அல்-கொய்தாவின் நகர்வும், அமெரிக்காவினால் அல்-குர்ஆன் விநியோகமும், சோவியத்தின் வீழ்ச்சியும்.
முப்பத்தியோராவது தொடர்.....
சூடான் நாட்டில் அமெரிக்காவின் எதிரியான ஒமர் அல்-பஷீரின் ஆட்சி பாதுகாப்பானதாகவும், தனது அல்-கொய்தா இயக்க போராளிகளுக்கு பயிற்சி வழங்குவதற்கு உகந்த தளமாகவும் இருந்தது. அதனாலேயே சவூதியிலிருந்து விரட்டப்பட்டபின்பு ஒசாமா பின் லேடன் சூடானில் தஞ்சமடைந்தார்.
அங்கு ஏற்கனவே வசித்துவந்த எகிப்தை சேர்ந்த ஜிகாத் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆபிரிக்கா கண்டத்தை சேர்ந்த பல இயக்கங்களை அல்-கொய்தாவுடன் இணைத்தார். இதனால் ஒசாமாவுக்கு ஆதரவு வழங்கிவந்த எகிப்தின் ஆட்சியாளர்களும் எதிரியாக மாறினார்கள்.
அத்துடன் உலகம் முழுவதிலுமிருந்தும் போராளிகள் அழைத்துவரப்பட்டு சூடானில் பயிற்சி வழங்கப்பட்டது. பின்பு அங்கிருந்து உலகின் பல பாகங்களுக்கும் அல்-கொய்தாவின் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்பட்டது.
1998.08.07 இல் கென்யா, தன்சானியா ஆகிய நாடுகளின் தலைநகர்களில் அமைந்திருந்த அமெரிக்க தூதரகங்கள்மீது அல்-கொய்தா இயக்கத்தினரால் ஒரேநேரத்தில் குண்டுதாக்குதல் நடாத்தப்பட்டது. இதனால் தூதரகம் சேதமடைந்ததுடன் ஏராளமான அமெரிக்க தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்மூலம் ஒசாமா தீவிரமாக தேடப்படும் நபராக அமெரிக்கா அறிவிப்பு செய்தது. பின்பு அவரது தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் என அறிவிக்கப்பட்டது. நியூயோர்க் வர்த்தக கட்டிட தாக்குதலுக்கு பின்பு அந்த தொகை இரட்டிப்பாக்கப்பட்டது.
இதனால் சூடானில் தொடர்ந்து இருப்பது தனக்கு பாதுகாப்பில்லை என கருதி ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். அங்கு தன்னோடு சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போராடிய முஜாஹிதீன் குழுக்களில் ஒன்றான முல்லா ஒமரின் தலைமையிலான தாலிபான்களின் ஆட்சி ஒசாமாவுக்கு பாதுகாப்பானதாக இருந்தது.
சூடானிலிருந்து செயல்பட்டுவந்த அல்-கொய்தாவின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானுக்கு மாற்றப்பட்டது. பின்பு “ஏரியானா ஆப்கான் எயார்லைன்” என்னும் விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கினர்.
உலகின் பல பாகங்களிலிருந்தும் அமெரிக்காவுக்கு எதிராக புனித போர்தொடுக்க தயாரான இஸ்லாமிய இளைஞ்சர்களை இந்நிறுவனத்தின் விமானம் மூலமாக ஆப்கானிஸ்தானுக்குள் கொண்டுவந்ததுடன், ஆயுதங்களும் கடத்தப்பட்டது.
ரஷ்ய படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்கு அமெரிக்கா கடுமையான விலை கொடுத்தது. இதற்காக பல பில்லியன் டொலர் பணத்தினை செலவழித்திருந்தும், போராளிகள் மூலமாக எந்தவித இலாபத்தையும் அமெரிக்காவினால் அடையமுடியவில்லை.
அப்போதைய சூழ்நிலையில் என்னவிலை கொடுத்தாவது தன்னைவிட பலம்வாய்ந்த எதிரியான சோவியத் ரஷ்யா என்னும் கொமியுனிச தேசத்தை பிளவுபடுத்த வேண்டுமென்று அமெரிக்கா சிந்தித்ததே தவிர, அதற்காக உருவாக்குகின்ற இஸ்லாமிய போராளிகள் பின்னாட்களில் தங்களுக்கு எதிராக கிளம்புவார்கள் என்று அமெரிக்கா சிந்திக்கவில்லை. அவ்வாறு சிந்திப்பதற்கு நேரம் இருக்கவுமில்லை.
அதேபோன்று 15 குடியரசுகளைக்கொண்ட சோவியத் ரஷ்யாவில் ஆறு குடியரசுகளான கசகஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பகிஸ்தான், அசர்பைஜான், கிர்கிஸியா ஆகிய தேசங்கள் இஸ்லாமிய குடியரசுகளாகும்.
இந்த குடியரசுகளில் சோவியத் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் உற்பட ஏராளமான நவீன ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த குடியரசுகள் தனி நாடாக பிரிந்தால் அவைகள் பின்னாட்களில் தனது எதிரியான ஈரானுடன் நட்புறவை பேணும் என்றும் அமெரிக்கா கணிப்பிடவில்லை.
இந்த ஆறு இஸ்லாமிய குடியரசுகளையும் குறிவைத்து அவைகளை சோவியத்திலிருந்து பிரிப்பதற்கு பாகிஸ்தானின் புலனாய்வு துறை மூலமாக அமெரிக்கா பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டது.
அதற்காக கோடிக்கணக்கில் மொழிபெயர்ப்புடனான அல்-குர்ஆன் பிரதிகளை அந்தந்த தேசங்களின் மொழிகளில் அச்சடித்து அவைகளை அமெரிக்காவின் CIA யினர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI மூலமாக சோவியத்தின் ஆறு இஸ்லாமிய குடியரசுகளுக்கும் விநியோகம் செய்தனர்.
கொமியுனிச நாடான சோவியத்தில் பகிரங்கமாக மார்க்க கடமைகளை செய்வதற்கு இருந்த தடைகளை அகற்றி அங்குள்ள இஸ்லாமியர்களின் உணர்வுகளை சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக தூண்டுவதே இதன் நோக்கமாகும்.
அத்துடன் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ரஷ்ய படைகள் மேற்கொண்டுவந்த படுகொலைகளை அவ்வப்போதே புகைப்பட ஆதாரங்களுடன் இந்த ஆறு குடியரசுகளிலும் விநியோகம் செய்யப்பட்டு அங்குள்ள இஸ்லாமியர்களின் உணர்வுகள் ரஷ்யாவுக்கு எதிராக தூண்டப்பட்டது.
சோவியத் அதிபர் கோர்பச்சோவின் ஆட்சியில் 1991 இல் குடியரசுகள் தனிநாடாக பிரிந்தது சென்றதுடன் சோவியத் ஒன்றியம் என்ற மாபெரும் வல்லரசு வீழ்சியடைந்தது. இதன் மூலம் அமெரிக்கா தனது இலட்சியத்தை அடைந்தது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
தொடரும்...........
No comments