Breaking News

அரசாங்கத்திற்கும் அதன் பங்காளி கட்சிகளுக்குமிடையில் பிரச்சினையா?

அரசாங்கத்திற்கும் அதன் பங்காளி கட்சிகளுக்குமிடையே முரண்பாடுகள் என்பது இன்று நாளாந்த செய்தியாகி விட்டது. ஊடகங்களில் தொடராக செய்திகள் வந்த  வண்ணமே உள்ளன. 


தற்போதைய நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸ தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வந்தபோது இந்த பங்காளி கட்சிகளின் முரண்பாடு வெளியே தெரிய ஆரம்பித்தது. 


பஸில் ராஜபக்ஸவின் பாராளுமன்ற வருகை தங்கள் செயற்பாட்டிற்து இடைஞ்சலாக அமையுமென இப் பங்காளிகள் கருதின. 


அவருடைய பாராளுமன்ற வருகையை பங்காளிகள் தடுக்க முயன்றும் அது  முடியாமல் போய்விட்டது. 


இன்று பங்காளி கட்சிகள் அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட முடியாவிட்டால் அரசை விட்டு வெளியேறுமாறு  பகிரங்கமாக பொதுஜன பெரமுனவின் பேச்சாளர்கள் கூறும் அளவுக்கு இம் முரண்பாடு கூர்மை அடைந்துள்ளன.


நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அரசாங்கத்தின் பிரதான கட்சியான  பொதுஜன பெரமுனவின்  செயலாளர் சட்டத்தரணி சாகர  காரியவாசம் "அரசின் பங்காளியாக இருந்து கொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்கட்சி போன்று

 விமர்சிக்கும் பங்காளிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம்" என தெரிவித்துள்ளார்.


அண்மையில் பிரதமர்  மஹிந்த சலூன் கதவு திறந்தே உள்ளது  என்றார்.


சீன சார்பு  அரசாங்கமாக தன்னை வெளிப்படுத்திய அரசாங்கத்தின் அளவுக்கு மீறிய செயற்பாடுகள் காரணமாக பல நெருக்கடிகளை அரசு எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. 


சீனாவின் கடன் பொறிக்குள் சிக்குண்டுள்ள அரசாங்கம் பல வகையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையில் அந்நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்கும் வேலைத்திட்டத்துடனேயே பஷில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன் பிரதமரிடமிருந்த நிதி அமைச்சும் அவருக்கு கைமாற்றப்பட்டது.


நாட்டின் வெளிநாட்டு ஒதுக்குகள் மிகவும் குறைந்துள்ள நிலையில் சீனாவிடம் நிதித் தேவையைக்காக கையேந்தும் நிலையை மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தை நிதி அமைச்சர் படிப்படியாக நகர்த்தி வருகின்றார். உலக வங்கி மற்றும் இந்தியாவிடமிருந்து கடன் பெறுவதில் வெற்றியும் கண்டுள்ளார்.


மேற்சொன்ன வேலைத்திட்டத்திற்கு ஏற்ப அமெரிக்காவிடமிருந்து முதலீட்டை பெற முயற்சிக்கும் வழியாக கெரவலபிட்டிய யுகதனவிய மின் நிலையத்தின் நாற்பது வீதப் பங்குகள் அமெரிக்க கம்பனியொன்றுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் நிதி அமைச்சர் இறங்கியுள்ள நிலையில் இதற்கெதிராக பங்காளி கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. (கெரவலபிட்டிய மின் பங்கு தொடர்பில் பிரிதாக நண்பர்களுக்காக எழுதவுள்ளேன் )


மின்சாரத்துறைக்கு பொறுப்பான அமைச்சரான உதயகம்மன்பில இந்த  அமெரிக்க உடன்படிக்கையில் தான் ஒருபோதும் கைசாத்திடமாட்டேன் என்கின்றார்.


பங்காளி கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் கோரிய போதும் பிரதமர் அல்லது நிதி அமைச்சரை சந்தித்து பேசுமாறு கூறி ஜனாதிபதி மறுத்து விட்டார்.


சீன சார்பு பங்காளிகளுக்கு மின்  நிலையப் பங்குகள் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டமை பிடிக்கவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. 


பங்காளி கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி,கம்மன்பிலவின் பிலித்துரு ஹெல உறுமய மற்றும் வாசுதேவ நாணயக்கார,திஸ்ஸ விதாரன அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் அடிக்கடி கூடி தமக்குள் சந்தித்து பேசி வருகின்றனர்.


உண்மையில் இந்தப் பங்காளி கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமா?

இல்லை  என்பதே அதன் விடை.


அப்படி என்றால்  ஏன் இந்த முரண்பாடு 

நாட்டில் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கத் தொடங்கி உள்ளனர். அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பு தமது செல்வாக்கையும் மக்கள் மத்தியில் இல்லாமலாக்கி விடும் என்ற பயத்திலேயே பங்காளிகள் பதறுகின்றார்களே தவிர நாட்டின் மீதான பற்றினால் அல்ல என்பதே உண்மை. 


யூஎல்எம்என் முபீன்



 




No comments