Breaking News

இனவாத, மூர்க்கத்தமான அரசிடமிருந்து முஸ்லிம் தலைவர்கள் மக்களை பாதுகாக்க வேண்டும்

இந்த நாட்டின் ஜனாதிபதியும், இந்த நாடும் ஆட்சிபீடமேறிய நாளிலிருந்து முஸ்லிங்களுக்கு எதிரான பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகிறார்கள் அதன் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுடன் மரணித்ததாக அறிக்கையிடப்பட்ட ஜனாஸாக்களை தயவு தாட்சணையின்றி எரித்தார்கள், முஸ்லிங்களின் அபிலாஷைகளை புரிந்துகொள்ளாமல் நூற்றாண்டு கடந்து அமுலில் இருந்து வந்த முஸ்லிங்களின் தனியார் சட்டங்களில் கைவைத்தார்கள், மாடறுப்பு தடை கொண்டுவந்தார்கள், எழுத்தணியில் பிரச்சினையை உருவாக்கினார்கள். போதாக்குறைக்கு இந்த நாட்டின் ஒற்றுமையை சீரழித்து கொண்டிருப்பவர் மட்டுமின்றி சிங்கள மக்கள் உட்பட  நாட்டின் சகல மக்களின் வெறுப்பையும் பெற்ற ஒருவர் அல்லாஹ்வை இகழ்ந்து பேசிக்கொண்டிருந்த கால கட்டத்தில் நாட்டின்  "ஒரே நாடு ஒரே சட்டம்" எனும் முக்கிய செயலணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். 


இவற்றையெல்லாம் நோக்கும் போது இந்த அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தை தனக்கு எதிரான சமூகமாக பிரகடனம் செய்துள்ளது என்பதை நாம் நன்றாக அறிந்து கொள்ளலாம். துரதிஷ்டவசமாக முஸ்லிங்களும்- இந்த அரசாங்கத்திற்கும் உள்ள கசப்புணர்வை பயன்படுத்தி அரசுக்கு சார்பான தமிழ் கட்சிகளும், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், மாவட்ட  அபிவிருத்திக்குழு தலைவர்களான சி. சந்திரகாந்தன், அங்கஜன் ராமநாதன் போன்றவர்கள் முஸ்லிம் மக்களின் உரிமைகளையும், பாரம்பரியமிக்க இடங்களையும் பறிக்க வேண்டும் என்ற ஆசையில் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படுவதை அறிகிறோம். 


உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக நல செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் முஸ்லிங்களுக்கு இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் நுணுக்கமாக சிந்திக்க வேண்டும். முஸ்லிங்களை அரசுக்கு விரோதமானவர்களாக காட்டி தமது நிகழ்ச்சிநிரல்களை செய்ய பல்வேறுதரப்பினரும் சதிவலைகளை பின்னிக்கொண்டுள்ளனர். அவர்கள் விரித்துள்ள இந்த வலையில் முஸ்லிம் சமூகம் கண்களை மூடிக்கொண்டு விழுந்து விடாமல் வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் நல்லிணக்கமாக பேசி முஸ்லிங்களின் பூர்விக காணிகள், எல்லை நிர்ணய விடயங்கள், உரிமை சார்ந்த விடயங்களுக்கான தீர்வை பெறவேண்டும். இதற்காக அவசரப்பட்டு கோபமுற்று ஆவேசமாடைந்தவர்களாக இல்லாமல் சரியான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .


கிழக்கு முஸ்லிம் மேம்பாட்டு பேரவை





No comments