Breaking News

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் புத்தளம் மாணவனுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள்.

எம்.யூ.எம்.சனூன்

மலேசியாவின் ஜென்டிங் ஹைலாண்ட்ஸில் நடைபெற்ற (ஜூன் 04) சர்வதேச அபாகஸ் மற்றும் மனக்கணிதப் (International Abacus & Mental Arithmetic) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய புத்தளத்தைச் சேர்ந்த மாணவன் எம். எம்.சயான் அஹமட் சிறப்பான சாதனை படைத்து, இரு போட்டி பிரிவுகளில் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்றுள்ளார்.


12 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், தனது அபாரமான கணிதத் திறனையும் மனக்கணித ஆற்றலையும் வெளிப்படுத்தி அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.


புத்தளம் முல்லை நகர் ESM டவ்ன் பகுதியைச் சேர்ந்த முஹம்மது முஸ்தாக் மற்றும் ஹஸ்ஸா பானு தம்பதியினரின் புதல்வரான இவர், தற்போது புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.


குறுகிய காலப் பயிற்சியிலேயே சர்வதேச அரங்கில் தனது திறமையை நிரூபித்துள்ள இம்மாணவரின் வெற்றி, புத்தளம் மாவட்டத்திற்கும் வடமேல் மாகாணத்திற்கும் மட்டுமல்லாமல் முழு இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளது.


மேலும், இச்சாதனை இளம் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.


சர்வதேச மட்டத்தில் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள மாணவன் எம். எம்.சயான் அஹமதுக்கு கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.








No comments