Breaking News

யாருக்கு சுதந்திரம் ? எப்போது கொண்டாடுவது ? ஏன் சிந்திக்கவில்லை ?

கடந்த வருடம் வரைக்கும் சுதந்திரதின கொண்டாட்டம் என்பது முஸ்லிம்களின் பார்வையில் ஓர் சம்பிரதாய நிகழ்வாக இருந்தது. இதனை கொண்டாடுவதற்கு எங்களுக்கு முழு தகுதியும் உள்ளதா என்று எம்மவர்கள் எவரும் சிந்தித்ததில்லை. 

ஜனாசாக்களை எரிக்கின்ற காரணத்தினால் மட்டுமே இவ்வருடம் முஸ்லிம்களில் பலர் சுதந்திரதின கொண்டாட்டத்தினை புறக்கணிகின்றனர். ஆனால் ஒருசிலர் புரிந்துகொள்ள மறுக்கின்றார்கள். 

சுதந்திரதினம் என்பது எங்களுக்குரியதல்ல என்று ஒவ்வொரு வருடமும் கட்டுரை எழுதி வருகின்றேன். எனது கருத்தை அப்போது எவரும் புரிந்துகொள்ளவில்லை.  

இரண்டாவது உலகமகா யுத்தத்தினால் ஏற்பட்ட உலக அரசியல் மாற்றத்தினாலும், இந்தியாவில் நடைபெற்ற கடுமையான போராட்டங்கள் காரணமாகவும் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன்பின்பு இலங்கைக்கும் வழங்கப்பட்டது.

ஆங்கிலேயர்களின் வெளியேற்றத்தினால் முஸ்லிம் மக்களாகிய நாங்களும் சுதந்திரம் கிடைத்ததாக எண்ணியுள்ளோம். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்யாதிருந்திருந்தால் இந்நாட்டின் உட்கட்டமைப்பு இன்றுள்ள நிலையிலும் பார்க்க எவ்வளவோ பின்னோக்கி இருந்திருக்கும்.

சிங்களவர்கள் போன்று நாங்களும் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம் என்று பெருமைப்படுகின்றோமே தவிர, சுதந்திரத்தினால் சிங்களவர்கள் அடைந்த அதே உரிமையை நாங்களும் அடைந்தோமா என்று சிந்தித்ததில்லை. 

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்நாட்டின் முழு அதிகாரத்தினையும் பெற்றுக்கொள்ளும் வரைக்கும், சிங்கள தலைவர்களினால் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் நன்றாக கவனிக்கப்பட்டார்கள். இதனால் சிங்கள தலைவர்களை சிறுபான்மை தலைவர்கள் முழுமையாக நம்பினார்கள்.

ஆனால் 1948 இல் இந்நாட்டின் ஏகபோக முழு அதிகாரங்களும் சிங்களவர்களின் கைகளுக்கு கிடைத்தபின்பு அனைத்தும் தலைகீழாக மாறியது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் செறிவாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் இனப்பரம்பலை குறைத்து அவர்களது அரசியல் சக்தியை அழிப்பதற்காக அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் மணலாறு, அம்பாறை போன்ற பிரதேசங்களில் திட்டமிட்ட பாரிய சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டது.

2009 இல் நாட்டில் யுத்தம் முடிவுற்றதன் பின்பு புனித பிரதேசம் என்றும், தொல்பொருள் ஆராய்ச்சி என்றும் கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் இருபது ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டது.

அதனை விடுவிக்கும் நோக்கம் எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களிடமும் காணப்படவில்லை. அதுபோல் அதனை போராடி பெற்றுக்கொள்ளும் எண்ணமும் முஸ்லிம் தலைவர்களிடம் இல்லை. 

கடந்த காலங்களில் நீலம், பச்சை ஆகிய இரண்டு சிங்கள தேசிய கட்சிகளுக்கிடையில் இருந்த அதிகாரப் போட்டியின் காரணமாகவும், ஆயுத போராட்டம் இருந்த காலங்களிலும் முஸ்லிம்களை அரவணைத்து செல்லவேண்டிய தேவை சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. 

ஆனால் தற்போது சிங்கள தேசியவாதம் மேலோங்கி இருப்பதன் காரணமாகவும், யுத்தம் இல்லாத சூழ்நிலையிலும் முஸ்லிம்களை அரவணைத்து செயல்படும் எந்த தேவையும் இன்றைய ஆட்சியாளர்களிடம் இல்லை. அதனால் ஜனாசாக்களை புதைப்பதற்கான அடிப்படை உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.  

சிறுபான்மை மக்களாகிய நாங்கள், ஆங்கிலேயர்களது ஆட்சியியையும், சிங்களவர்களது ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆங்கிலேயர்களது ஆட்சியின்போது கூடுதலான சுதந்திரத்தினை நாங்கள் அனுபவித்திருந்தோம். 

எனவே சிங்களவர்களுக்கு இருக்கின்ற அதே உரிமையும், வடகிழக்கு பகுதிகளில் சுவீகரிக்கப்பட்ட காணிகளும் எப்போது வளங்கப்படுகின்றதோ, அன்றிலிருந்துதான் உண்மையான சுதந்திரத்தினை நாங்கள் கொண்டாட முடியும். இது சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரமே அன்றி எங்களுக்கல்ல என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது



No comments

note