துணிச்சல் மிக்க செயல் வீரன் - பெருகுவட்டான் தாலிப் அவர்களின் மறைவுக்கு அஷ்ஷெய்க் பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அனுதாபம்
தாலிப் மாமாவின் மரணசெய்தி கனதியான வலியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒன்றன் பின் ஒன்றாக சமூகப் பணியாளர்களை இழக்கின்ற நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. இவற்றை கிராமிய சமூக அமைப்புகள் எவ்வாறு ஈடுசெய்யும் என்று சொல்ல முடியாது.
தாலிப் மாமா சமுகத்துடன் பின்னிப் பிணைந்து, கலந்து வாழ்ந்தவர். சமுதாய மேம்பாட்டிற்காக தான் அறிந்துகொண்ட வழிகளினூடாகவும் பெற்றுக்கொண்ட வழிகாட்டலினூடாகவும் உழைத்தவர். சமுதாயப் பணியில் தனது பங்களிப்பை வழங்குவதற்கு பள்ளிவாயலையும் பாடசாலையையும் செயற்களமாக அமைத்துக் கொண்டவர்.
பெருக்குவற்றான் மஸ்ஜிதின் நிர்வாக மாற்ற ஒழுங்குகளைப் பின்பற்றி மூன்று தடவைகள் தலைமைப் பொறுப்பை சமூகம் அவருக்கு வழங்கியது. கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் தனது சமூகத்திற்கு பள்ளிவாயலினூடாக தொண்டனாக கருமமாற்றியுள்ளார்.
அதுபோலவே பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்தியிலும் ஆளணி விருத்தியிலும் தொடர்ச்சியாக பங்களிப்பினை நல்கி வந்துள்ளார். பாடசாலை அபிவிருத்திக் குழுவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது பங்களிப்பு தொடராக இருந்து வந்தது என்பதற்கு ஊரார்கள் சான்று பகர்வார்கள்.
தாலிப் மாமா துணிச்சல் மிக்கவர். எதிலும் முன்னணி செயல் வீரனாக இருப்பவர். எந்தவொன்றையும் நேரடியாக எதிர்கொள்ளும் திராணியுடையவராக காணப்பட்டார். எடுத்துக் கொண்ட அல்லது தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட விவகாரங்களில் முடிவை அடையும் வரை கடுமையாக உழைப்பவர். ஒத்துழைப்பை சமூகம் வழங்கினால் பெற்றுக்கொள்வார். வழங்காவிட்டால் அதுபற்றி அலட்டிக்கொள்ளமாட்டார்.
அடுத்தவர்களுக்கு தனது செயலாலும் வார்த்தைகளாலும் உற்சாகமளிப்பார். துணிச்சலையும் மனவலிமையையும் வழங்குவார். நேரத்தையும், ஆற்றல்களையும் சமுகத்திற்கு செலவளிப்பது போலவே தனது செல்வத்தையும் சமூக நலப் பணிகளுக்கு செலவிடுவார்.
அல்லாஹ் அவரது சிறிய பெரிய பாவங்களையெல்லாம் மன்னித்து அருள்புரிவானாக! அவர் ஆற்றிய நற்கருமங்கள் அனைத்தையும் பொருந்திக்கொள்வானாக. அவனது ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனபதியில் நுழையச்செய்வானாக!
அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம் பஸ்லுல் பாரிஸ் (நளீமி)
No comments