தனி மனித நிர்வாகமும் தவிக்க விடப்பட்டிருக்கும் கல்முனை பாரம்பரிய அடையாளமும்.
கல்முனையில் வாழ்ந்த எம் முன்னோர்கள் பள்ளிவாசல்களுக்கு தமது சொத்துக்களை நன்கொடை எனும் வக்பு செய்து அவற்றை பாதுகாத்தனர் ஆனால் பிற்கால நிர்வாகத்தினர் அவற்றில் கவனம் செலுத்தாது பாழடைய விட்டிருக்கும் பல விடயங்களில் ஒரு விடயம் பற்றிய பதிவே இதுவாகும்.
கல்முனை முஹியித்தீன் ஜும்மா பள்ளிவாசல்சொத்தும் பராமரிப்பும்
இப்பள்ளிவாசல் நீண்ட கால வரலாற்றை கொண்ட ஒரு புனித இடமாகும். இப்பள்ளிக்கு அக்கால குடிவழி மரபைச் சேர்ந்த ஊர் மக்களும் பள்ளி மரைக்காயர் களும் பல கோடி சொத்துக்களை அன்பளிப்பு செய்து தமது பக்தியை வெளிப்படுத்தினர். இதன்படி 78 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் காணிகளும் அதேபோல் கடை வளவு. வீடு வளவு. போன்ற பல சொத்துக்களையும் வழங்கியுள்ளனர் இவ்வாறான சொத்துக்களையும். அடையாள ஆவணங்களையும் பிற்காலத்தில் வந்த மரைக்காயர்கள் பராமரித்ததுடன் பள்ளிவாசல் தலைமை மரைக்காயர்களாக இருந்தோர் தமது சொந்த காணிகளை பள்ளிவாசல்களுக்கு வழங்கி வருகின்ற ஒரு நீண்ட மரபும் இங்கு காணப்பட்டது.
அதாவது பள்ளிவாசலை நிர்வகிக்கின்ற பிரதான மரைக்காயர்கள் தமது சொந்த சொத்துகளில் சிலவற்றை பள்ளிவாசல்களுக்கு அன்பளிப்புச் செய்து தமது பக்தியையும் பள்ளி மீதான ஆர்வத்தையும் முன் வைத்ததால் அந்த தகைமை அவர்களை பிரதான நம்பிக்கையாளர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு ஒரு தகுதியாகவும் மக்களால் கருதப்ப்பட்டது
ஆனால் இப்பள்ளிக்கு 2007 ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகத்தை தொடர்ந்து இந்த பள்ளிவாசலில் பல வருடங்களாக நிர்வாகம் இல்லாத தனிமனித ஆட்சி காணப்படுகிறது தமது சொந்த செத்துக்களை பாதுகாப்பதற்காக பள்ளிவாசலை பாழடைய விடும் நிலை காணப்படுகிறது.. இதனால் இப்பள்ளிவாசலும் அதனோடு தொடர்புடைய ஊரும் மக்களும். பல சீரழிவுகளை எதிர் நோக்கி வருகின்றனர்.
ஊருக்கு விளக்கு ஏற்றல்
முன்னைய காலத்தில் கல்முனை பிரதேசம் இருள் சூழ்ந்த இடமாக காணப்பட்டது இதனால் பள்ளிவாசல்களிலும் பள்ளிவாசலை சுற்றி உள்ள ஊர் பிரதேசங்களிலும் விளக்குகளை ஏற்றுவதற்காக பல விளக்கு கம்பங்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளால் வக்பு செய்யப்பட்டன.
அதேபோன்று அக்காலத்தில் காணப்பட்ட கல்முனை சுகாதார சபையின் (1897) உதவியுடனும் பல கம்பங்கள் நடப்பட்டன இவ்வாறான வீதி விளக்கேற்றல் எண்ணை செலவுக்கும். பள்ளி வாசலுக்கான விளக்கேற்றும் எண்ணை செலவுக்கு மாக பலர் தமது காணியை வழங்கியிருந்தனர்
அந்த வகையில் இலவ குடிமைப் சேர்ந்த மீராப் பிள்ளை அஸனார் லெப்பை மரைக்காயர் அவர்களினால் வழங்கப்பட்ட 1891/1904 உறுதி இலக்கம் உடைய கடைவளவு வருமானம் எண்ணெய் விளக்கு ஏற்றுவதற்கானது என ஆவணங்களில் கூறப்படுகிறது. அந்த விளக்கை ஏற்றுவதற்கான கம்பங்களும் ஊர் மக்களால் நன்கொடை செய்யப்பட்டன.
கல்முனை சுகாதார சபை
1897ல் கல்முனை சுகாதார சபை (Sanitary Board) என்ற தகுதியை பெற்றது பிரித்தானிய அரசினால் வெளியிடப்பட்ட 1897 பெப்ரவரி 19 ம் திகதியன்றைய 6459ம் இலக்க வர்த்தமானியில் அதன் எல்லைகள் தெளிவாக உள்ளன.
