JobVibe.lk - Sri Lanka Job Portal

காலி மாவட்ட மலையக தமிழ் மக்களின் வாழ்வியல் தொடர்பான ஊடகவியலாளர்களின் கள் விஜயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மலையக தமிழ் மக்கள் பற்றியும் அவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலைமை என்ன என்பதைக் குறித்து தெளிவூட்டும்  நிகழ்வு காலி மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பினால் (VOPP) அண்மையில் நடாத்தப்பட்டது அதன் தொடர்ச்சியாக  வெள்ளிக்கிழமை (2026 மே 29) காலி மாவட்டத்திலுள்ள தலங்கஹ தோட்டம் மற்றும் ஹெம்மேலிய தோட்டத்திற்கு ஊடகவியலாளர்களுடன் ஒரு கள ஆய்வு மற்றும் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டது


இந்தப் பயணத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் மலையகத் தமிழ் மக்களின் உண்மையான வாழ்வியல் நிலையை நேரில் கண்டு மிகுந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்தனர்.


 இன்றும் பல குடும்பங்கள் 10 × 10 அடி அளவிலான நெருக்கடியான லயன் அறைகளில் வாழ்கின்றனர். பல வீடுகளின் கூரைகள் பழைய தகரத் துண்டுகளால் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் சில வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையிலும் உள்ளதனையும் அவதானித்தனர்


தலங்கஹ தோட்டத்தின் கித்துலேன பிரிவில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஊடகவியலாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. அவர்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுவது காட்டுப்பகுதியை ஊடறுத்துச் செல்லும் குறுகிய மற்றும் பாதுகாப்பற்ற பாதையாகும். ஒரு தகப்பன் தனது மகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக அதிகாலை 2.00 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டு அந்தக் காட்டுப்பாதை வழியாக அழைத்துச் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தார். இது 21ஆம் நூற்றாண்டிலும் தொடரும் சமூக அநீதியின் கசப்பான உண்மையை வெளிப்படுத்துகிறது.


அதேபோன்று, ஹெம்மேலிய விலேகொட தனியார் தோட்டத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐந்து தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மலையக மக்களை அங்கிருந்து வெளியேற்ற தோட்ட உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் அநீதியையும் ஊடகவியலாளர்கள் நேரடியாகப் புரிந்துகொள்ள முடிந்தது. பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களின் நில மற்றும் குடியிருப்பு பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படாதிருப்பது ஒரு பாரிய சமூக நீதி பிரச்சினையாகும்.


இலங்கையின் தேயிலை மற்றும் பெருந்தோட்ட பொருளாதார வளர்ச்சிக்காக தலைமுறை தலைமுறையாக அர்ப்பணிப்புடன் உழைத்த மலையக தமிழ் மக்கள் இன்று கூட நில உரிமை, பாதுகாப்பான வீடுகள், அடிப்படை வசதிகள், தரமான கல்வி மற்றும் கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றிற்காக போராடி வருகின்றனர்.


மேற்படி களவிஜயத்தில் ஊடகவியலாளர்களுடன் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அன்டனி ஜேசுதாஸன், திட்ட பிரதானி லவீனா ஹசந்தி, காலி மாவட்ட இணைப்பாளர் கே. ஹர்ஷனி ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்தோடு தோட்டங்களின் குழுத் தலைவர்கள் மற்றும் தலைவியர்களின் தமது ஒத்துழைப்புகளை  வழங்கியமை குறிப்பிடத்தக்கது.













Previous Post Next Post

نموذج الاتصال