நடைமுறைகள் விட்டுப் போகலாம் நம்பிக்கைகள் விட்டுப் போகக் கூடாது! - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தற்போதைய சூழலில் இஸ்லாமிய நடைமுறையொன்று சாத்தியமற்றதாக மாறிச் செல்கிறது. அதாவது, கொவிட் 19 தொற்றுடையதாக சுகாதாரப் பகுதியினரால் அடையாளப்படுத்தப்படுகின்ற ஜனாஸாவை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு முஸ்லிம்களால் முடியாதிருப்பதே அதுவாகும். ஜனாஸாவுக்குரிய 4 கடமைகளில் தொழுகையை மாத்திரமே நாம் நிறைவேற்றுகிறோம்.
இந்த நிலை இலங்கையில் ஏற்பட்டிருப்பதற்கு என்ன காரணம்? என்ற கேள்வியையும் அதற்கான பதிலையும் இந்தப் பத்தியில் தவிர்த்துக் கொள்கிறேன், கோரிக்கை மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில்...
இருப்பினும் தமது மார்க்கக் கடமையொன்றை நிறைவேற்ற முடியாதிருக்கும் இந்த சூழலில் முஸ்லிம்கள் என்ன செய்யலாம் என்பது பற்றிய ஒரு விளக்கத்தை பதிவு செய்ய முயற்சிக்கின்றேன். அந்த விளக்கம் தொடர்பில் ஏனையோரும் தமது கருத்துக்களை முன்வைக்கலாம்.
1️⃣ ஜனாஸா எங்களது கைகளிலிருந்து எடுக்கப்பட்டு விட்டால் அந்த ஜனாஸாவுக்கு நாம் செய்ய முடியாமல் போகின்ற கடமைகள் எங்களது பொறுப்பிலிருந்து நீங்கி விடுகின்றன, தொழுகையைத் தவிர.... அது எங்களால் செய்ய முடியுமான கடமையாகும். அதனை நாம் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.
2️⃣ குளிப்பாட்டல், கபனிடல், அடக்கம் செய்தல் ஆகியன எஞ்சிய கடமைகளாகும். இவற்றுக்குப் பதிலாக சுகாதாரப் பகுதியினரால் நிறைவேற்றப்படும் கிரியைகளுக்கு நாம் பொறுப்பானவர்களல்லர். அந்தக் கிரியைகள் தொடர்பில் நாம் விசாரிக்கப்படவும் மாட்டோம்.
3️⃣ ஜனாஸா எங்களிடமிருந்து எடுக்கப்படுகின்ற போது பிறப்பில் மனிதனுக்கு கொடுத்த கௌரவங்களை இறப்பிலும் கொடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது என்பதே எங்களது கவலையாகும்.
➖ ஜனாஸா கெட்டுப் போகாமல் உடனே அடக்கம் செய்தல்.
➖ ஜனாஸாவை சுத்தம் செய்வதற்காக குளிப்பாட்டுதல்.
➖ மிகவும் விரும்பப்படுகின்ற வெள்ளை நிறத் துணியினால் இறுதி ஆடை (கபன்) அணிவித்து மணம் பூசுதல்.
➖ மண்ணறையில் வைப்பதன் மூலம் ஜனாஸாவை அதன் நிரந்தர சொந்தக்காரனாகிய இறைவனிடம் ஒப்படைத்தல்.
இவைதான் உயிரற்ற உடலுக்கு இஸ்லாம் கற்றுத் தரும் வகையில் நாம் நிறைவேற்ற முடியாமல் போகின்ற இறுதி மரியாதைகளாகும்.
இவற்றை நிறைவேற்ற முடியாத நிர்ப்பந்த நிலைக்கு நாம் தள்ளப்படுவதால் இவற்றை நிறைவேற்றாத குற்றத்திற்கு இறைவனிடம் நாம் ஆளாக மாட்டோம். ஜனாஸாவுக்குரியவர் குற்றவாளியாகவும் மாட்டார்.
