Breaking News

தாலிபான்களுடைய வெற்றி ஆபத்தானது; இலங்கை முஸ்லிம்கள் அவதானமாக இருப்போம்!

20 வருடங்களுக்கு பின்னர் - மீண்டும் தாம் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றி - யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்துவிட்டதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.


இது ஒரு நல்ல சமிக்ஞையாக பார்க்க முடியவில்லை. அபசகுணமாகவே தோன்றுகிறது. உலக அதிகார சமநிலையில் மேற்கத்திய விளையாட்டின் ஒரு பகுதியாக இதனை பார்க்க முடிகிறது.


இப்படித்தான் அல்கைதா இயக்கத்தை உருவாக்கினார்கள். இப்படித்தான் அரபு வசந்தத்தை ஒரு கட்டத்திற்குப் பின்னர் பயன்படுத்தினர். இப்படித்தான் ISIS யை பலப்படுத்தினர். இப்போது தாலிபான்களை திறந்துவிட்டுள்ளனர்.


விசேடமாக சீனா, தஜிக்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், துர்க்மனிஸ்தான், ஈரான் மற்றும் பாகிஸ்தான் போன்ற அனு சக்தி நாடுகளை எல்லையாகக் கொண்ட ஆப்கானிஸ்தானை - சாதாரணமாக தலிபான்களிடம் விட்டுக்கொடுப்பது என்பதை நேர்மையான நோக்கத்தோடு பார்க்க முடியாது.


குறிப்பாக தலிபான்களுடைய கையோங்குவது - அந்த பிராந்தியத்தில் நேரடியாக தனது தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு ஸ்திரத்தன்மையை பாதிக்கின்ற விடயமாக அமையும் என்பதில் இந்தியா மிகவிழிப்பாக இருக்கும். சீனா மற்றும் பாகிஸ்தானின் தூண்டுதல் இதற்கு உந்துதலாக அமையும் என்பதையும் இந்தியா கணிக்கத் தவறாது.


இதன் விளைவு இலங்கை முஸ்லிம்களிலும் எதிரொலிக்கலாம். இந்திய - இஸ்ரேலிய நெருக்கம்; இதற்கு பங்களிப்பு செய்யலாம். ஈஸ்டர் குண்டு வெடிப்பினைப் போன்ற நிகழ்வுகள் இங்கும் அரங்கேறலாம். அதற்கு சஹரானை போன்ற சில முட்டாள்களை முஸ்லிம் சமூகத்திலிருந்து பயன்படுத்தவும் செய்யலாம்.


ஏலவே, 2001களில் பௌத சின்னங்களை தலிபான்கள் உடைந்தெறிந்து - அதனை சாதனையாக ஊடகங்களில் காட்டி - இலங்கையிலும் பௌதர்களின் உணர்வுகள் தூண்டப்பட்ட அனுபவமும் நமக்குண்டு. இவற்றை விரிவாக வெளிப்படையாக எழுதவும் முடியவில்லை.


எனவே, தாலிபன்களின் வெற்றி நமக்கு ஆபத்தானதாக அமைய சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. அதனால், இலங்கை முஸ்லிம்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எதிர்வினைகளை இப்போதிருந்தே எதிர்கொள்ள தயாராக வேண்டும்.


ஏ.எல்.தவம் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் .




No comments