முஸ்லீம் சகோதரரின் ஜனாஸாவை எரியூட்ட முயற்சியில் அலி ஸாஹிர் மெளலானா நேரடித் தலையீடு வெற்றியளித்தது!
குருநாகல் வைத்தியசாலையில் உள்ள ஏறாவூர் சகோதரரின் ஜனாஸாவை அடக்கம் செய்வது தொடர்பிலும் கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை எரியூட்டாமல் முறைப்படி அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வரும்வரை நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பில் அவசர அறிவுறுத்தல்களை வழங்குமாறு சுகாதார உயர் அதிகாரிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா நடவடிக்கை மெற்கொண்டுள்ளார்.
குருநாகல் வைத்தியசாலையில் உள்ள ஏறாவூர் சகோதரரின் ஜனாஸாவை பிரேத அறையில் இடவசதி இல்லை என்பதாலும் வர்த்தமானி அறிவிப்பு வந்த போதிலும் முறையான வழிகாட்டல்கள் இதுவரை வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படாத படியினால் வழமை போன்று அந்த ஜனாஸாவை எரியூட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து உடனடியாக பதில் சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு வழிகாட்டல்கள் வெளியாகும் வரை எவ்வித முன்னெடுப்புகளையும் செய்யாமல் அடக்கம் செய்வதற்கான அவகாசத்தினை கோரியதுடன் குறித்த வைத்தியசாலையில் இடவசதி இல்லையாயின் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைக்குமாறும் அலி ஸாஹிர் மௌலானா சுகாதார உயர் அதிகாரிகளுடன் வேண்டிக்கொண்டார்.
இன்று பிற்பகல் நேரடியாகவே குருநாகல் வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்ட அலி ஸாஹிர் மௌலானா பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயமன்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்சா ஆகியோரை தொடர்பு கொண்டு குறித்த ஜனாஸாவை வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் அடக்கம் செய்வது தொடர்பிலும் நாடு முழுவதிலும் தற்போது எதிர்கொள்ளும் இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி எந்த ஒரு ஜனாஸாவையும் எரியூட்டாமல் முறைப்படி அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வரும்வரை நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பில் அவசர அறிவுறுத்தல்களை வழங்குமாறும் வேண்டிக் கொண்டார்.
பலத்த பிரயத்தனங்களுக்கு பின்னர் எதிர்வரும் சில நாட்களுக்குள் முறையாக அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளதாகவும் அதுவரை குறித்த ஏறாவூர் சகோதரரின் ஜனாசாவை குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைப்பதற்கு உறுதி மொழி வழங்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பான அறிவுறுத்தலை மாவட்ட ரீதியாக அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்கள் மாகாண பணிப்பாளர்கள் வைத்திய அத்தியட்சகர்கள் சுகாதார சேவை அதிகாரிகளுக்கு துரிதமாக வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டது.
ஜனாஸாக்களை எரியூட்டம் செய்யாமல் அடக்கம் செய்ய முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் வெற்றியளிக்க செய்திட வேண்டும் என உளமாற அனைவரும் பிரார்த்திப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments