காலிமுக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றமிழைத்திருப்பின் பகிரங்க மன்னிப்பு வழங்க வேண்டும்;ஜனாதிபதி ரணிலிடம் தென்கிழக்கு கல்விப் பேரவை கோரிக்கை
(அஸ்லம் எஸ்.மௌலானா)
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றமிழைத்திருப்பின் அவர்களுக்கு, ஜனாதிபதி ரணில் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை தென்கிழக்கு கல்விப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மேற்படி பேரவையின் தவிசாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஏ.எல்.எம்.முக்தார், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;
காலிமுக ஆர்ப்பாட்டம், அதன் பின்னரான அனைத்து செயற்பாடுகளிலும் தொழிற்சங்கத் தலைவர்கள், சகல பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மதத்தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் எனப்பல தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் எவ்வித அரசியல் கட்சிகளையோ, எந்த தீவிரவாத இயக்கத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் அவர்களை நாட்டுத் தலைவர்- பாசிஸ்டுகள், குழப்பவாதிகள், ஆட்சிக் கவிழ்ப்பாளர்கள்
என பட்டம் சூட்டினார். அத்துடன் ஆர்ப்பாட்டங்களில் முன்னணியில் நின்ற பலர் தற்போது தேடித்தேடி கைது செய்யப்படுகின்றமை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்களை எந்த நாட்டிலும் கைது செய்கின்ற வரலாறு இல்லை. அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டம் ஒரு வருடத்திற்கு மேல் இடம்பெற்றது. இறுதியில் இந்திய அரசாங்கம் அடிபணிந்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றது. இதற்காக எந்த விவசாயியையும் இந்திய அரசாங்கம் கைது செய்வதற்கு முயற்சிக்கவில்லை.
காலிமுக ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டா நாட்டை விட்டு வெளியேறினார். இதன் காரணமாகவே ரணில் ஜனாதிபதியானார். எனவே காலிமுக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நன்றியுடையவராக ரணில் இருக்க வேண்டும். ஆனால் அவர்களை பலிவாங்குவதில் அரசாங்கம் தீவிரமாக செயற்படுவதை முழுநாடும் உணருகிறது. இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆரோக்கியமானதல்ல.
அரசாங்கத்தின் தற்போதைய கைது நடவடிக்கைகள் இலங்கை அரசியலமைப்பு மூலம்
உறுதிப்படுத்தப்பட்ட பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், அரசியல் சுதந்திரம் என்பவற்றை ஒடுக்கும் செயற்பாடாகும். நேரடியாக இவற்றை மீறி செயற்படாது மிகவும் தந்திரமாக அடக்கி
ஒடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசின் இச்செயற்பாடுகள் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் இலங்கை அரசுக்கு மிகக் கெட்ட பெயரை பெற்றுத் தருவதுடன் பொருளாதார ரீதியாக நலிவடைந்து போன இலங்கை எடுக்கும் முயற்சிகளை மிகவும்
மோசமாக பாதிக்கும்.
உண்மையில் காலிமுக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றமிழைத்திருப்பின் அவர்களுக்கு பகிரங்க மன்னிப்பை வழங்குவதன் மூலம் ஜனாதிபதி ரணில் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முன்வர வேண்டும்- எனவும் ஏ.எல்.எம்.முக்தார் வலியுறுத்தியுள்ளார்.
No comments