அரசின் விதிமுறைகளை மீறி "ஊருக்குத்தான் உபதேசமே தவிர உனக்கில்லை" எனும் நிலையில் செயற்படும் கல்முனை மாநகர நிர்வாகத்திற்கு நடவடிக்கை எடுப்பது யார் ? - இசட். ஏ. நௌஷாட்
எமது நிருபர்
உலகில் வெகு வேகமாக பரவிவரும் கோவிட் -19 கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இலங்கையிலும் பல்லாயிரக்கணக்கானவர்களை காவுகொண்டு 130 பேரளவில் மரணித்தும் இருக்கிறார்கள். அலையின் வீரியம் பரவி கிழக்கு மாகாணமும் அம்பாறை மாவட்டதிலும் பரவலாக கோவிட் -19 கொரோனா தொற்று பரவி வருகின்றது.
ஆனாலும் கல்முனைக்கு அண்மையில் உள்ள அக்கரைப்பற்றில் மிக வேகமாக கோவிட் -19 கொரோனா தொற்று பரவி வரும் இச்சுழ்நிலையில் கல்முனை மாநகர முதல்வரும் கல்முனை மாநகர சபை ஊழியர்கள் உயர் அதிகாரிகளும் சமூக இடைவெளிகளை பேணாது, முகக்கவசங்களை அணியாது இவ்வாறு பொது வெளியில் நடமாடுவதும் கூட்டங்கள் நடத்துவதும் கண்டிக்கக் கூடிய விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை பிராந்திய அரசியல் செயற்பாட்டாளர் இசட். ஏ. நௌஷாட் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கல்முனை மாநகர சபையினால் அண்மையில் வரியிருப்பாளர்களுக்காக மென்பொருளை அறிமுகப்படுத்தும் நிகழ்விலும், பழுதடைந்த நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் திருத்தியமைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட பிரிவுகளிடம் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்விலும் சுகாதார வழிமுறைகள் எதையும் பின்பற்றாது கல்முனை மாநகர முதல்வரும் கல்முனை மாநகர சபை அதிகாரிகளும் செயற்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மக்களுடன் மிக நெருக்கமாக உறவை பேணும் இவர்கள், மக்களுக்கு கட்டளைகளை பிறப்பிக்கும் இவர்கள் இவ்வாறு செயற்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம் ? அத்துடன் மட்டுமன்றி முக்கிய அதிகாரிகளும் அங்கு எவ்வித சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றவில்லை.
ஊருக்குத்தான் உபதேசமே தவிர உனக்கில்லை எனும் நிலையில் செயற்படும் கல்முனை மாநகர நிர்வாகத்திற்கு கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையும் சுகாதார திணைக்களமும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன. சமூக நலன் கருதி இவர்களை 14/ 21 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்து சமூக பரவலை தடுக்க சம்பந்தபதப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.
No comments