4️⃣ ஜனாஸாவுக்குரியவரின் ஆன்மா அழிவதில்லை. அது வானவர்களால் கைப்பற்றப்பட்டு இறைவனிடம் எடுத்துச் செல்லப்பட்டு விட்டது. அந்த ஆன்மாவுக்குரிய உடலே எரிக்கப்படுகிறது. அல்லாஹ் அந்த உடலை எரிக்கப்பட்ட பின்னரும் அதற்குரிய ஆன்மாவோடு மறுமையில் ஒன்று சேர்க்கும் சக்தி படைத்தவனாவான். குறித்த ஆன்மாவுக்குரியவர் செய்த நற்செயல்களுக்கான கூலியையும் மறுமையில் அவன் வழங்குவான். எரிப்பவர்கள் எரித்து விடுவதனால் அல்லாஹ் வழங்கும் இறுதி முடிவுகளில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
5️⃣ மனிதனின் இறுதி முடிவு நல்லதாக அமைய வேண்டும் என்பதிலேயே நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்கான வழி ஜனாஸா எரிக்கப்பட்ட பின்னரும்கூட திறந்தே இருக்கிறது. ஜனாஸாவுக்கான தொழுகையை நிறைவேற்றி ஜனாஸாவுக்குரியவரின் முடிவு நல்லதாக அமைவதற்கு தொடர்ந்தும் பிரார்த்திப்பதே அந்த வழியாகும். எரிக்கப்பட்ட ஜனாஸாவுக்குரியவர்களது பாவங்களை மன்னிக்குமாறும் அவர்கள் உலகில் செய்த நற்செயல்களை அங்கீகரிக்குமாறும் அவர்களுக்கு மேலான சுவர்க்கத்தை வழங்குமாறும் அல்லாஹ்வை அதிகமதிகம் பிரார்த்திப்போம்.
6️⃣ ஒரு முஸ்லிமுக்கு இருக்கும் மிகப் பெரிய ஆறுதல் இதுவன்றி வேறில்லை. ஜனாஸா எரிக்கப்பட்டதனால் அந்த ஜனாஸாவுக்குரிய மனிதர் செய்த நன்மைகள் எரிக்கப்படுவதில்லை. அந்த நன்மைகளுக்கான சன்மானங்கள் வீணாகி விடுவதுமில்லை.
7️⃣ மரணித்த ஒருவர் உயிர்க் கொல்லி வைரஸினால் தாக்கப்பட்டு உயிரிழந்தது உண்மையாயின் அவரது ஜனாஸாவும் எமது விருப்பத்திற்கு மாறாக எரிக்கப்பட்டு விட்டதாயின்... இறந்தவரது பதவி சிலபோது ஒரு ஷஹீதின் அந்தஸ்துக்கு உயர்த்தப்படலாம். அத்தகைய பாக்கியங்களை வைரஸின் தாக்கத்தினால் உயிர் துறந்து உடல் எரிக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் வழங்குவானாக!
8️⃣ இத்தகைய சிறந்த முடிவுகள் மரணித்தவர்களுக்கு கிடைக்க வேண்டுமாயின் மரணித்தவர்களது சொந்தக்காரர்கள் மற்றும் ஏனைய முஸ்லிம்கள் அழகிய பொறுமையைக் கையாள வேண்டும்.
9️⃣ பலவீனர்களது நியாயபூர்வமான உரிமைகள் பலமிக்கவர்களால் மீறப்படும்போதுதான் அழகிய பொறுமை அவசியப்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் சாத்வீகமாகவும் சட்டபூர்வமாகவும் விவகாரங்களை அணுகி தீர்வு காண்பதற்கு முயற்சிப்பது அனைவரதும் கடமையாகும்.
எனினும், சட்டபூர்வமான சாத்வீகமான அணுகுமுறைகளுக்கு அப்பால் எமது ஆதங்கங்களையும் உணர்ச்சிகளையும் கவலைகளையும் நாம் நினைத்தவாறு கொட்டித் தீர்க்க முற்படுவது அழகிய பொறுமையை அசிங்கப்படுத்துவதாக மாறிவிடலாம். அழகிய பொறுமை என்பது எங்களால் முடியாது போகின்ற கருமங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டு அவனது முடிவுகளுக்காக காத்திருப்பதே.
1️⃣0️⃣ ஆழகிய பொறுமை என்பது அசிங்கங்கள் கலவாத பொறுமையாகும். அல்லாஹ்வுக்காக அந்தப் பொறுமையை யார் மேற்கொள்கிறார்கள்? என அல்லாஹ் சோதித்தறிகிறான். அத்தகையவர்களது பொறுமைக்கு அல்லாஹ் வெற்றியைக் கொடுக்காமல் இருப்பதில்லை, இருந்ததுமில்லை.
1️⃣1️⃣ பலவீனமானவர்கள் தமது கருமங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதன் பொருள் பலவீனமானவர்களதும் பலம் பெற்றவர்களதும் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளையும் அவனிடமே ஒப்படைத்து விடுவதாகும். அதாவது, அல்லாஹ் இந்த முடிவைத்தான் எடுக்க வேண்டும் என்ற விதமாக நாம் பிரார்த்திக்கக் கூடாது. மற்றொருவகையில் கூறினால் அல்லாஹ் எடுக்க வேண்டிய முடிவுகளை நாங்கள் எடுத்து அவற்றை அவனுக்கு கற்பிக்க வேண்டியதில்லை. இத்தகைய அவசரம் அழகிய பொறுமையை பாதித்து விடலாம்.
1️⃣2️⃣ எமது நம்பிக்கையின் (ஈமானின்) பிரகாரம் உலக வாழ்வு தற்காலிகமானது. மறுமை வாழ்வே நிரந்தரமானது. அதே போன்று எமது நம்பிக்கையின் பிரகாரம் வானம், பூமி உட்பட மனிதர்கள் உட்பட உயிரற்ற, உயிருள்ள அனைத்தும் இறைவனுக்கே சொந்தமானவை. மனிதர்கள் உலகில் சிறிது காலம் வாழ்ந்து அனுபவித்து விட்டு போகிறார்கள். மற்றும் சிலர் துன்பங்களோடும் துயரங்களோடும் இறந்து போகிறார்கள். அதற்கான காரணங்களை நன்கு அறிந்தவனாக இறைவன் இருக்கிறான். அந்தக் காரணங்களின் அடிப்படையில் அவர்களது விவகாரங்களை இறைவன் கையாள்வான். அவன் நன்கறிந்தோனும் ஞானமுடையோனுமாவான்.
பலவீனர்கள் தமது விவகாரங்களை அந்த அறிவாளனிடமே ஒப்படைக்கிறார்கள். அந்த அறிவாளன் அவற்றைப் பார்த்துக் கொள்வான் என்றும் உறுதியாக நம்புகிறார்கள். அதுவே அழகிய பொறுமையாகும். கருமங்களை அவன் பார்ப்பதற்கு முன் நாங்கள் பார்த்து முடிவெடுக்க முற்படுவது அழகிய பொறுமைக்கு அழகானதல்ல. எனவே, குறைந்தபட்சம் எமது வார்த்தைகளால் கூட ஒருவருக்கும் நாம் தண்டனை கொடுக்க முற்படக் கூடாது.
1️⃣3️⃣ அல்லாஹ் இருக்கிறான் என்ற நம்பிக்கையின் பொருள் அவனது விசாரணை இருக்கிறது, அவனது சன்மானம் இருக்கிறது, அவனது தண்டனை இருக்கிறது, அவனது சுவர்க்கம் இருக்கிறது, அவனது நரகம் இருக்கிறது என்பதையெல்லாம் ஏற்றுக் கொள்வதாகும். மேலும் அவனே வாழச் செய்கிறான், அவனே மரணிக்கச் செய்கிறான், அவனே உயிர் கொடுத்து எழுப்புகிறான், விவகாரங்கள் அனைத்தினதும் வெளிப்படைகளையும் அந்தரங்கங்களையும் அவன் நன்கறிந்தவனாக இருக்கிறான். அந்த அறிவினடிப்படையில் அவன் கருமமாற்றுவான் போன்ற அனைத்தையும் ஏற்றுக் கொள்வதே இறை நம்பிக்கையாகும்.
அல்லாஹ் இருக்கிறான் என்பதை நம்பிவிட்டு சன்மானம் வழங்கவும் தண்டனை வழங்கவும் நாங்கள் அவசரப்பட்டால் அது அவனை நம்பியதாக மாட்டாது. அவன் நீதியாளன் என்பதை நம்பி அவனது முடிவுகள் வரும் வரை அழகிய பொறுமையை கையாண்டதாகவும் இருக்க மாட்டாது.
1️⃣4️⃣ ஒரு முஸ்லிமின் வாழ்வு இத்தகைய நம்பிக்கைகள் மீது கட்டியெழுப்பப்பட்டதேயன்றி, வெறும் செயல்களாலும் அல்லது செயல்களுக்கான எதிர்விளைவுகளாலும் கட்டமைக்கப்பட்டதல்ல. ஒவ்வொரு செயலுக்குமான எதிர்விளைவுகளை நாம் நினைத்தவாறு வெளிப்படுத்த முற்படுவோமாயின் எனது நம்பிக்கைகளின் பெறுமானம் தேய்ந்துவிடும்.