இந்த சுகாதார சபையின் உதவியுடனும் நம்முன்னோர்கள் ஊரில் அதிக மக்கள் கூடும் இடங்களிலும் குறிப்பாக பள்ளிவாசல்களில் இவ்வாறான விளக்கு கம்பங்களை தமது சொந்த செலவில் செய்து அவற்றை பள்ளிவாசலுக்கு வக்பு செய்து ஊரை அழகுபடுத்தியும் பராமரித்தும் வந்தனர்
இன்றைய நிலை.
எமது முன்னோர் கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு மேலாக தமது சொந்த பணத்தை செலவு செய்து உருவாக்கிய இந்த விளக்கு கம்பங்கள் இன்று கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலின் தனிநபர் நிர்வாகத்தினால் மிக மோசமான முறையில் குப்பையில் வீசப்பட்டு காணப்படுகின்றது
இது பற்றி ஊரில் உள்ள புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் பலமுறை கூறியும் குறித்த தனிமனித நிர்வாகம் இதனை கவனத்தில் கொள்ளவில்லை மட்டுமல்ல இதனை இதன் பெறுமானம் தெரியாத ஓர் அசட்டையான தலைமைத்துவமாகவும் காணப்படுவது மிகவும் மன வேதனைக்கு உரியது ஆகும்.
ஆனாலும் இதில் ஒரு விளக்கு கம்பம் மரைக்காயர் ஹபீப் முஹம்மது அவர்களது காலப்பகுதியில் ஓர் நினைவு கம்பமாக பள்ளிவாசலின் தென் பகுதியில் நடப்பட்டதோடு ஏனையவை பாதுகாப்பாக வைக்கப்பட்டன. ஆனால் பின்னர் வந்த இடைக்கால தனி மனிதர்களுக்கு அந்த இவ் விளக்கு கம்பங்களின் பெறுமானமும் ஊரின் வரலாறும் தெரியாத அசமந்த நிலை காணப்படுகிறது. தமது தனிப்பட்ட நிறுவனத்தில் அதிக அக்கறை கொண்டதனால் பொதுச் சொத்தான புனித விடயங்கள் சீரழிக்கப் படுகின்றன இதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தொல்லியல் அடையாளம்
குறித்த பள்ளிவாசலில் பல்வேறு வகையான மர வேலைப்பாடுகள் மிம்பர்கள் கதவுகள். சித்திர வேலைப்பாடுகள் மற்றும் ஏனைய தொல்லியல் அடையாளங்கள் காணப்பட்டன அவை பிற்காலத்தில் வந்த வரலாற்று அறிவற்றவர்களால் இல்லாமல் ஆக்கப்பட்டதன் விளைவை நாம் இன்று அனுபவிக்கின்றோம்
அந்தவகையில் 200 வருடங்களுக்கு மேற்பட்ட புராதனத்தை கொண்ட இந்த விளக்கு கம்பங்கள் மிக முக்கியமான ஒரு தொல்லியல் அடையாளம் மட்டுமல்ல எம் சமூகத்தின் மிக பாரம்பரியமிக்க வரலாற்றுத் தடயமாகவும் காணப்படுகிறது . இவற்றில் சிலவற்றை தனிமனித நிர்வாகம் இரும்புக் கடைக்கு விற்று விட்டதாகவும். இன்னும் சில இன்றும் பள்ளிவாசல் குப்பைமேட்டில் வீசப்பட்டுக் கிடப்பதையும் காண முடியும்.
ஊர் மக்களுக்கு.
இவ்வாறான வரலாற்று தடங்களை கவனமாகவும் நிதானமாகவும் கையள வேண்டியது புத்தியுள்ள நிர்வாகத்தின் பணியாகும். மாறாக அவற்றை குப்பையில் வீசுவது என்பது எமது தேசத்திற்கும் எமது சமூகத்துக்கும். இருப்புக்கும். வக்பு செய்த எம் முன்னோருக்கும் செய்கின்ற மிகப் பாரதூரமான குற்றமாகும்.
எனவேதான் கல்முனை மாநகர சபை அல்லது மாகாண தொல்லியல் திணைக்களம் மற்றும் ஊர் சமூக ஆர்வமிக்க அமைப்புகள். இதுதொடர்பான உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஊர் பொதுமக்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் கொடுத்து குறித்த நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன்படி குறித்த தனிமனித நிர்வாகம் இவற்றை மிக அவசரமாக ஒழுங்கு படுத்தி இப் பள்ளிவாசலில் காணப்படும் முக்கிய இடங்களில் அவற்றை வடிவமைத்து காட்சிப்படுத்துவது எமது எதிர்கால சமுதாயத்திற்கான ஒரு வரலாற்று ஆவணமாக அமையும் . இன்றேல் சட்டம் தன் கடமையை செய்ய சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். தனி மனித நிர்வாகம் இதனைச் செய்யுமா?? சட்டம் தலையிடுமா?? தீர்வு ஊர்மக்கள் கரங்களில் உள்ளது.
முபிஸால் அபூபக்கர்.
சிரேஷ்ட விரிவுரையாளர்
பேராதனை பல்கலைக்கழகம்
No comments