Breaking News

துறைமுக விவகாரம். பொதுஜன பெரமுனவுக்குள் விமலுடன் ஏற்பட்ட முரண்பாடும், ஒற்றுமைப்படுத்திய முஸ்லிம் உறுப்பினர்களும்.

ஆளும் பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்குள் இருந்துவந்த பனிப்போரானது, துறைமுக அதிகாரசபையின் கிழக்கு முணையத்தினை இந்தியாவுக்கு வழங்குவதில் தீப்போராக வெடித்துள்ளது.

கிழக்கு முணையத்தினை இந்தியாவுக்கு வழங்குவதற்கு ராஜபக்சாக்கள் தீர்மானித்த நிலையில், அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான சுதந்திர முன்னணி மற்றும் சுதந்திர கட்சி உற்பட பல அரசியல் கட்சிகள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன.

இதற்காக ஆளும் பொதுஜன பெரமுனவில் உள்ள பத்து அரசியல் கட்சிகள் நேற்று அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் ஒன்றுகூடி துறைமுக அதிகாரசபையின் தொழில் சங்கங்களுடன் இணைந்து போராட்டத்தினை மேற்கொள்வதென்ற தீர்மானத்தினையும் எடுத்திருந்தனர்.

அமைச்சராக இருக்கின்றோம் என்பதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் எடுக்கின்ற அனைத்து தீர்மானத்திற்கும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்காமல், இவ்வாறு துணிச்சலுடன் எதிர் நிலைப்பாட்டினை தெரிவிப்பது பாராட்டத்தக்கது.

ஆனால் உண்மையில் கிழக்கு முணையத்தினை இந்தியாவுக்கு வழங்குகின்ற காரணத்தினால்தான் இவர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது.

கடந்த பொதுத் தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற அமைச்சரவை நியமனத்திலிருந்தே ஆளும் பொதுஜன பெரமுனவுக்குள் குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டது. இறுதியில் அது இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தின்போது பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்தது.

இருபதின் மூலம் ராஜபக்சவின் குடும்பத்திற்கு முழு அதிகாரமும் சென்றுவிட்டால், அது தனது எதிர்கால பிரதம மந்திரி கனவுக்கு தடை ஏற்பட்டுவிடும் என்பதற்காக விமல் வீரவன்சவும், அவரது சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் மற்றும் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ச, சுசில் பிரமேஜயந்த போன்ற முன்னணி உறுப்பினர்கள் பலர் இருபதாவது திருத்தத்தினை தோற்கடிக்கும் பொருட்டு வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தனர்.

ஆனால் இதனை அறிந்துகொண்ட ராஜபக்சவினர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த முஸ்லிம் மற்றும் இதர உறுப்பினர்கள் மீது வலைவிரித்து தங்களது வெற்றியை உறுதிப்படுத்திகொண்டனர்.

இறுதியில், எதிர்தரப்பில் உள்ள சோனிக் காக்காமார்களின் ஆதரவுடன் இருபதாவது திருத்தம் நிறைவேற உள்ளது என்று தெரிந்துகொண்டதனால், தாங்கள் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் வேறு வழிகளின்றி ஆளும்தரப்பின் அதிருப்தியாளர்கள் அனைவரும் இருபதுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

அதாவது ஆளும்தரப்புக்குள் ஏற்பட இருந்த பிளவுகளை தடுத்து நிறுத்தியதுடன், ஆளும் கட்சிக்குள்ளிருந்த அதிருப்தியாளர்களை ஒற்றுமைப்படுத்திய மாபெரும் பணியினை எமது முஸ்லிம் உறுப்பினர்கள் செய்திருந்தார்கள்.

எமது முஸ்லிம் உறுப்பினர்கள் இருபதுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால், இருபதாவது திருத்தம் தோற்கடிக்கப்படுவதுடன், அரசாங்கத்திற்குள் அப்போது ஏற்பட்ட முரண்பாடுகள் பூதாகரமெடுத்து, 
பின்னாட்களில் அரசாங்கம் வேறுபல பின்னடைவுகளை எதிர்கொண்டிருக்கலாம்.

அவ்வாறான பின்னடைவுகள் சில நேரம் முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் இருந்திருக்கலாம். முஸ்லிம் உறுப்பினர்களின் முழுமையான ஆதரவினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஜனாஸா எரிப்பினை கைவிட்டிருக்கமாட்டார்கள் என்று கூறமுடியாத நிலை உருவாகியிருக்கலாம்.

எனவேதான் கிழக்கு முணையத்தினை இந்தியாவுக்கு வழங்குகின்ற காரணத்தினால்தான் அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டதென்று கூறுவது ஏற்புடையதல்ல. ஆனாலும் இந்த முரண்பாடுகள் வலுவடைந்து அரசாங்கம் பலயீனமடைய வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் பிரார்த்தனையாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது



No comments

note