பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த ஆன்மீகப் பயணம்: ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டின் ஹஜ்ஜின் போது ஹஜ் யாத்ரீகர்களுக்கு சேவை செய்ய சவூதி அரேபியா தனது திறன்களைத் ஒன்று திரட்டுகிறது..!
பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த ஆன்மீகப் பயணம்: ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டின் ஹஜ்ஜின் போது ஹஜ் யாத்ரீகர்களுக்கு சேவை செய்ய சவூதி அரேபியா தனது திறன்களைத் ஒன்று திரட்டுகிறது..!
✍️எழுத்து - காலித் ஹமூத் அல்கஹ்தானி - இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
இரு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் பிரதமரான மாண்புமிகு பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் ஆகியோரின் தலைமையின் கீழ், சவூதி அரேபியா, இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சேவை செய்வதற்கு ஆழ்ந்த முக்கியத்துவம் அளிக்கிறது; அவர்களில் முதன்மையானவர்கள், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் புனித இல்லத்திற்கு வரும் ஹஜ் யாத்ரீகர்கள் ஆவர். ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டின் ஹஜ் பருவகாலம், ஹஜ் சூழலமைப்பை மேலும் மேம்படுத்துவதையும், அதன் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான தேசிய அணுகுமுறையின் தொடர்ச்சியாக அமைகிறது. இதன் மூலம் யாத்ரீகர்கள் தங்கள் சடங்குகளைப் பாதுகாப்பான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முழுமையாக ஒருங்கிணைந்த சூழலில் நிறைவேற்றுவதை உறுதி செய்கிறது.
ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டின் ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகள், ஒரு ஒருங்கிணைந்த செயல்பாட்டு அமைப்பிற்குள் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் இடையிலான நிறுவன ஒருங்கிணைப்பின் அடிப்படையில், சவூதி அரேபியா முழுவதும் ஒரு உயர் மட்ட தயார்நிலையைப் பிரதிபலிக்கின்றன. இந்த உலகளாவிய நிகழ்வை நிர்வகிப்பதில் ஒரு உயர் மட்ட தேசிய ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், பாதுகாப்பு, சுகாதாரம், சேவை மற்றும் தளவாடத் துறைகளின் தீவிரப் பங்கேற்புடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சவூதி அரேபியாவிற்கு வெளியே இருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்தச் சூழலில், உச்ச நேரங்களில் பாதுகாப்பையும் தடையற்ற ஓட்டத்தையும் உறுதிசெய்யும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் ஆதரவுடன், துல்லியமான முன்கூட்டிய திட்டங்கள் மூலம் புனிதத் தலங்களுக்குள் ஹஜ் யாத்ரீகர்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்துவதிலும், கூட்டத்தை நிர்வகிப்பதிலும் பாதுகாப்புத் துறை ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.
மக்காவிலும் புனிதத் தலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களின் தயார்நிலையை மேம்படுத்துவதன் மூலமும், 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு மருத்துவக் குழுக்களைப் பணியமர்த்துவதன் மூலமும், அவசர நிகழ்வுகளுக்கு விரைவாகப் பதிலளிக்கக்கூடிய மேம்பட்ட அவசரப் பிரிவுகளை வழங்குவதன் மூலமும், சவூதி அரேபியா சுகாதாரத் துறையில் சிறப்பான கவனம் செலுத்தியுள்ளது. இது அனைத்து யாத்ரீகர்களுக்கும் விரிவான சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறையில், புனிதத் தலங்களுக்குச் செல்லும் சாலைகளின் விரிவாக்கம், பொதுப் போக்குவரத்து வலையமைப்புகளின் நவீனமயமாக்கல் மற்றும் ஷட்டில் பேருந்து அமைப்புகளின் செயல்படுத்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தரமான வளர்ச்சியை ஹஜ் அமைப்பு கண்டுள்ளது. மினா, அரஃபாத் மற்றும் முஸ்தலிஃபா இடையே ஹஜ் யாத்ரீகர்களை ஏற்றிச் செல்வதில் “மஷாயிர்” ரயில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது. அதே சமயம், “ஹரமைன்” அதிவேக ரயில் மக்கா, மதீனா மற்றும் ஜித்தாவை கற்பனை பண்ணிப் பார்க்க முடியாதளவு குறுகிய நேரத்தில் இணைத்து, யாத்ரீகர்களின் பயண அனுபவத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் வழங்குகிறது.
டிஜிட்டல் துறையில், அனுமதிகளை வழங்குதல், சேவைகளை ஒழுங்கமைத்தல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களிடையே தரவுகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கான மேம்பட்ட மின்னணுத் தளங்கள் மூலம், ஸ்மார்ட் ஹஜ் நிர்வாகத்தில் சவூதி அரேபியா தனது உலகளாவிய தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கூடுதலாக, கூட்ட நெரிசலை நிர்வகிக்கவும், அடர்த்தி நிலைகளைக் கணிக்கவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவுப் பகுப்பாய்வு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் செயல்பாட்டுத் திறனும் சேவைத் தரமும் மேம்படுத்தப்படுகின்றன.
இரு புனித மசூதிகளின் பாதுகாவலரின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான விருந்தினர்கள் திட்டம், பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்களை இரு புனித மசூதிகளின் பாதுகாவலரின் செலவில் உபசரிப்பதன் மூலம், சவூதி அரேபியாவின் கொள்கையின் மனிதாபிமானப் பரிமாணத்தைப் பிரதிபலிக்கிறது. இது இஸ்லாமிய சகோதரத்துவத்தின் விழுமியங்களையும், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்குச் சேவை செய்வதில் சவூதி அரேபியாவின் முன்னணிப் பங்கையும் வலுப்படுத்துகிறது.
இந்த முயற்சிகள் சவூதி விஷன் 2030 உடன் முழுமையாக ஒத்துப்போகின்றன. இத்திட்டத்தின் நோக்கங்களுக்கு இணங்க, உள்கட்டமைப்பு மேம்பாடு, அதிகரித்த திறன், நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல் மற்றும் சேவைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் யாத்ரீகர்களுக்குச் சேவை செய்வதைத் தனது திட்டங்களின் மையத் தூணாக இது கொண்டுள்ளது.
சவூதி அரேபியா, ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டின் ஹஜ்ஜை வரவேற்கும் வேளையில், யாத்ரீகர்களுக்குச் சேவை செய்வது ஒரு புனிதமான மார்க்க மற்றும் வரலாற்றுப் பொறுப்பு என்றும், அது ஒவ்வொரு ஆண்டும் ஒரு வளர்ந்து வரும் நிறுவன, தொழில்நுட்ப மற்றும் மனிதாபிமான அமைப்பின் மூலம் புதுப்பிக்கப்படுகிறது என்றும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்தத் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் மூலம், ஹஜ் யாத்திரையானது பெரும் மனிதக் கூட்டங்களை நிர்வகிப்பதில் ஒரு தனித்துவமான உலகளாவிய முன்மாதிரியாகத் திகழ்கிறது; இது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சேவை செய்வதில் சவூதி அரேபியாவின் தலைமைத்துவத்தை உள்ளடக்கி, உலகெங்கிலும் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பின் விழுமியங்களை ஊக்குவிக்கிறது.

No comments