காடு மீளுருவாக்கல் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது : றிசாத் எம்.பியின் பிணை விடுதலை தொடர்பில் ஷிபான்.
நூருல் ஹுதா உமர்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சிறைவாசம் அனுபவித்து 37 நாட்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உலகிலே புகழ்பூத்து சோபித்த தலைவர்கள் சிறை செல்வதொன்றும் புதிதான விடயமல்ல. ஆகவேதான் புரட்சிகரமான அரசியலை மெருகூட்ட சிறைவாசம் ஒரு அந்தஸ்தாக மாறிவிட்டது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ .எம். ஷிபான் தெரிவித்தார்.
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமையில் கல்முனை மாநகர சபா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு போசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு பேசிய அவர். தனது உரையில் கடந்த 2005 ம் ஆண்டு முதல் மகிந்த அரசாங்கத்துக்கு அந்த அகதி மக்களை வாக்களிக்கச் செய்கின்ற பங்களிப்பினை எமது தலைவர் செய்து வருகின்றார். ஆனால் 2019ஆம் ஆண்டு மகிந்த அரசாங்கத்தை எதிர்த்து அவர் அழைத்துச் சென்றது மாத்திரம் குற்றமாக நோக்கப்படுகின்றது. அது மாத்திரமல்லாமல் அவர் சிறைவாசம் அனுபவித்து வந்த இந்த நாட்களில் மேலும் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு கட்சி போராளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராராக 2009 களில் செயற்பட்ட தலைவர் றிசாட் பதியுதீன் அகதியாக நிர்க்கதிக்குள்ளாகியிருந்த, வாழ்வதற்கு இல்லிடம் அற்றிருந்த சுமார் 1500 குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி மீள்குடியேற்றம் செய்தமைக்காகவே 2500 ஏக்கர் காட்டினை மீளுருவாக்கம் செய்யக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பானது வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக அமைவதோடு மொட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சர்களுக்கு எதிர்காலத்தில் படிப்பினையாகவும் அமையும் இன்ஷாஅல்லாஹ்.
இது றிசாட் பதியுதீனுக்கு மாத்திரமான தீர்ப்பல்ல. இந்த அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்ற ஆதரவு கொடுக்க நினைக்கின்ற அத்தனை சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான தீர்ப்பு.
2009 ம் ஆண்டு காலப்பகுதியில் நமது நாட்டின் அதிஉச்ச அமைச்சரவை அந்தஸ்துள்ள மீள் குடியேற்ற அமைச்சுக்கு பொறுப்பாகவிருந்த கௌரவ பஸில் ராஜபக்ஸ அவர்களின் உத்தரவின் பேரிலே குறித்த அகதி மக்களின் மீள்குடியேற்றம் இடம் பெற்றது என்பதோடு அந்தப்பணியை அரச ஆதரவாளராக மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்த றிசாட் செவ்வணே செய்ததே வரலாறு. தனி மனிதனாக 2500 ஏக்கர் காடுகள் அரச ஆதரவில்லாமல் குடியமர்த்த தனி நபரால் முடியுமா? அன்று பதவியில் இருந்த மகிந்த குழு அரசாங்கத்தின் அரச அலுவலகங்கள் அத்தனையும் கூட்டுப்பொறுப்போடு செய்த விடையத்துக்கு தனி நபர் ஒருவர் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார். ஆகவேதான் அவர்களின் அரசாங்கம் வேண்டும் என்ற போதெல்லாம் றிசாட்டை பயன்படுத்திவிட்டு வேண்டாம் என்கின்றபோது மிதிக்க முனைகிறது.
இது எப்படியானதென்றால் எலிக்கு நல்ல பொரியலையும் வைத்து பொறியையும் வைப்பது போன்றது. எனவேதான் சிறுபான்மை எம்.பிக்கள் படிப்பினை பெற வேண்டும்.
ஆகவேதான் விரும்பியும் விரும்பாமலும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த சிறுபான்மை எம்பிக்களுக்கு நான் எச்சரிக்கை மணி ஒலிக்கின்றேன் இந்த அரசாங்கம் ஆபத்தானது.
இந்த அரசாங்கத்தோடு ஒட்டி இருந்து எவ்வகையான அபிவிருத்தித் திட்டங்களை சிறுபான்மை பாராளுமன்றப் பிரதிநிதிகள் செய்தாலும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக நீங்கள் வெட்டி செயல்பட முற்பட்டால், ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயமாக நீங்கள் அனைவரும் அவர்களால் தண்டிக்கப்படுவீர்கள் என்பதனை உணர்த்துகின்ற ஒரு சம்பவமாக இலங்கை வரலாற்றிலேயே அமைச்சர் ரிஷாட் உடைய சம்பவம் பதியப்பட்டிருக்கிறது.
தலைவர் சிறையில் இருந்தது ஒன்றும் கவலையான விடயம் அல்ல. கடந்த மஹிந்த அரசில் ரிசாட் எம்மாதிரியான ஒரு முக்கிய நபராக இருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் 2015ஆம் ஆண்டு மஹிந்த அரசை விட்டு வெளியே வந்தது சமூகம் நசுக்கப்படுகிறது என்பதற்காகவே ஒழியவே அன்றி வேறொன்றுக்கும் அல்ல .
ஆகவேதான் 20 தற்கு ஆதரவு கொடுத்த சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களே , நீங்கள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய காலகட்டம் இது. எந்தவித டிமாண்டும் வைக்காமல் 20க்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். கோவிட்-19 ஜனாசா எரிக்கப்பட்ட போதெல்லாம் அமைதியாகவே இருந்தீர்கள். இந்த அமைதிக்கு பரிசாக உங்களுக்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அதிகாரிகளோடு கூட்டுப் பொறுப்போடு செய்யக் கூடிய அத்தனை வேலைத்திட்டங்களும் அரசாங்கம் பரிசாக தந்தாலும் கூட எதிர்காலத்தில் சமூகத்துக்காக நீங்கள் இதைவிட மேலான கைங்கரியம் ஒன்றுக்காக இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேற நினைக்கும் பட்சத்தில் உங்களுக்கும் தக்க எலி பொறிகள் காத்திருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். இதற்கு கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி கூட விதிவிலக்கல்ல.
இவ்வாறு இந்த அரசாங்கம் செயற்படுவதனால் மக்களுக்கு நீதித்துறையின் மீது இருந்த அளவு கடந்த நம்பிக்கையும் போகக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. காரணம் பத்து வருடத்திற்கு முதல் மன்னாரிலே செய்யப்பட்ட அபிவிருத்திக்கு இப்போது வியாக்கியானம் கேட்கின்ற அரசு , கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முத்துராஜவல என்ற இடத்தில் பறவைகள் சரணாலயம் அமையப் பெற்றிருந்தும் அங்கு சில பகுதிகளை அழித்து நாசப்படுத்திய குழுவினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமனான பொழுதுகளில் புத்தளத்தில் முன்தலம எனுமிடத்தில் கண்டல் நில தாவரங்களை அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து இருக்கின்ற அமைச்சர் ஒருவரின் தம்பி அழித்து சேதப்படுத்தி உள்ளார். ( ஜனாதிபதி ஆணைக்குழுவின் தேடலில் கண்டுபிடித்த விடயம் இது ) சூற்றாடல் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த 10 நாட்களுக்கு முன்பதாக சுட்டிக்காட்டுகின்றார் . முத்துராஜவெல முந்தலம பகுதிகளில் அழிப்பை மேற்கொண்டவர்களை போலீஸ் உயர் அதிகாரிகள் கைது செய்யவில்லை என ஊடகங்களில் பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே இங்கு அழிவு, குடியேற்றம் என்பது ஒரு பெரிய விடயமாக நோக்கப்படவில்லை. அதனை யார் அழித்தார்கள் என்பதே நோக்கப்படுகின்றது.
மாத்திரமல்லாமல் இந்த நாட்டின் நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் சில விடயங்களே இந்த அரசாங்கத்தில் அரங்கேறுகின்றது. பஸில் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த அரசிலே ஜனாதிபதி செயலாளர்களாக இருந்த லலித் வீரதுங்க, அனுஷ்ய பெல்பிடெ போன்றோர் செய்த குற்றங்களை மேற்கொண்டு மேலே கொண்டு செல்ல முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அரசாங்கம் கூட்டாக மேற்கொண்டு செய்த செயலுக்கு ரிஷாத் பதியுதீனை மாத்திரம் குற்றவாளி ஆக்கி கூண்டிலே வைத்து வேடிக்கை பார்த்தது.
இருந்தாலும் தலைவர் றிசாத் பதியூதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் விடுதலைக்காக துஆ செய்த உறவுகள், முயற்சிகளை மேற்கொண்ட நல்லுள்ளங்கள் எல்லோருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் உங்கள் அனைவருக்கும் இறைவன் நீண்ட ஆயுளை வழங்க பிராத்திக்கிறேன்- என்றார்.
No comments