ஹஜ்ஜுப் பெருநாள் மனிதநேயம், தியாகம் மற்றும் நல்லிணக்கத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது..! - பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாக வரலாறையும், இறை கட்டளைக்கு முழுமையான கட்டுப்பாட்டையும் நினைவூட்டும் புனித ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்), உலக முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக ஒற்றுமையையும் மனிதநேய பண்புகளையும் வலுப்படுத்தும் மகத்தான நாளாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள விசேட பெருநாள் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இத்தகைய புனித நாளில் இலங்கையிலும் உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு தனது இதயம் கனிந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தியாகத்தின் உயர்ந்த தத்துவத்தையும், மனிதநேயத்தின் ஆழ்ந்த அர்த்தத்தையும் உலகுக்கு எடுத்துரைக்கும் இந்த புனித நாள், சமூக நல்லிணக்கம், இன ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிதலை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது.
எமது நாடு அரசியல் மற்றும் சமூக சவால்களை எதிர்நோக்கும் இக்காலகட்டத்தில், மக்கள் மத்தியில் அன்பு, கருணை மற்றும் ஒற்றுமை போன்ற பண்புகள் வலுப்பெற வேண்டும். இன, மத வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக செயற்பட வேண்டிய தருணமிது.
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் அனைத்து ஹாஜிமார்களின் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, நாட்டில் அமைதி, அபிவிருத்தி மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்த அல்லாஹ் அருள் புரியட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments