ஜப்பான் சிறுமியை கடத்திவந்த இலங்கை ஆசாமி கைது-சிறுமி கர்ப்பம்?
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை அவர்களது பெற்றோருக்கு தெரியாமல் இலங்கைக்கு அழைத்துவந்து சட்டவிரோதமான முறையில் தங்கவைத்திருந்த இளைஞனை சிலாபம் கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்ய கொழும்பிலுள்ள ஜப்பான் நாட்டுத் தூதரகமும் உதவிபுரிந்துள்ளது.
குறித்த ஜப்பான் சிறுமி தற்சமயம் கர்ப்பமாக இருப்பதுவும் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் குறித்த சிறுமியின் தாயாரினால் இலங்கைப் பொலிஸாரிடத்தில் தனது மகள் காணாமல் போயிருப்பதாகவும், வீட்டில் தொழில்செய்த இலங்கை இளைஞனே சந்தேக நபராகவும் குறிப்பிட்டு முறையிட்டிருந்தார்.
இந்த நிலையில் 23 வயதான சிலாபம் கொச்சிக்கடையை சேர்ந்த இளைஞனும், குறித்த ஜப்பான் சிறுமியும் இளைஞனின் உறவினரது வீட்டில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் சிறுமியிடம் 10 இலட்சம் ரூபா பணமும் இருந்துள்ளது.
15 வயதான ஜப்பான் நாட்டு சிறுமி, அந்த நாட்டிலுள்ள பிரபல செல்வந்தர் ஒருவரின் மகள் என தெரியவருகின்றது.
பின்னணி என்ன?
கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இளைஞன், 4 வருடங்களுக்கு முன்னர் தனது உயர் கல்வியை தொடர்வதற்காக ஜப்பான் நோக்கி பயணித்துள்ளார்.
தனது கல்வி நடவடிக்கைகளுக்காக பாரிய நிதி தேவைப்படுவதை உணர்ந்த குறித்த இளைஞன், ஜப்பானிலுள்ள செல்வந்த வர்த்தகர் ஒருவரின் வீட்டில் தற்காலிகமாக பணிப்புரிந்துள்ளார்.
வர்த்தகர், வர்த்தகரின் மனைவி மற்றும் அவரது 15 வயதான மகள் ஆகியோரே அந்த வீட்டில் வாழ்ந்துள்ளனர்.
இவ்வாறு பணிப்புரிந்து வந்த இலங்கை இளைஞனுக்கும், 15 வயதான ஜப்பான் சிறுமிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, குறித்த இளைஞன் தனது காதலியை இரகசியமான முறையில் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானிலுள்ள வீட்டில் தனது மகளை காணாத பெற்றோர், இந்த விடயம் தொடர்பில் அந்த நாட்டு பொலிஸாரின் ஊடாக ஜப்பானுக்கான இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர்.
ஜப்பானுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க பொலிஸார் இணைந்து, குறித்த இளைஞன் மற்றும் ஜப்பான் சிறுமி ஆகியோரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
குறித்த சிறுமியின் பெற்றோர் இலங்கைக்கு வருகைத் தரும் வரை, சிறுமியை அதிகாரிகள் தமது பொறுப்பில் வைத்திருக்கும் நோக்குடன், காதலனின் வீட்டிற்கு அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.
சிறுமியின் பாதுகாப்பிற்காக, காதலனின் தங்கை, குறித்த சிறுமியுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஜப்பான் சிறுமியின் பெற்றோர் நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாக அறிய கிடைத்ததை அடுத்து, தனது காதலியை அழைத்து கொண்டு, குறித்த இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சுமார் 7 மாத காலமாக குறித்த இருவரையும் கண்டுபிடிக்க முடியாது, தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இருவரையும் தப்பிச் செல்ல ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், குறித்த இளைஞனின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த இருவரும் தப்பிச் செல்ல ஒத்துழைப்பு வழங்கிய வாகன சாரதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சிறுமியின் தாய் இலங்கைக்கு வருகைத் தந்ததுடன், அவரது மகளை கண்டுபிடிக்க முடியாமையினால், அவர் மீண்டும் நாட்டிற்கு சென்றிருந்தார்.
சுமார் 7 மாத காலமாக பொலிஸார் விசாரணைகளை நடத்திய போதிலும், குறித்த இருவரையும் இதுவரை கண்டுபிடிக்க முடியாதிருந்த நிலையில்தான் மேற்படி கைதாகியிருக்கின்றனர்.
No comments