Breaking News

அதிகாரப் பசிக்கு மக்களை பலிக்கடாவாக்காமல் அரசாங்கம் பதவிகளிலிருந்து விலகிச் செல்லவேண்டும் !

நூருல் ஹுதா உமர் 

ஒரு தனி மனிதனுடைய அதிகார ஆசைக்காக நாட்டு மக்கள் பலியாகிப் போவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்த கட்டமாக சகல வளமுமிக்க இந்த நாடு சோமாலியாவைப் போல் பட்டினிச்சாவை எதிர் கொள்ளவிருக்கிறது. இதனை உணர்ந்து அதிகாரப் பசிக்கு மக்களை பலிக்கடாவாக்காமல் பதவிகளிலிருந்து விலகிச் செல்லுமாறு அரசை வேண்டுகிறேன் என பிரபல தொழிலதிபரும், சமூக செயற்பாட்டாளருமான உதவும் சிறகுகளின் பணிப்பாளர் முத்தலிப் நௌசாட் தெரிவித்தார். 


நாட்டுநடப்புக்கள் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, பிழையான அரசியல் முன்னெடுப்புக்கள், உச்சகட்ட அதிகார துஸ்பிரயோகம், இனவாத நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்டு அழகான இலங்கை தீவின் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைத்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் பல்லாயிரக்  கணக்கான மக்கள் விலைவாசி உயர்வினால் வறுமையில் வாடுகிறார்கள். உணவின்றி தவிக்கிறார்கள் இவை அனைத்தையும்  இந்த நாட்டினுடைய இன்றைய இக்கட்டான சூழ்நிலைக்கு காரணமான இனவாதிகளும், பொறுப்பற்ற இந்த ஆட்சியாளர்களுமே பொறுப்பெடுக்க வேண்டும்


நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு இன்மை விலைவாசி உயர்வு போன்ற மிக மோசமான பொருளாதார  நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டு  இன்னல் படுவதற்கு முக்கிய காரணம் இந்த இனவாத போக்கு கொண்ட ஆட்சியே என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் உதவுவதற்கு மறுக்கின்றது. இந்நிலை தொடராமல் மக்கள் நிம்மதியாக வாழ இந்த நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




No comments

note