மு.கா இணைத் தலைமைத்துவ விலகலும், சாய்ந்தமருது பிரகடனமும்.
தலைவரின் மரணத்திற்கு பின்பு கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ரவூப் ஹக்கீம், பேரியல் அஷ்ரப் ஆகிய இருவரும் முஸ்லிம் காங்கிரசின் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். அத்துடன் இருவருக்கும் சந்திரிக்காவினால் முழு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இங்கே ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு போட்டியாக கட்சிக்குள் அதிகார சமநிலையை ஏற்படுத்தும் நோக்கிலேயே பேரியலுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சந்திரிக்காவின் கட்சிக்குள் செல்வாக்குள்ள சிங்கள உறுப்பினர்கள் பலரும் அமைச்சர் பதவிக்காக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவர்களை புறக்கணித்துவிட்டு ஒரு சிறுபான்மை கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள இரண்டு அமைச்சர் பதவிகளை வலிந்து வழங்குவதென்பது சாதாரண விடையமல்ல.
முஸ்லிம் காங்கிரசுக்கு இணைத் தலைமைத்துவம் வகிப்பதனை முஸ்லிம் மக்களோ, போராளிகளோ ஒருபொழுதும் ஏற்றுக்கொண்டதில்லை. இந்நிலையில் சாய்ந்தமருதின் “உப பிரதேச” செயலகத்தினை “பிரதேச” செயலகமாக தரம் உயர்த்தும் வைபவம் சாய்ந்தமருது ஜும்மாஆ பள்ளிவாசலுக்கு முன்பாக 04.02.2001 அன்று நடைபெற்றது.
இவ்வைபவத்துக்கு பிரதம அதீதிகளாக முஸ்லிம் காங்கிரசின் இணைத் தலைவர்கள் இருவரும் வருகை தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பேரியல் அஸ்ரப் அவர்களும் அவரை ஆதரித்த பிரமுகர்களும் குறித்த நேரத்துக்கு வருகைதந்து மேடையை அலங்கரித்தனர்.
பின்பு ரவூப் ஹக்கீம் மேடையை நோக்கி வருகைதந்த போது பெரும் ஆரவாரம் ஏற்பட்டது. நான் உட்பட ஆயிரகணக்கான முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மேடைக்கு முன்பாக ஒன்றுதிரண்டு தங்களது மனதில் உள்ளதனை கொட்டித் தீர்த்தனர்.
அதில் மு.கா க்கு தலைவராக ஒருவரே இருக்க வேண்டுமென்றும், அது ரவூப் ஹக்கீம் மாத்திரமே இருக்க வேண்டுமென்றும், இணைத் தலைமைத்துவம் சாத்தியமற்றது என்றும், உடனடியாக பேரியல் அஷ்ரப் விலகிச்செல்ல வேண்டுமென்றும் கோஷமெழுப்பினர்.
அன்றைய சாய்ந்தமருது மு.கா அமைப்பாளர் புர்கான் அவர்கள் மேடையில் இருந்த மைக்கை எடுத்து முஸ்லிம் காங்கிரசின் ஒரே தலைவர் ரவூப் ஹக்கீம் என்று முழங்கினார். மக்கள் அனைவரும் அல்லாஹ் அக்பர் என்றனர்.
அன்றைய கூட்டத்தின்போது மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலித்ததும் பேரியல் அஸ்ரப் மற்றும் அவருடன் வருகைதந்த அனைவரும் மேடையைவிட்டு இறங்கிச் சென்றனர். பின்பு அவர்கள் மீண்டும் மேடைக்கு வரவேயில்லை.
தொடர்ந்து ரவூப் ஹக்கீம் அவர்களின் பிரசன்னத்துடன் கூட்டம் நடைபெற்றது. அதில் ரவூப் ஹக்கீம்தான் முஸ்லிம் காங்கிரசின் ஏக தலைவர் என்று மக்களால் பிரகடனம் செய்யப்பட்டது.
போராளிகளின் மனோநிலையை நேரடியாக உணர்ந்துகொள்ளும் சந்தர்ப்பமாக சாய்ந்தமருதின் அன்றைய கள நிலவரம் அமைந்திருந்தது.
உடனடியாக கொழும்புக்கு சென்று தனது இணைத் தலைமை பதவியிலிருந்து பேரியல் அஷ்ரப் அவர்கள் விலகியதுடன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதவி ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு ஏகமனதாக வழங்கப்பட்டதான செய்தி 05.02.2001 அன்று இரவு ஒன்பது மணிக்கு வெளியானது. இது ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு கடுப்பினை ஏற்படுத்தியது.
பேரியல் அஷ்ரப் அவர்கள் இணைத் தலைமை பதவியில் இருந்து விலகியதன் பின்பு மு.காங்கிரசுடன் இணைந்து செயற்படவில்லை. அவ்வாறு செயற்படுவதற்கு பேரியல் விரும்பியிருந்தாலும் அவரை சுற்றி இருந்தவர்கள் அதனை அனுமதிக்கவில்லை.
அதுபோல் பேரியல் அஷ்ரப்பை முஸ்லிம் காங்கிரசில் இணைத்து செயற்படுவதற்கு ரவூப் ஹக்கீமை சுற்றி இருந்தவர்களும் விரும்பியிருக்கவில்லை. பின்பு பேரியல் உட்பட அவரை ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் கட்சியை விட்டு விலகிச்சென்றனர்.
தலைவர் அஸ்ரபின் மரணத்துக்கு பின்பு முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் முதலாவது பாரிய பிளவு இதுவாகும். இவர்களுக்கு பின்னணியில் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சி அதிகாரம் இருந்ததன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் தனது பயணத்தில் பாரிய தடைகளையும், சவால்களையும் எதிர்கொண்டது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments