உலமாக்களை உருவாக்குவதில் அதீத ஆர்வத்துடன் செயற்பட்டவர் அபூஉபைதா மதனி; அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா அனுதாபம்.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
எமது நாட்டில் அதிகமான உலமாக்களையும் ஹாபிழ்களையும் உருவாக்க வேண்டும் என்பதில் அஷ்ஷெய்க் அபூ உபைதா மதனி அதீத ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தார் என்று அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.
மருதமுனையை சேர்ந்த மூத்த உலமாவான அஷ்ஷெய்க் அபூ உபைதா மதனி, நேற்று செவ்வாயன்று (19) சவூதி அரேபியாவில் காலமானார். இதனையிட்டு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம் ஹாஷிம் மதனி, அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல். நாஸிர் கனி ஹாமி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;
கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் மௌலவியாகப் பட்டம் பெற்று, பின்னர் சஊதியிலுள்ள மதீனா இஸ்லாமிய்யா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த இவர், மருதமுனை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராகவும், அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் உப செயலாளராகவும், நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் நீண்ட காலம் பதவி வகித்து இப்பிராந்தியத்துக்கு அன்மீக ரீதியாகவும், கல்வி மற்றும் சமூக ரீதியாகவும் பல்வேறு சேவைகளை வழங்கியுள்ளார்.
மருதமுனை அந்நஹ்ழா அறபுக் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரான இவர் அக்கல்லூரியின் முதலாவது அதிபராகவும் கடமையாற்றினார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள மூத்த உலமாக்களோடு இணைந்து மாவட்டத்திலும் அதற்கு வெளியிலும் பிணக்குகளைத் தீர்ப்பதில் அயராது அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார். அதிகமான உலமாக்களையும் ஹாபிழ்களையும் உருவாக்குவதில் அதீத ஆர்வமுடையவராக திகழ்ந்த அபூஉபைதா மதனி அவர்கள், தனது பிள்ளைகளையும் அதே வழியில் உருவாக்கினார்- என்று அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா மேலும் தெரிவித்துள்ளது.
No comments