ணதமாக வளங்கி வந்த வேளையில் தொழில் நிமிர்த்தம் காரணமாக பிரித்தாணியாவுக்குச் சென்று மீண்டும் 2000 ஆம் ஆண்டு அப்பாடசாலையில் ஆசிரியராக இணைந்து கொண்டார்.
2010 ஆம் ஆண்டு அப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் ஓய்வு பெற்று சென்றதன் காரணத்தினால் அவ்வெற்றிடத்திற்கு அப்பாடசாலை வழிநடத்தும் பொறுப்பை திரு. கந்தையா தொண்டமான் பொறுப்பேற்றார். தன்மீது ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற வேண்டும் என்று சிறப்பாக அப்பாடசாலையை வழி நடத்திச் சென்றார் என்பது அப்பாடசாலை வரலாற்றுகளில் இருந்து தெளிவாகின்றது.
அதனைத் தொடர்ந்து 2010 -10 -11 ஆம் திகதி ஆண்டிமுனை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக இணைந்து கொண்டார். இக்காலத்தில் இப்பாடசாலையில் கல்வி வளர்ச்சியிலும், பௌதீக ரீதியாகவும் பல முன்னேற்றங்களைக் கண்ட காலம் எனலாம். ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் இவரது சேவை கோடிற்று காட்டப்பட வேண்டிய ஒரு காலமாகும். இவரது காலத்தில் 1000 பாடசாலை திட்டத்தில் உள்வாங்கப்பட்டமையும் ஒரு சிறந்த உதாரணமாகும். க.பொ.த. (உ/த) நூறு வீதம் சித்தி பெற்றமைக்காக வடமேல் மாகாணத்தில் 2016 ஆம் ஆண்டு சிறந்த பாடசாலைக்கான விருதையும், சிறந்த அதிபருக்கான விருதையும் பெற்றுக் கொண்டது மற்றுமொரு சான்றாகும்.
ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம் 1000 பாடசாலைத் திட்டத்திற்குள் உள்வாங்கப் பட்டதன் காரணத்தினால் 1 - 5 ஆம் தரம் வரையான மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வியை தொடர முடியாத நிலை கருதி 2016 - 05 - 06 "பு/ ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயம்" உருவாக்கத்தின் முன்னின்று அதன் வரலாற்று அதிபராக திரு. கே.தொண்டமான் அவர்கள் 2016 - 05 - 06 திகதி 3/4 ஏக்கர் அரச காணியில் 28 மாணவர்களுடன் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார்.
இப்பாடசாலையைப் பொறுத்த மட்டில் அன்று எவ்வித பௌதீக வளங்களும் இன்றி ஒரு பாடசாலையாக இருப்பது கூட அடையாளம் காணமுடியாத வெற்றுப் பாடசாலையாக இருந்தது. இன்று ஒரு அங்க சம்பூர்னமான பாடசாலையாக மாறி இருப்பதற்கு சான்றாக 2019 ஆம் ஆண்டில் "அதிசிறந்த செயற்பாட்டிற்கான பாடசாலை" தேசிய மட்டத்தில் கல்வி அமைச்சினால் கௌரவ விருதைப் பெற்றுக் கொண்டமை சான்றாகும்.
இதற்கு காரண கர்தாவாக திரு கே.தொண்டமான் அதிபர் என்பது தெட்டத் தெளிவாகும்.
கல்வி சமூகத்தின் மத்தியில் திரு.கே.தொண்டமான் அதிபரின் ஓய்வு என்பது ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடமாகும். அவரது சேவை வரலாற்றின் சுவடுகளாக நிலைத்திருக்கும். அவரது சிறந்த சேவைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஏ.எச்.பௌசுல்
ஆசிரியர்
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி
(தேசிய பாடசாலை)
No comments