Breaking News

புதிய ஆயுதங்கள் பரீட்சிக்கப்படும் களமாக ஆப்கான். சோவியத் விமானப்படையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்திய போராளிகள். வெளியேறிய சோவியத் படைகள்

ஐந்தாவது தொடர்........

ஆப்கான் போராட்டத்தில் முஜாஹிதீன்களுக்கு பாரிய சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்தது சோவியத் விமானப் படைகளின் வான் தாக்குதலாகும். சோவியத்தின் தரைப்படையினர்களை மட்டுமல்லாது, விமானப்படைகளையும் அழித்தொழிப்பதற்கு அமெரிக்கா அப்போதைய நவீன ஆயுதங்களை வழங்கியது. 


நாங்கள் செய்ய வேண்டிய வேலையை முஜாஹிதீன் போராளிகள் மிகத் திறமையாகவும், மூர்க்கமாகவும் மேற்கொள்கிறார்கள் என்ற மகிழ்ச்சியில் அமெரிக்கா மிக வேகமாக செயற்பட்டது. 


1981 இல் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட “ஸ்டிங்கர்” (FIM-92 Stinger missile) என்னும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பரீட்சித்து பார்க்கும் நோக்கில் முதன்முதலாக ஆப்கான் போராளிகளுக்கே வழங்கப்பட்டது. அத்துடன் இதனை இயக்குவதற்கான பயிற்சியை அமெரிக்க இராணுவ நிபுணர்கள் ஆப்கான் களத்துக்கு சென்று பயிற்சி வழங்கினார்கள்.


ஸ்டிங்கர் ஏவுகணை மட்டுமல்ல அப்போது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அனைத்து புதிய ஆயுதங்களும் ஆப்கான் முஜாஹிதீன்களுக்கும், சதாம் ஹுசைனுக்கும் வழங்கப்பட்டது.  


வல்லரசு நாடுகளானது தங்களால் புதிதாக தயாரிக்கப்படுகின்ற ஆயுதங்களை போர்க்களத்தில் பரீட்சித்து பார்த்தல் அல்லது ஆயுதங்களை பரீட்சிப்பதற்காக போர்க் களங்களை உருவாக்குதல் என்பன சர்வசாதாரணமாகும். 


ஸ்டிங்கர் (FIM-92 Stinger missile) என்னும் விமான எதிர்ப்பு ஏவுகணையானது பாரம் குறைந்ததும், தனிநபர் ஒருவரால் தோளில்வைத்து இயக்கக்கூடியதுமாகும். இதனை வேண்டிய இடங்களுக்கு சிரமமின்றி கொண்டுசெல்ல முடியும். 


இதே காலப்பகுதியில் ஈரான் – ஈராக் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதில் ஈரானை அழிப்பதற்காக தனது முழு வளங்களையும் அமெரிக்கா சதாம் ஹுசைனுக்கு வழங்கியது. அதில் ஸ்டிங்கர் ஏவுகணையும் அடங்கும்.  


பின்னாட்களில் இந்த ஏவுகணை ஐந்து தடவைகள் மேம்படுத்தப்பட்டு உலகின் 29 நாடுகளில் இது பாவனையில் உள்ளது.   


ஆப்கானிஸ்தான் மலைக்குன்றுகளும், மலைத்தொடர்களும் இயற்கையாக அமைந்துள்ள நாடு. கெரில்லா போராளிகளுக்கு மிகவும் சாதகமான சூழல் அங்கு காணப்படுகின்றது. 


உயர்ந்த மலைகளிலும், மலைக்குன்றுகளிலும் பதுங்கியிருந்து சோவியத் விமானங்கள்மீது “ஸ்டிங்கர்” மூலம் ஆப்கான் முழுவதும் பரவலான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதனால் சோவியத் விமானப்படை ஆட்டம் கண்டதுடன், மேலே பறப்பதற்கு அஞ்சியது. இதனால் சோவியத் தரைப்படைகளின் வீரியம் குறைந்தது.  


ஏராளமான விமானங்களும், ஹெலிக்கொப்டர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதனால் சோவியத் யூனியனின் படைக்கட்டமைப்பு பலயீனமடைந்தது.  


1979.12.24 தொடக்கம் 1989.02.15 வரையிலான ஒன்பது வருடங்கள் நடைபெற்ற சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் சுமார் 800 விமானங்களும், ஹெலிக்கொப்டர்களும் முஜாஹிதீன்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சோவியத் சார்பு புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகிறது. ஆனால் இதனைவிட அதிகம் என்றே வேறு தகவல்கள் கூறுகின்றன. 


ஒன்பது வருட யுத்தத்தில் சுமார் முப்பதாயிரம் சோவியத் யூனியன் படைகள் கொல்லப்பட்டதுடன், சுமார் ஐம்பத்தி ஐயாயிரம் படைகள் காயமடைந்தும், ஊனமுற்றதாகவும் தகவல்கள் உள்ளன.   


அத்துடன் 1.5 மில்லியன் வரையிலான ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காணாமல் போனதாகவும், பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது.     


இந்த யுத்தத்தில் தோல்வியடைந்ததனால், ஆப்கானைவிட்டு வெளியேறுவது என்று தீர்மானித்ததுடன், வெளியேறும்போது ஏற்படும் உயிர் சேதத்தை தவிர்ப்பதற்காக முஜாஹிதீன்களோடு 1988 இல் சமாதான ஒப்பந்தத்தை செய்துவிட்டு 1989 பெப்ரவரி மாதம் சோவியத் யூனியனின் இறுதிப்படைப்பிரிவு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. 


இதுபோன்றே தற்போது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானில் தோல்வியடைந்ததனால் தனது இழப்பை தவிர்ப்பதற்காக தலிபான் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியேறுகின்றனர். 


வியட்னாம் போரில் தோல்வியடைந்த அமெரிக்கா எவ்வாறு அவமானப்பட்டதோ, அதேபோன்று ஆப்கானில் சிறு குழுக்களிடம் தோல்வியடைந்ததனால் சோவியத் யூனியன் என்னும் பெரும் வல்லரசு அவமானப்பட்டது. பின்னாட்களில் சோவியத் யூனியன் பல நாடுகளாக பிரிவதற்கும் இந்த தோல்வியே பிரதான காரணமாக அமைந்தது. 


சோவியத் யூனியனின் வெளியேற்றத்துக்கு பின்பு ஆப்கான் மற்றும் போராளிகளின் நிலைமைகள் என்ன என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.   


தொடரும்.............


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது





No comments