"அரகல"வை ரகளையாக மாற்றிய ரணிலை ஏன் ரவூப் ஹக்கீம் ஆதரிக்கவில்லை?
எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தனது ஜனாதுபதி பதவியை இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட ஜனாதிபதி பதவி வெற்றிடத்திற்கு போட்டியிட்ட பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்காது பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெருமவை ரவூப் ஹக்கீம் ஆதரித்தது தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதைப் பார்க்கலாம்.
வெற்றி பெறுபவருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்ற மனநிலை பலருக்கும் இருக்கலாம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்ற அடிப்படையில் கொள்கையோடு செயற்பட வேண்டியிருக்கிறது.
கோட்டாபாய அரசாங்கம் வந்த போது தனது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்ட சந்தர்ப்பத்தில் தனியொருவராக கோட்டா அரசாங்கத்தின் பாதகங்களை பகிரங்கமாக விமர்சித்தவர். அதனை இன்று மக்கள் உணர்ந்ததன் விளைவு தான் மக்கள் போராட்டம் உருவாகக் காரணமாக அமைந்தது.
பதவிகளுக்காக சோரம் போவதென்றால், அன்று 52 நாள் அரசியல் குழப்பத்தின் போது ரவூப் ஹக்கீம் பதவிகளுக்கும், சலுகைகளுக்கும் சோரம் போகிருந்தால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக தொடர்ந்திருக்க முடியாது.
ஜனநாயகத்தை மதித்து மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தனது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாத்து ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட காரணமாகவிருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மாற்றங்களை விரும்பிய மக்களின் விருப்பத்திற்கேற்ப ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்தார். அதன் போது மொட்டின் ஆட்சி எவ்வளவு ஆபத்தானதென்பதை பல மேடைகளில் ரவூப் ஹக்கீம் தெளிவுபடுத்தினார்.
ஆனால், இனவாதம் மேலோங்கியதன் விளைவால் மொட்டு ஆட்சிபீடமேறி நாட்டை இந்த நிலமைக்கு கொண்டு வந்ததன் பின்னர் மக்கள் உணர்ந்து ராஜபக்ஷக்களை மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
சஜித் பிரமதாசாவுக்கான உரிய இடத்தினை ஐக்கிய தேசியக்கட்சி வழங்க மறுத்து மக்களின் விருப்பங்களுக்கு ரணில் செவிசாய்க்க மறுத்த போது சஜித்துக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களோடு அதன் பங்காளிக்கட்சிகளும் வெளியேறி சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியில் 2020ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆதரவை கணிசமானளவு பெற்று ஆசனங்களை சஜித் அணி பெற்றுக் கொண்டது.
ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டவர்களை மக்கள் நிராகரித்தார்கள். எனவே, பாராளுமன்றத்திற்கு தேர்தலூடாக வெற்றி பெற முடியாத நிலையில், கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியலூடாக காலம் கடந்து ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரவேசித்தார்.
ராஜபக்ஷ அரசாங்கத்தில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்த பின்னர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கெதிராக கிளர்ந்தது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமாச் செய்த போது, பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கோடு சர்வதேச தொடர்பாடலைக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
மக்கள் எழுச்சி காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ராஜபக்ஷக்களை ஆட்சியிலிருந்து வெளியேறச் சொல்லி பலமான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்ற கோசம் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தது.
மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காது ராஜபக்ஷாக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மக்கள் ஆணையின்றி பாராளுமன்றத்தில் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமாக வீட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். அதனைத்தொடர்ந்து மக்கள் போராட்டம் ராஜபக்ஷாக்களைப் பாதுகாக்க வந்த ரணிலையும் வீட்டுக்கு அனுப்புவதற்குத் தயாரானது.
இதன் தொடராக நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடிகளை மக்கள் உணர ஆரம்பித்ததன் விளைவாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டுமென மக்கள் போராட்டம் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் என்பன சுற்றிவளைக்கப்பட்டதன் காரணமாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி பின்னர் வெளிநாட்டிலிருந்தவாறு தனது இராஜினாமாவை அறிவித்தார். ஆனாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக மறுத்தது மாத்திரமின்றி, பதில் ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டிய கடமை பாராளுமன்றத்திற்கு ஏற்பட்டது. அத்தோடு, இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேற சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகளைப்பெற சர்வகட்சி அரசாங்கம் அமையப்பெற வேண்டுமென்பதும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
போராட்டகாரர்களின் கோரிக்கையின் பிரதானமாகவிருந்தது ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்க வந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தொடரக்கூடாது என்பதாகும். அவ்வாறு தொடர்ந்தால் அவரை அகற்றும் வரை போராட்டம் தொடருமெனக் குறிப்பிட்டார்கள்.
ஆனாலும், பாராளுமன்ற பலம் மொட்டு அணியிடமே காணப்பட்டது. அவர்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்பட்டது.
மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத ரணில் விக்கிரமசிங்கவை அகற்றவும், சர்வ கட்சி அரசாங்கத்தை அமைத்து குறித்த காலப்பகுதிற்குள் நாட்டின் நிலமையைச் சீர்செய்யவும், பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியின் மிதமிஞ்சிய அதிகாரங்களைக் குறைப்புச் செய்து பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வரவும், மக்கள் ஆணையை இழந்த பாராளுமன்றத்தை குறித்த காலப்பகுதிக்குள் கலைத்து விட்டு பாராளுமன்றத்தேர்தலை நடத்தவுமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு எதிர்க்கட்சிகளிடம் காணப்பட்டது.