1️⃣5️⃣ முஸ்லிம்களுக்கான சோதனையே இறை நம்பிக்கையின் பிரகாரம் அவர்கள் வாழ்கிறார்களா? அல்லது அவர்கள் சரியென்று நினைத்ததையும் நம்பியதையும் செயல்படுத்தி வாழ்கிறார்களா? என்பதுதான்.
இந்த சோதனையில் நாம் வெற்றி பெறுவதாயின் எமது நம்பிக்கைகள் மீது நாம் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும்.
1️⃣6️⃣ நாங்கள் ஜனாஸாவை இழப்போம். நிர்ப்பந்தம் வந்தால் அந்த சூழலில் இழக்க வேண்டியதையும் இழப்போம். (அவ்வாறு நடவாதிருக்க அல்லாஹ் அருள் புரிவானாக) எனினும், எமது நம்பிக்கைகளை மற்றும் இறைவிசுவாசத்தை நாம் இழக்க மாட்டோம். காரணம், அவற்றின் அடிப்படையிலேயே எமது உலக மறுமை வெற்றி- தோல்விகள் தீர்மானிக்கப்பட இருக்கின்றன.
1️⃣7️⃣ முஸ்லிம்களது இறைநம்பிக்கை அமைதியும் அழகிய பொறுமையும் நிறைந்த உன்னதமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றது. அந்த இறை நம்பிக்கையைப் பெற்றவனால் மற்றொரு மனிதன் அசௌகரியத்துக்குள்ளாக மாட்டான். அவனைப் பிற மனிதர்கள் அசௌகரியத்துக்கு உட்படுத்திய போதிலும்கூட....
ஒரு முஸ்லிம் இத்தகைய அமைதியும் அழகிய பொறுமையும் கொண்ட நல்வாழ்வை உலகறியச் செய்ய வேண்டும்.
1️⃣8️⃣ ஜனாஸா எரிக்கப்படுவது தொடர்பில் இன்றுவரை இலங்கை முஸ்லிம்கள் நாட்டுக்கோ நாட்டின் சட்டங்களுக்கோ இடையூறு விளைவிக்கும் விதமாக பகிரங்க ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை தவிர்த்து வந்துள்ளமை அவர்களது அழகிய பொறுமைக்கு எடுத்துக்காட்டே என்பதில் சந்தேகமில்லை. எனினும், சமூக வலைத்தளங்களில்; முஸ்லிம்கள் அழகிய பொறுமையை பாதுகாத்தார்களா? என்பது ஒரு வினாவாகவே இருக்கிறது.
இன்றைய உலகில் தாக்கம் விளைவிக்கின்ற சமூக வலைத்தளங்கள் எமது அழகிய பொறுமையை சுமந்து செல்லும் ஊடகமாக மாற வேண்டும்.
1️⃣9️⃣ அதேநேரம் ஜனாஸா எரிக்கப்படுவது தொடர்பில் நியாயபூர்வமான வகையில் குரல் கொடுத்து ஆட்சேபனை தெரிவித்த சகோதர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஜனாஸா எரிக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக விவாதித்தவர்கள் அனைவரையும் நாம் மனம் கொள்ள வேண்டும்.
அவர்கள் இந்நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்தவர்கள் என்ற வகையிலும் இந்நாட்டு மக்களின் உரிமைகள் விடயத்தில் ஆழ்ந்த கரிசனை கொண்டவர்களாக இருந்தார்கள் என்ற வகையிலும் முஸ்லிம்கள் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு நன்றியறிதல்களையும் பாராட்டுக்களையும் முஸ்லிம்கள் தெரிவிப்பதோடு தொடர்ந்தும் அவர்களோடு இணைந்து சட்டபூர்வமான அணுகுமுறைகளில்; கவனம் செலுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.
2️⃣0️⃣ கொவிட்-19 தொற்று உறுதியான ஜனாஸாவை எரிப்பது என்ற தீர்மானம் அரசாங்க வர்த்தமானியிலிருந்து இன்னும் நீக்கப்படாத நிலையில் அத்தகைய ஜனாஸாக்களை எரிக்கும் பொறுப்பை அரசாங்கத்திற்கே விட்டு அமைதி காப்பது என்ற முடிவில் இதுவரை இருந்தது போல் தொடர்ந்தும் நாம் இருக்க வேண்டும்.
நாட்டினதும் மக்களினதும் நல்லதோர் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து கருமமாற்றும் சூழலை உருவாக்க அனைவரும் முயற்சிப்போமாக!
தஃவா களம்
அல்ஹஸனாத் - டிசம்பர் 2020
No comments