Breaking News

வக்கிர சிந்தனையும், மற்றவர்களை அவமானப்படுத்துவதால் அடைகின்ற சிற்றின்பமும்.

அரசியலுக்கும், தனிப்பட்ட விடயங்களுக்கும் வேறுபாடுகளை அறியாதவர்கள் மற்றும் மற்றவர்களை அவமானப்படுத்துவதன் மூலம் சிற்றின்பம் காண்கின்ற கொடூரமான வக்கிர புத்தி உள்ளவர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


கடன் கொடுத்தல், வாங்குதல் மற்றும் மீள கடனை செலுத்த முடியாமை என்பன மனித வாழ்வில் சர்வசாதாரனமாக அன்றாடம் நடைபெறும் விடயம். ஆனால் எந்தவொரு மனிதருக்கும் நடந்திராத ஒன்று நடைபெற்றது போன்று அதனை பெரிதுபடுத்தி முகநூலில் பதிவிட்டு அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களது கொடூரமான மனோநிலைகளை வெளிப்படுத்துகின்றனர்.  


அரசியல்வாதிகளும் மனிதர்கள். அவர்கள் அவுலியாக்களோ, புனிதர்களோ அல்ல. அவர்களுக்கும் மானம், சுய கௌரவம், விருப்பு, வெறுப்பு உள்ளது. இன்று அவர்களை நாங்கள் அவமானப்படுத்துகிறோம். இதற்கு பதிலாக இறைவனால் நாளைக்கு நாங்களும் அவமானப்படுத்தப்பட மாட்டோம் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது ? 


பூனைக்கு விளையாட்டு, எலிக்கு மரணம் என்பார்கள். அதுபோல் சமூகவலைத் தளங்களில் மற்றவர்களை அவமானப்படுத்துவதன் மூலம், அவமானப்படுபவர்களுக்கும் அவர்களுக்கு பின்னால் உள்ள குடும்பத்தினர்களுக்கும் ஏற்படுகின்ற மனோ உளைச்சல்களை பற்றி யாரும் சிந்திப்பதில்லை. 


நாளை ஒருநாள் எங்களுக்கு அல்லது எங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் ஏதோ ஒருவகையில் அவமானப்படுவதன் மூலமாக மாத்திரமே இதன் தன்மையை உணர முடியும். 


அரசியல்வாதிகள் அரசியலில் விடுகின்ற குற்றங்களுக்காக நாங்கள் அரசியல் ரீதியாக விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் தனிப்பட்ட ரீதியில் அவமானப்படுத்துவதுதான் மிகக் கேவலமான வக்கிர புத்தியாகும். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments