கல்வித்துறையில் தடம் பதித்த தலைசிறந்த ஆளுமை – எம்.ஏ.எம். அனீஸ்- (SLEAS-1) 2026.04.22 இன்று பணியிடமாற்றம் பெறுச் செல்கின்றார்.
புத்தளம் கல்வி வலயத்தில் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த எம்.ஏ.எம். அனீஸ் அவர்கள் பணியிடமாற்றம் பெறுகின்றார் என்ற செய்தி, புத்தளம் கல்விச் சமூகத்தைப் பொறுத்தவரை ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
இள வயதிலேயே இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து தனது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையின் மூலம் கல்வித்துறையில் முன்னேறி உயர்ந்த நிலையை அடைந்தவராவார். புத்தளம் கல்வி வலயத்தில் தனது பணிக்காலத்தில் உதவி கல்விப் பணிப்பாளர் (கணிதம்), உதவி கல்விப் பணிப்பாளர் (தகவல் தொழினுட்பம்), கோட்டக் கல்விப் பணிப்பாளர் (புத்தளம் தெற்கு, கல்பிட்டி), பிரதி கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை திறம்பட செயற்படுத்தி ஒரு முன்மாதிரியான நிர்வாகியாகத் திகழ்கிறார்.
கணிதப் பாடத்திற்கான பணிப்பாளராகவும் கல்வி அபிவிருத்திப் பணிப்பாளராகவும் செயற்பட்ட காலப்பகுதியில், வலயத்தின் கல்வித்தரத்தை உயர்த்துவதில் அவர் நல்கிய பங்களிப்பு போற்றுதலுக்குரியது. குறிப்பாக, கணிதப்பாடத்தின் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்காக அவரது சிறந்த திட்டமிடலின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முக்கியமான பல மாற்றங்களை ஏற்படுத்தின.
அவரது நிர்வாகத்திறன், திட்டமிடல் திறன் மற்றும் செயலாக்கத் திறன் ஆகியவை புத்தளம் வலயத்தின் கல்வி வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளமாக அமைந்துள்ளன என்றால் அது மிகையாகாது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனான அவரது ஆளிடைத்தொடர்பு கல்விச் சாதனைகள் பலவற்றை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தியுள்ளது.
மேலும், அனைவரையும் சமமாக மதித்து நடத்தும் அவரது மனிதநேய பண்பு, அவரை ஒரு சிறந்த நிர்வாகியாக மட்டுமல்லாது, ஒரு முன்னுதாரணமான தலைவராகவும் நிலைநிறுத்தியுள்ளது. பதவி வேறுபாடுகளைக் கருத்திற்கொள்ளாது அனைவரையும் அவர் கண்ணியமாக அணுகிய விதம் போற்றத்தக்கது.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து மனம்திறந்து பகிர்ந்து கொள்ளக்கூடிய நம்பிக்கைக்குரிய இடமாக அவரது அலுவலகம் விளங்கியது. அவ்வப்போது ஏற்பட்ட சிக்கல்களுக்கு உடனடி தீர்வுகளை வழங்க முனைந்த அவரது அணுகுமுறை, கல்வி நிர்வாகத்தில் மனிதநேயத்தின் வகிபாகத்தை வலியுறுத்துவதாக அமைந்தது.
தனக்கு நேர்ந்த மனகசப்புகள், தான் முகங்கொடுத்த சவால்கள் மற்றும் சிரமங்களைக் கூட மனதில் வைத்துக் கொள்ளாமல், இன்முகத்துடன் செயற்பட்ட அவரது குணநலன், அவரை அனைவரும் மதிக்கும் ஒருவராக மாற்றியுள்ளது.
அவரது பணியிடமாற்றம், அவருடன் இணைந்து பணியாற்றிய கல்வி சமூகத்திற்கு பாரியதொரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புவது சுலபமானதல்ல.
அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவையும் உயர்ந்த குணநலன்களும் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவையாகும்.
அவர் தனது எதிர்காலப் பணிகளிலும் மேலும் சிறந்து விளங்கி பெரும் வெற்றிகளை அடைய வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
யா அல்லாஹ்! அவருக்கு உன்னுடைய அருளையும் பாதுகாப்பையும் வழங்கி, அவருடைய எதிர்காலப் பயணத்தை வெற்றியுடனும் சிறப்புடனும் நடத்தி அருள்புரிவாயாக.
வேப்பங்குளம்
நௌபர் ஏ. கபூர் (SLTAS - 1)

No comments