இரண்டு கோடி ரூபா மக்கள் வரிப்பணமும் பொங்கி எழுந்த பொன்பரப்பி மக்களும்
கடந்த வெள்ளிக்கிழமை 21ஆம் திகதி கரைத்தீவு கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட கரைதீவு வைத்தியசாலையை திறந்து தருமாறும், அதற்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு வேண்டி கவனயீர்ப்பு பேரணி ஒன்று கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த இந்த பேரணியை பொன்பரப்பி சிவில் அமைப்பு ஏற்பாடு செய்ததுடன், இப்பேரணியில் பாதிக்கப்படும் சேராக்குழி மற்றும் கரைத்தீவு மக்கள் பலர் பங்குபற்றியதோடு, சர்வ மத தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் இரண்டு கோடி ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்ற சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை, மூன்று வருடங்களாக எந்த வித தயக்கமும் இன்றி வெறும் பாழடைந்த கட்டிடமாக இருப்பதை அவசரமாக வைத்தியர் ஒருவரை நியமிப்பது மூலம் மக்கள் பாவனைக்கு அவசரமாக வழங்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பேரணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தார்கள். சுகயீனம் ஏற்பட்டவர்களை குணப்படுத்துவதற்காக கிராம மக்கள் 10 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கின்ற வண்ணாத்திவில்லு வைத்தியசாலைக்கு அல்லது 40 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கின்ற புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டி இருப்பது கவலைக்குரிய விடயமாகும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு பேரணியில் எதிர்கால தலைவர்கள் என்று சமூகம் பார்க்கின்ற இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு அரசாங்கம் இவ்விடயத்தை அவசரமாக செய்து தரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இஷாம் மரிக்கார்
No comments