வெற்றிக்கு மிக அண்மையில் ஜோ பைடன்.. அமெரிக்க அதிபராக இன்னும் 6 தேர்வுக் குழு வாக்குகள் தேவையா?.
MADURAN KULI MEDIA
05/11/2020
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. தேர்வுக்குழு வாக்குகள் மற்றும் முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில் இருவருக்கும் பெரிய இடைவெளி இல்லை என்பதால் வெற்றியாளர் யார் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவியது.
நேற்றைய நிலவரப்படி பைடன் 238 தேர்வுக்குழு வாக்குகளையும், டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்றிருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக டிரம்ப் முன்னிலை வகித்து வந்த விஸ்கான்சின் மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்கள் பைடனுக்கு சாதகமாக மாறின. விஸ்கான்சினின் 10 வாக்குகள் மற்றும் மிச்சிகனின் 16 வாக்குகளைப் பெற்ற பைடன் மொத்தம் 264 வாக்குகளைப் பெற்று வெற்றியை நெருங்கியுள்ளார்.
மெய்ன் மாகாணத்தில் அம்மாகாண முறைப்படி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தேர்வுக்குழு வாக்குகள் பகிர்ந்து அளிக்கப்படும் என்பதால் மொத்தமுள்ள 4 வாக்குகளில் ஏற்கனவே மூன்று பைடனுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், டிரம்ப் ஒரு வாக்கைப் பெற்றதால் அவரது எண்ணிக்கை 214 ஆக உயர்ந்தது.
பைடனின் வெற்றிக்கு 6 வாக்குகளே தேவைப்படும் நிலையில், அவர் முன்னிலையில் உள்ள நெவாடாவில் வென்றால் 6 வாக்குகளைப் பெற்று பைடன் அதிபராகி விடுவார்.
டிரம்பின் வெற்றிக்கு 56 வாக்குகள் தேவைப்படும் நிலையில், அவர் முன்னிலையில் உள்ள பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா, அலாஸ்கா ஆகிய 4 மாகாணங்களில் வென்றாலும் 54 வாக்குகளே கிடைக்கும் என்பதால் டிரம்பின் வெற்றி கேள்விக்குறி ஆகியுள்ளது.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments