முகநூல் பாவனையாளர்கள் சார்பாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு... - அபூ ஸுமையா
இறைவனது சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் இந்நாட்டின் பிரஜைகள் யாவர் மீதும் உண்டாவதாக.
2020ஆம் ஆண்டை உலகலவில் உலுக்கிப் போட்டது கொரோனா. எனினும் அதைவிட முஸ்லிம்களான எமது உள்ளங்களை உலுக்கிப் போட்ட ஒன்று இருக்குமானால் அது நம் நாட்டின் நடைபெற்ற முஸ்லிம்களது ஜனாஸா எரிப்பாகத்தான் இருக்க முடியும்.
எம்மைப் படைத்த இறைவனது கிருபையால் உங்கள்மூலம் இன்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றிகளை பரிசாக்குகிறோம். இன்ஷா அல்லாஹ் எங்களை நன்றியுள்ளவர்களாக கண்டு கொள்வீர்கள்.
கௌரவ ஜனாதிபதி அவர்களே! இந்நாட்டின் வளர்ச்சிக்காக தீர்க்கப்பட வேண்டிய இன்னும் சில இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக இனங்களுக்கு மத்தியிலான தொடர்புகள் மெதுமெதுவாக தூரமாகி வருகின்றன. அதற்கு பிரதான காரணி இந்நாட்டில் வளர்ந்து வருகின்ற இனவாத செயற்பாடுகளாகும்.
இனவாத செயற்பாடுகளால் பாதிப்புகளை தவிர நாட்டுக்கு எவ்வித நலனும் ஏற்படப் போவதில்லை என்பதை ஆளுமை நிறைந்த ஜனாதிபதி எனும் வகையில் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறோம். இந்நாட்டை கட்டியெழுப்புவதற்கு பல்லின சமூகத்தின் ஒற்றுமை இன்றியமையாததாகும். அவ்வொற்றுமை மலர புரிந்துணர்வு முக்கிய பாலமாகும். அவரவர் மதப் பிரகாரம் அவரவர் செயற்பாடுகளை செய்து கொண்டு நாட்டை கட்டியெழுப்புகின்ற விடயத்தில் அனைத்தின மக்களும் ஒரு கயிற்றை பற்றி பயணிக்க வழிவகுக்க வேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட நீங்கள் மனம் வைத்தால் உங்களால் இந்நிலையை உருவாக்க முடியும் என நம்பிக்கை வைக்கிறோம். இது இந்நாட்டுக்கு இக்காலத்தின் அதிஅவசியமான செயற்பாடு. இதனை சமயோசிதத்துடன் திட்டமிட்டு சரியாக உங்களால் சாதிக்க முடிந்து விட்டால் நீங்கள் வரலாற்றில் சாதனையாளராக புகழப் படுவீர்கள் என்பதில் சிஞ்சிட்டும் ஐயமில்லை. இந்நாட்டின் பிரஜைகளாக இந்நாட்டின் மீதுள்ள காதலை முன்னிறுத்தி இக்கோரிக்கையை தயவுடன் உங்கள்முன் சமர்பிக்கிறோம்.
மனிதம் வாழும் முன்மாதரிமிக்க நாடாக இலங்கை மலர அல்லாஹ்வை பிரார்த்தித்தவனாக...
இலங்கையன்
அபூ ஸுமையா
மடவளை பஸார்.
09-11-2020
No comments