JobVibe.lk - Sri Lanka Job Portal

இஸ்ரேலின் ஆதிக்கமும், ஈரான் – துருக்கி கூட்டணியின் அவசியமும், பாலஸ்தீன பிரச்சினைக்கான தீர்வும்.

மத்திய கிழக்கில் இன்று நிலவும் பெரும்பாலான நெருக்கடிகளுக்கும், போர்களுக்கும், அரசியல் ஸ்திரமின்மைக்கும் அடிப்படைக் காரணம் அமெரிக்காவின் முழுமையான ஆதரவுடன் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு மற்றும் பிராந்திய மேலாதிக்கம் என்பது அனைவரும் அறிந்தது.  


பாலஸ்தீனப் பிரச்சினை தீர்க்கப்படாமல், காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க முற்படுவதும், அண்டை நாடுகளின் இறையாண்மையை மீறும் நடவடிக்கைகளும் அப்பிராந்தியத்தை நிரந்தர பதற்ற நிலைக்குள் தள்ளியுள்ளன.


இஸ்ரேல் பாலஸ்தீனத்தை மட்டுமன்றி, எதிர்காலத்தில் லெபனான், சிரியா உள்ளிட்ட பிற பகுதிகளிலும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த விரும்புகிறது. இந்த விரிவாக்கச் செயற்பாடு இரண்டாம் உலகப் போருக்கு முன்பு ஹிட்லர் முன்னெடுத்த கொள்கையை நினைவூட்டுகிறது. 


எந்த ஹிட்லர் மூலமாக அழிவினை எதிர்கொண்டு பாலஸ்தீனில் தஞ்சம் புகுந்தார்களோ, அதே ஹிட்லரின் கொள்கையினை பாலஸ்தீனர்களுக்கு எதிராக கடைப்பிடித்து வருகின்றனர்.  


இந்தப் போக்குகளுக்கு அமெரிக்காவின் அதிகாரமிக்க அரசியல்வாதிகளும் ஆதரவளித்து வருகின்றனர். இதன் விளைவாக, அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையானது உலக ஒழுங்குகளைவிட இஸ்ரேலின் நலன்களை முன்னிலைப்படுத்துகிறது. 


இந்த சூழ்நிலையில், மத்திய கிழக்கில் ஒரு புதிய அதிகாரச் சமநிலையை உருவாக்கக்கூடிய சக்திகளாக துருக்கியும், ஈரானும் உள்ளன. 


துருக்கியானது தனது அமெரிக்க எஜமானின் நாடித்துடிப்பினை அறிந்து செயற்படுவதனை தவிர்த்து ஈரானுடன் கைகோர்ப்பதன் மூலம் மத்திய கிழக்கில் அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தலாம். ஆனால் துருக்கியின் இரட்டை வேடம் அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறது.  


அதேவேளை, பாலஸ்தீன மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாமல், ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட ஒரு செயல்திறன் மிக்க பாலஸ்தீன அரசு உருவாக்கப்படாமல், மத்திய கிழக்கில் நிலையான அமைதி உருவாகாது. 


எனவே, அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிப்பது அல்லது புதிய பிராந்திய ஒப்பந்தங்களில் இணைவது போன்ற எந்த நடவடிக்கையும், பாலஸ்தீனர்களுக்கான நீதியான மற்றும் நீடித்த அரசியல் தீர்வினை வழங்காது. 


ஒருகாலத்தில் சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட இரு அரசுத் தீர்வானது காசா போருக்கு பின்பு மீண்டும் வலுவடைந்துள்ளது. பிராந்திய அரசியல் மாற்றங்கள், அமெரிக்காவின் செல்வாக்கில் ஏற்பட்ட சவால்கள் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான உலகளாவிய விமர்சனங்களின் அதிகரிப்பு ஆகியவை, மத்திய கிழக்கின் எதிர்கால அரசியல் அமைப்பை புதிய திசையில் நகர்த்தக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளன.


முகம்மத் இக்பால்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال