வல்லரசுகளின் ஆதிக்கத்துக்குள் ஆப்கானிஸ்தான். போராட்ட குழுக்களை ஒன்றிணைப்பதில் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியும், ரஷ்ய படைகளின் வருகையும்.
மூன்றாவது தொடர்......
ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர் நூர் முஹம்மது தராக் அவர்கள், சோவியத் யூனியனின் கொமியுனிச கொள்கையினை ஆப்கானில் நடைமுறைப்படுத்தியதுடன், நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டன. இதனால் ஆப்கானின் இஸ்லாமிய தலைவர்களும், மக்களும் அரசுக்கெதிராக நாடுமுழுவதும் போராட்டங்களை நடாத்தினார்கள்.
பழம் நழுவி பாலில் விழுந்ததுபோன்று இப்படியான ஒரு சந்தர்ப்பத்துக்காக நீண்டகாலமாக காத்துக்கொண்டிருந்த அமெரிக்காவின் CIA யினர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI யின் உதவியுடன் செயலில் இறங்கினார்கள்.
அரசுக்கு எதிராக நாடு முழுவதிலும் போராட்டம் நடாத்தியவர்கள் எவரும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பினை கொண்டிருக்கவில்லை. கிராமங்களிலும், நகரங்களிலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும், மாகாணங்களிலும் வெவ்வேறு குழுக்களாகவே போராட்டம் நடாத்தினார்கள்.
இந்த போராட்ட குழுக்களுக்கிடையில் ஒருங்கிணைப்போ, வழிகாட்டுதலோ, தேசியரீதியிலான தலைமைத்துவமோ இருக்கவில்லை. இவர்கள் அனைவரையும் ஒரே தலைமையின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்ட அமைப்பாக உருவாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருந்தது.
இது ஒரு பாரிய சவால் நிறைந்த பணி என்று தெரிந்திருந்தும், சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானியர்கள் மூலமாக தனது இலக்கை அடையும் நோக்கில், அந்த பணியை அமெரிக்கா தனது பணத்தினாலும், அதிகாரத்தினாலும், தந்திரோபாயத்தினாலும் மேற்கொண்டது.
போராட்டக்காரர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு ஆயுதப்பயிற்சியும், ஆயுதங்களும், பணமும் வழங்கியதன் மூலம் சோவியத் ரஷ்யாவின் கைக்கூலியாக இருந்த ஆட்சியாளர் நூர் முகம்மது தராக்கின் ஆட்சிக்கு எதிராக கலகத்தை தூண்டியது.
நாளுக்குநாள் வன்முறைகள் வெடிக்கத்துவங்கியதும் ஆட்சி ஆட்டம் கண்டது. இதனால் வேறுவழியின்றி தனது ஆட்சியை பாதுகாப்பதற்காக நூர் முகம்மது தராக் சோவியத் யூனியனின் உதவியை நாடினார். இதனால் சோவியத் யூனியனின் படைகள் 1979.12.24 அன்று ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது.
ஆப்கானிஸ்தானில் யார் புரட்சி செய்தாலும் இறுதியில் ஆட்சி அமைப்பவர்கள் தன்னுடன் நட்பாகவே இருப்பார்கள் என்ற காரணத்தினால், அவ்வப்போது புரட்சிகள் நடைபெறுகின்றபோது அதில் சோவியத் யூனியன் தலையிடுவதில்லை.
ஆனால் இந்த புரட்சி வித்தியாசமானது. அதாவது புரட்சி செய்கின்ற குழுக்களுக்கு ஆட்சியை மட்டும் கைப்பற்றுவது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக இஸ்லாமிய அறிஞர்களின் அமெரிக்க சார்பு கொள்கையினால் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் கைக்குள் சென்றுவிடும், அவ்வாறு சென்றால் தனக்கு ஆபத்து என்று கருதியதனாலேயே அதனை தடுக்கும்பொருட்டு சோவியத் யூனியன் அவசரமாக தனது படைகளை ஆப்கானுக்குள் அனுப்பியது.
சோவியத் யூனியனுக்கு எதிரான சக்திகளின் ஆதிக்கம் அதிகமானால் தனது படைகளை ஆப்கானுக்குள் சோவியத் யூனியன் அனுப்பும் என்று அமெரிக்கா முன்கூட்டியே எதிர்பார்த்தது. தாங்கள் எதிர்பார்த்ததுபோன்று நடைபெற்றதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் உள்ள சோவியத் படைகளை ஆப்கான் போராளிகள் மூலமாக தாக்கி அழிப்பதற்கு திட்டமிட்டது.
இதற்காக “இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய கொள்கைக்கு விரோதமான கொமியுனிஸ் நாடு கைப்பற்றி உள்ளதுடன், அங்கு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் கொமியுனிச சித்தாந்தத்தினை பரப்புகின்றது” என்ற பிரச்சாரத்தின் மூலம் முழு முஸ்லிம் உலகத்தையும் சோவியத் யூனியனுக்கு எதிராக திசைதிருப்பியது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு சர்வதேச ஊடகங்கள் பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கியதுடன், சவூதி அரேபியாவும், பாகிஸ்தானும் முழுமையாக உதவி செய்தது. இந்த பிரச்சாரத்தின் பயனாக ஆப்கானில் அமெரிக்கா மேற்கொண்ட அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி அடுத்த தொடரில் பார்க்கலாம்.
தொடரும்............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


No comments