நான் சபையிலிருந்து வெளியேற்றப்பட வில்லை : முதல்வரே சபையை விட்டு முதலில் வெளியேறினார்- க. செல்வராசா விளக்கம்.
நூருல் ஹுதா உமர்
என்னை சபையிலிருந்து வெளியேற்றியதாக ஊடக செய்திகள் வந்ததை பார்க்கும் போது நான் மிகவும் குழம்பிப்போனேன். ஏன் இப்படியான பொய்யான செய்திகளை எழுகிறார்கள் என சிந்தித்தேன். சபையிலிருந்து நான் வெளியேற்றப்பட வில்லை. எனக்கு முன்னதாகவே சபை அமர்வை ஒத்திவைத்து விட்டு கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் அவர்களே சபையை விட்டு வெளியேறி சென்றார். அதன் பின்னர் எவ்வளவு நேரம் கழித்தே நான் சபையிலிருந்து வெளியேறினேன் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் கதிரமலை செல்வராசா தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை அமர்வில் கடந்த வாரம் நடைபெற்ற குழப்பநிலையை தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு தமது நிலைப்பாடு தொடர்பில் இன்று கல்முனையில் ஊடகங்களுக்கு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மாதாந்தம் நடைபெறும் அமர்வுகளில் நான் கருத்து தெரிவிக்கும் போது என்னை ஏளனமாக பேசுவதும், தரக்குறைவான வார்த்தைகளினால் சபையில் என்னுடைய கௌரவத்தை வழங்காமல் கட்டளையிடுவதுமாக இருக்கும் கல்முனை மாநகர சபை முதல்வர் அதிகார தொனியிலையே நடந்து கொள்கிறார். கடந்த சபை அமர்வில் நிதிக்குழு மற்றும் கல்வி, கலை, கலாச்சார குழு தெரிவின் போது அவரின் நடவடிக்கைகள் பக்கசார்பாக அமைந்தது. அதை பற்றிய நியாயத்தை கேட்ட போது " டேய் நீயென்ன எல்லாத்துக்கும் கத்திகத்தி படுக்கிற, ஒரேயோரே கத்துறாய் என்றதுடன் படைசேவையரை நோக்கி அவர வெளியே எடுத்து போடுங்க" என்றார்.
கௌரவ உறுப்பினர் கதிரமலை செல்வராசாவுக்கு (எனக்கு) இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்த மேயர் பின்னர் உடனடியாக என்னை வெளியேற்றுமாறும் கோரினார். அப்போது சக உறுப்பினர்களான ராஜன், மனாப், சப்ராஸ் மன்சூர், அஸீம் ஆகியோர் வெளியேற்ற கூடாது என்று மேயருடன் வாதிட்டதுடன் உறுப்பினர் எம்.எச்.எம்.ஏ. மனாப் சபை அனுமதி பெற்று வெளியேற்றுமாறு கோரினார். அப்போது சபைக்குள் வந்த பொலிஸாரையும் உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற கோரினர். ஆனால் நாங்கள் வெளியேற முன்னர் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் அவர்களே சபையை விட்டு வெளியேறி சென்றார்.
ஒரு கோடிக்கு மேல் செலவழித்து கிரேன் இயந்திரம் வாங்க போவதாக திட்டம் தீட்டுகிறார்கள். இப்போதைக்கு அத்தியாவசியமான ஒரு தேவையல்ல அது. சபையில் போலியான அல்லது பிழையான அறிக்கைகளை சமர்ப்பித்து ஒப்புதல் கேட்கிறார்கள். ஊழல் நிறைந்து காணப்படுகிறது, அவர்களுக்கு ஜால்றா அடிப்பவர்களை அனுமதித்து இவர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் ஊடகவியலாளர்களை சபையை விட்டு வெளியேறுகிறார்கள். மக்களின் அபிவிருத்திகள் சூறையாடப்படுகிறது இவற்றையெல்லாம் தட்டி கேட்டால் பதிலளிக்க முடியாமல் திணறுவதுடன் மானவங்கப்படுத்தப்படுகிறோம்.
சபையின் முதல்வருக்கு கைநீட்டி பேசுவதற்கும், கைகாட்டி பேசுவதற்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது வேடிக்கையே. என்னை இடைநிறுத்தியதாக எவ்வித உத்தியோகபூர்வ எழுத்து மூல அறிவிப்பும் கிடைக்கவில்லை என்றார்.
No comments