போராட்டகாரர்களும் எதிர்க்கட்சிகளைச் சந்தித்து தங்களின் போராட்ட நோக்கம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்வதனூடாக ராஜபக்ஷாக்களும் அவர்களின் கூட்டாளிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற நோக்கில் ரணிலுக்கான ஆதரவை வழங்க தயாராகவிருக்கும் சூழ்நிலையில், பாராளுமன்றப் பெரும்பான்மை மொட்டுக்கு இருக்கும் நிலையில் தனக்கான வாய்ப்பினை நாட்டின் நன்மைகருதி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரமதாசா விட்டுக்கொடுக்க முன்வந்து மொட்டு அணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெருமவுக்கு நாட்டைக் கட்டியெழுப்பும் பொதுவேலைத்திட்ட உடன்பாட்டோடு ஆதரவு வழங்கினார்.
மக்கள் விரும்பும் சர்வகட்சி ஆட்சியை உருவாக்கும் நோக்கோடு வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொள்வதற்காகவும் இவ்வாறான உடன்பாட்டை இரு அணிகளுக்கிடையில் கொண்டு வருவதில் ரவூப் ஹக்கீமின் பங்களிப்புகளும் உண்டு.
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷாக்களைப் பாதுகாப்பவர் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்திருக்கும் போது, கடந்த நல்லாட்சிக் காலத்தில் மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாகத் தெரிவாகிய அன்று அதிகாலை ரணில் விக்கிரமசிங்கவை அழைத்த மகிந்த ராஜபக்ஷா அவரோடு பேசி விட்டு அவரிடமே அலரி மாளிகையை ஒப்படைத்து விட்டுச் சென்றதையும் மறப்பதற்கில்லை.
ரணில் வாக்குத்தந்தால் காப்பாத்துவார் என்ற நம்பிக்கை அன்று தொடக்கம் இன்றுவரை ராஜபகஷ குடும்பத்திற்கு இருப்பதனாலேயே நாட்டின் உயர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கி அவர்களும், அவர்களின் அணியினரும் அரசியல் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு மக்கள் குரலுக்கு செவிசாய்க்காத, ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாக்க ஆட்சிக்கு வரத்துடிக்கும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டிய எவ்வித தேவையும் ரவூப் ஹக்கீமுக்கு இருக்கவில்லை.
மாறாக, மக்களின் வேண்டுகோளையேற்று ரணிலை வீட்டுக்கு அனுப்பவும், சர்வகட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தி போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தி போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை சர்வதேச ஒத்துழைப்போடு கட்டியெழுப்ப வேண்டிய தேவையே அதிகம் காணப்பட்டது.
எனவே தான், இவ்வாறான எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு சர்வகட்சி அரசாங்கம் அமையும் போது பதவிகளைக் கேட்பவர்களுக்கு பதவிகளை விட்டுக் கொடுத்து பதவிகளைப் பெறாது செயற்படத்தயார் என ரவூப் ஹக்கீம் முன்கூட்டியே அறிவித்திருந்தார் என்பது நினைவுபடுத்த வேண்டியது.
ரணிலின் பஸ்ஸில் ஏறமாட்டோம் என்றவர்களும், ரணிலின் காலத்தில் தான் முஸ்லிம் ஜனாஸா எரிக்கப்பட்டது என்று சொன்னவர்களெல்லாம் இன்று ரணிலை ஜனாதிபதியாக்க ஆதரவு கொடுத்து விட்டு அமைச்சுகளைப் பெறத் தவமிருக்கிறார்கள்.
ஆனால், நாட்டுமக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ரணிலுக்கெதிரான டலஸ் அலகப்பெருமவை ஆதரிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டதற்காக ரவூப் ஹக்கீமின் தீர்மானம் பிழைத்து விட்டதாக சிலர் பதறுகிறார்கள்.
அவர்கள் புரிந்து கொள்ளட்டும் ரவூப் ஹக்கீமின் தீர்மானம் பிழைக்கவில்லை. மக்களின் தீர்மானத்தை மொட்டு அணியினர் பாராளுமன்றில் உதாசீனம் செய்துள்ளார்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளட்டும்.
ரவூப் ஹக்கீமின் அரசியல் தீர்மானங்கள் பிழைத்துப் போனதாகச் சொன்னாலும் அவை பின்னர் சரியானவையாக மக்களால் உணரப்பட்டன.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ராஜபக்ஷாக்களுக்கெதிரான தீர்மானங்களையே மேற்கொண்டிருந்தார்.
அதன் போது, தீர்மானம் தோற்றிருக்கலாம். ஆனால், அவை பிழையான தீர்மானமில்லை என்பதை இன்று உணரக்கூடியதாகவே இருக்கிறது. ராஜபக்ஷாக்களின் நிழல் அரசாங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினூடாக நடைமுறைப்படுத்தப்படுவதை இன்றைய அரகல நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
அரசியல் அமைப்பின் 19வது திருத்தத்தை மீளக் கொண்டு வரும் போது மொட்டு அணியைச்சேர்ந்த பிரதமர் திணேஷ் குணவர்தனேவே அதிகாரம் பெறுவார் மீண்டும் ராஜபக்ஷ யுகம் உருவாகுவதற்கே இவைகள் வழிவகுக்குமென்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சரியான தீர்மானங்கள் பொய்களாலும், வஞ்சகத்தாலும், இனவாதத்தாலும், சுயநலன்களாலும் தோற்கடிக்கப்படலாம்.
ஆனால், அவை சரியானவை தான் என்பதை பின்னர் உணரக்கூடியதாகவிருக்கும் என்பதை இன்றைய ஜனாதிபதியில் செயல் ரவூப் ஹக்கீமின் தீர்மானத்தை பிழை கண்டவர்களுக்கு உணர்த்தியிருக்கும்.
No comments