Breaking News

வேறுபாடுகளுக்கு அப்பால் முன்னாள் அமைச்சர் ரிஷாத்தை வரவேற்கிறார் - எதிர்கால பாராளுமன்ற வேட்பாளர் இஷாம் மரிக்கார்

அரசியல் ரீதியாகவும், நமது மண்ணின் அரசியல் உரிமைகள் சம்பந்தமாகவும் பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்த போது ஒரு சகோதரனாக எமக்கும் கொஞ்சம் வலித்தது. பாராளுமன்றத்தில் அவருக்காக அவரே குரல்கொடுத்த போது பாராளுமன்ற தேர்தல் ஒன்றாக உழைத்தவர்கள் என்ற வகையிலும், பாராளுமன்ற மரபுகளை அறிந்தவர்கள் என்ற வகையிலும் எங்களுக்கு வலித்தது. என புத்தளம் தூய தேசத்திற்கான இயக்கத்தின்  தலைவர் எஸ்.எம். இஷாம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.



மேலும் அவர் தனது அறிக்கையில்.....


இந்த கைது அரசியல் பழிவாங்கல் என்று தெரிந்தும், அவற்றையெல்லாம் வருகின்ற தேர்தல்களில் வாக்குகளாக மாற்றிவிடுவார் என்ற ஒரு கணக்கோடு நாம் இருந்தாலும், அவரின் குடும்ப உறுப்பினர்களை கைது செய்த போது அரசியல்வாதி என்ற வகையில் அது எம் உணர்வுகளை தாக்கியது.


அரசியலில் நிரந்தர எதிரி என்று ஒருவர் இருக்கமுடியாது என்ற நிலையில் நாம் அவரை நிரந்தர அரசியல் எதிரியாக கணித்துவைத்த போதும், எமக்கு வலித்தது என்றால், அவரின் கட்சியில் அங்கம் வகித்து, அவரின் பணத்தில் அபிவிருத்திகளை செய்து, அவரின் தொண்டர்களை தன் வேலையாட்களாக நியமித்து, அவரின் கட்சியின் உறுப்பினராக கட்சிகளோடு ஒப்பந்தகளோடு இணைந்து, தேர்தலில் வெற்றியடைய அவரின் மேடைகளையும் பேச்சுக்களையும் பாவித்தவர்களுக்கு எவ்வாறு வலித்திருக்கும் என்று நாம் நம்புகின்றோம். அந்த உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.


ஆனாலும் இதையெல்லாம் உணராமல், எந்த வித கவலையும் இல்லாமல் இந்த அரசியல் நாடகத்தை அரங்கேற்றும் நபர்களோடு ஒட்டி உறவாடி, எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தேசிய ஊடகங்களில் பேசி, அவரில்லாத பொது கட்சியின் தலைமை பதவிக்கு இலக்குவைத்து, அவருடைய கஷ்டமான நேரங்களில் அவரோடு இருக்காமல் துரோகம் செய்த செயல்களை எம்மால் கூட தாங்கிக்கொள்ள முடியாத நேரம் அவர் எவ்வாறு இவர்களை கையாள்வார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டி இருக்கிறது.


பல துயரங்களை தாண்டி இன்று பிணையில் விடுதலையாகி இருக்கும் முன்னாள் அமைச்சர் சகோதரர் றிசாத் பதியுதீன் அவர்கள் தன் குடும்பத்தோடு சந்தோசமாக நாட்களை செலவு செய்வதற்கும், இறைவனோடு நெருங்கி எதிர்வரும் நாட்களில் வரவிருக்கும் சவால்களை நல்லமுறையில் எதிர்கொள்வதற்கும் இறைவனை பிரார்த்திக்கின்றோம். 


அதே நேரம் வருகின்ற 24ஆம் திகதி சகோதரர் ஆசாத் சாலி அவர்களும் விடுதலை செய்யப்படுவார் என்று நாம் நம்புகின்றோம், அவருடைய விடுதலைக்காகவும் நாம் பிராரித்திக்கின்றோம். துயர் நீங்கி சமூகத்தின்  குரல்களாக இருவரின் குரல்களும் அரசியல் களத்தில் மீண்டும் அதே மாதிரி ஒளிக்க பிரார்த்திக்கின்றோம்.


இந்தப்பதிவு இடம் பெயர்ந்தவர்களை திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது அவர்களின் வாக்குகளை இலக்கு வைத்தோ அல்லது அடுத்த தேர்தலில் அவரின் கட்சியில் வாக்கு கேற்பதற்காகவோ எழுதப்படவில்லை  என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். நமக்கும் அவருக்கும் அவருடைய கட்சிக்கும்  இடையே இருக்கும் அரசியல் முரண்பாடு நிரந்தரமானது என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.


இஷாம் மரிக்கார் 

தலைவர்

தூய தேசத்திற்கான இயக்கம் புத்தளம்

(புத்தளத்தில் இளம் அரசியல்வாதி)





No comments

note