ஜனாஸா எரிப்பு விவகாரம் - அஷ்ஷெய்க் மின்ஹாஜ் ஹாலித் (இஸ்லாஹி)
முஸ்லிம்கள் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வார்கள் என்பதை நாட்டில் உள்ள சகல இன மற்றும் மதத்தைச் சார்ந்தவர்களும் நன்கு அறிவார்கள். ஆனாலும் சில கலாநிதிகள்தான் ஜனாஸா எரிப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அடிப்படைவாதிகள் என கூக்குரல் போடுகின்றனர்.
ஜனாஸாக்களை எரிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுப்பவர்கள் இலங்கை ஜனநாயகக் குடியரசின் பிரஜைகளான முஸ்லிம்களாவர். இதனை முஸ்லிம்களின் கலாசார அடையாளமாகப் பார்ப்பது பிழையானதாகும்.
இதனை நாம் மார்க்கத்தின் அடிப்படை அம்சமாகவே கட்டாயம் பார்க்க வேண்டும். பரிசுத்த திருக் குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
"பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர் அதிலேயே உங்களை நாம் சேர்த்துவிடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே நாம் உங்களை வெளிப்படுத்துவோம்....(20:55).
மனித இன வரலாற்றைத் துவக்கி வைத்த முதல் மனிதர் ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களது இரு புத்திரர்களும் கொண்டு சண்டையிட்டுக் கொண்டு ஒருவர் அடுத்தவரைக் கொலை செய்த பின்னர் கொலையாளி கொல்லப்பட்ட தனது சகோதரனின் பிரேதத்தை என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நின்ற போது அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. அதன் பின்னர் தனது சகோதரரின் பிரேதத்தை பூமியில் மறைக்கும் முறைமையக் கண்டுகொண்டார். (5:31)
எனவே நல்லடக்கம் செய்யும் வழமை இன்று நேற்று தோன்றியதல்ல. மாறாக வரலாற்றுத் தொண்மைமிகு காலப்பகுதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதிலிருந்து நல்லடக்கம் என்பது மிகச்சிறந்த வழிமுறை என்பது தெளிவாகின்றது.
ஆனாலும் இறுக்கமான நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் பிரேதம் எரிக்கப்படுவதே சூழலுக்கு ஏற்புடையது என நிபுணர் குழுவொன்று எதுவித அழுத்தங்களுக்கும் அடிபணியாது பரிந்துரைக்கும்போது முஸ்லிம்கள் அதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தயாராகவே உள்ளனர். ஏனெனில் முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ள மார்க்கம் வரட்டுத் தத்துவங்களின் தொகுப்பு அல்ல.
ஆனாலும் W.H.O போன்ற நிறுவனங்கள் பிரேதங்கள் கட்டாயம் எரிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வரவில்லை. எனவேதான் உலக நாடுகளில் இலங்கையைத் தவிர வேறு நாடுகளில் கொரோனாவினால் உயிர் இழந்தோரின் உடல்கள் எரிக்கப்படுவதில்லை.
தங்க மண்ணறைக்குள் நல்லடக்கம் செய்ய அனுமதி தாருங்கள் என்று புதிதாக ஒரு உரிமையை நாம் கோரவில்லை. மண்ணுக்குள் நல்லடக்கம் செய்கின்ற பழைய உரிமையையே நாம் கோருகிறேன்
றோம்.
இப்போதெல்லாம் முஸ்லிம்கள் உரிமைக் குரல் எழுப்பினால் அதற்கு அடிப்படைவாத மற்றும் ஸஹ்ரான் சாயம் பூசி திசை திருப்ப முயற்சிப்பது இனவாதிகளின் வாடிக்கையாகப் போய்விட்டது.
2020/11/07.
stand against cremating muslim covid19 bodies in srilanka challenge
No comments