மீண்டும் தமிழர்களை போராட தூண்டுகிறார்களா ? நினைவுத்தூபியை உடைப்பதனால் எதனை சாதிக்க நினைக்கிறார்கள் ?
உயிரிழந்த தங்களது உறவுகளுக்காக தமிழர்கள் செறிந்து வாழும் அவர்களது தாயக பிரதேசத்தில் நினைவுத்தூபி அமைந்திருப்பதில் என்ன பிரச்சினை உள்ளது ?
இந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த நாட்டை ஆட்சி செய்துவந்த ஆட்சியாளர்களினால் சிறுபான்மையினரின் உணர்வுகள் அவ்வப்போது சீண்டப்பட்டு வருவதென்பது வரலாறு.
பெரும்பான்மை சமூக இனவாதிகளை திருப்திப்படுத்தும் வகையில் ஆட்சியாளர்களிடம் இந்த மாற்றான்தாய் மனோநிலை தொடர்ந்து இருக்கும் வரைக்கும் இந்த நாடு முன்னேற்றம் அடைவது கடினம்.
இவ்வாறு சிறுபான்மை இன மக்களின் உணர்வுகளையும், அடையாள சின்னங்களையும் அழிப்பதன் மூலம் எதனை சாதிக்க நினைக்கிறார்கள் ?
இறுதிப்போரில் முள்ளியவாய்காலில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளுக்காக யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி நேற்று 08.01.2021 உடைக்கப்பட்டுள்ளது.
இதனால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உற்பட நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் அந்த இடத்தில் ஒன்றுகூடி போராடிவருகின்றார்கள்.
இந்த சம்பவம் மூலம் தமிழ் மக்களை மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அழைக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் அவர்கள் இலங்கைக்கு விஜயம்செய்து திரும்பியுள்ள நிலையிலும், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றிய விசாரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலினால் எதிர்வரும் மார்ச் மாதம் நடாத்தப்பட உள்ள நிலையிலும் முள்ளியவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டதுடன், ஏராளமான இராணுவத்தினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டில் நடைபெற்ற சிங்கள வன்முறையின்போது கொல்லப்பட்டவர்களுக்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஜே.வி.பியினர்களின் நினைவுத்தூபிகள் அமைந்திருக்க முடியுமென்றால், உரிமை போராட்டத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏன் நினைவுத்தூபி இருக்கக்கூடாது என்ற நியாயமான கேள்வி ஒவ்வொருவரது மனதிலும் எழுகின்றது.
பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் சிறுபான்மையினர்களின் மனங்களை அன்பினால் வெற்றிகொள்ள முயற்சிக்க வேண்டும். ஒருபோதும் அடாவடித்தனத்தினால் இராணுவ பலத்தினைக்கொண்டு அடிமைப்படுத்த முடியாதென்பது உலக வரலாறு.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments