இன நல்லிணக்கத்துக்கு முன்னுதாரணமாகச் செயற்பட்டவர் முன்னாள் அமைச்சர் யூ.எல்.எம் பாரூக்
(இன்று ஆகஸ்ட் 06 புதன்கிழமை அவரது நான்கு வருடப் பூர்த்தியை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது)
யூனுஸ் லெப்பே முஹம்மட் பாரூக்கின் பெயர் கேகாலை மாவட்டத்தில் முதல் சிறுபான்மை இன பாராளுமன்ற உறுப்பினர் என வரலாற்றில் பதிவாகியுள்ளது.
யார் இந்த பாரூக்? பணக்கார குடும்ப மொன்றில் பிறந்தவரா? அல்லது உயர் கல்வித் தரத்தைப் பெற்றவரா? எப்படி அவருக்கு இலங்கை பாராளுமன்றத்தை 16 வருட காலமாக பிரதிநிதித்துவப் படுத்தும் வாய்ப்புக் கிடைத்தது? மர்ஹும் பாரூக் இவ்வுலகை விட்டுப் பிரிந்து நான்கு வருடங்கள் நிறைவு பெறுவது ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதியாகும்.
அன்னாரின் நினைவு தினத்தன்று இது பற்றி ஆராய்வதே சிறந்தது எனக் கருதுகின்றேன்.
கேகாலை மாவட்டம் இரு கோரளைகளைக் கொண்டது. நான்கு கோரளை, மூன்று கோரளை என்ற இரு கோரளையிலும் முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் பகுதி நான்கு கோரளையாகும். இந்த மாவட்டத்திலிருந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வருவதாயின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கேகாலை மாவட்டத்திலிருந்தே வந்திருக்க வேண்டும். எனினும், ஐந்து சதவீதத்துக்குக் குறைந்த முஸ்லிம்கள் வாழும் மூன்று கோரளைலிருந்து மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் வந்தது ஒரு பெரும் சாதனையே. சாதனையின் உரிமையாளர் தான் நாம் பேசும் கதாநாயகர் மர்ஹும் யூ.எல்.எம். பாரூக்.
கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்லையில் அமைந்துள்ள பாரம்பரிய முஸ்லிம் கிராமமான கன்னத்தோட்டையில் இடதுசாரி குடும்பத்தைச் சேர்ந்த யூ.எல்.எம். பாரூக், தனது இளமைப் பருவத்திலிருந்தே அரசியலில் அக்கறை காட்டி வந்தார்.
1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இடதுசாரிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட கலாநிதி என்.எம். பெரேரா பிரதிநிதித்துவப்படுத்திய ருவன்வெல்லைத் தேர்தல் தொகுதியில் போட்டியிடுமாறு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கேட்கப்பட்டார்.
கொழும்பில் அரசியல் செய்து கொண்டிருந்த பிரேமதாச, ருவன்வெல்லையில் துணிச்சலோடு போட்டியிட்டார். பிரேமதாஸாவின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட இரு முக்கிய இளைஞர்கள் வெட்டித் தென்பட்டனர்.
அவர்களில் ஒருவர் யூ.எம். பாரூக். மற்றவர் ஹேமபால தசநாயக்க.
ஹெமபால தசநாயக்க சப்ரகமுவ மாகாண சபையின் முதலாவது தவிசாளராகப் பணிபுரித்தவர். யூ.எல்.எம். பாரூக் பாராளுமன்ற உறுப்பினராக, பின்பு அமைச்சராக, பணி புரிந்தவர். இரு இளைஞர்களும் பிரதேசத்தில் கடினமாக பிரமதாசவை வெற்றி பெறுவதற்கு உழைத்தனர்.
பிரேமதாஸ தேர்தலில் வெற்றி பெறாத போதும் ருவெல்லைத் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பி.சி. இம்புலானவுடன் பாரூக் நெருங்கிச் செயற்பட்டார்.
1960 ஆம் ஆண்டு ஜூலை தேர்தலில் வெற்றிபெற்ற இம்புலான, தனது பிரத்தியேகச் செயலாளராக யூ.எல்.எம். பாரூக் கை நியமித்தார். அப்போது அவருக்கு வயது 21ஆகும். மர்ஹும் பாரூக் 1964 ஆம் ஆண்டு ருவென்வெல்லை மெகடபத்த சபைக்கு கிராம சபைக்கு போட்டியிட்டார். ஐ.தே.க சார்பில் பாரூக் போட்டியிடுகின்ற அதேநேரம், தன்னுடைய மூத்த சகோதரர் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் போட்டியிட்டார். தனது மூத்த சகோதரரைத் தோற்கடித்து கிராம சபைக்கு பாரூக் தெரிவானார். அன்றிலிருந்து தொடர்ந்து கிராம சபை முறை ஒழிக்கப்படும் வரை கிராமசபை அங்கத்தவராக பாரூக் தெரிவானார்.
1982 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.தே.க. அரசு உருவாக்கிய மாவட்ட அபிவிருத்தி சபைக்காக கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்டு அல்ஹாஜ் பாரூக் தெரிவானார்.
ருவன்வெல்லை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பி.சி. இம்புலான, மாகாண சபையின் முறையின் கீழ் உருவாக்கப்பட்ட ஆளுனர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதற்காக அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தபோது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ருவன்வெல்லை ஐ.தே.க அதிகார சபையில் கீழ் இரகசிய வாக்கெடுப்பில் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு ஐ.தே.க. செயலாளர் ரஞ்சன் விஜேரத்ன தீர்மானித்தார். இதன்படி பேருவளை, ருவன்வெல்லைத் தொகுதிகளுக்கு எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டனர். பேருவளையில் இம்தியாஸ் பாகீர் மாகார் இந்த முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்டார். ருவன்வெல்லையில் கட்சி செயற்பாட்டாளர் 27 பேருக்கிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் போட்டியிட்ட ஒரேயொரு முஸ்லிமான பாரூக், அதிகப்படியான வாக்களைப் பெற்றுத் தெரிவானார். மர்ஹும் பாரூக் கின் 47ஆவது பிறந்த தினமான 1988 ஜூன் 20 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றமை ஒரு விசேட நிகழ்வாகும்.
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட யூ.எல்.எம் பாரூக், 38,857 வாக்களைப் பெற்று பாராளுமன்றத்துக்கு மீண்டும் தெரிவானார்.
இத்தேர்தலில் இவர், ருவன்வெல்லைத் தொகுதியில் மட்டும் 23,000 விருப்பு வாக்குகளைப் பெற்றார். ருவன்வெல்லை தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 49,325 ஆகும். இதில் முஸ்லிம்கள் மூன்று சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி பிரமதாச அரசில் இவர், போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார் .
போக்குவரத்து அமைச்சு இலங்கையில் போக்குவரத்து சபைக்குரிய பஸ் டிபோக்களை மக்கள் பயன்படுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தின்படி அப்போதைய போக்குவரத்து அமைச்சராக இருந்த விஜேபால மெண்டிஸ் எடுத்த தீர்மானத்தின்படி வடகிழக்கு மாகாணகளில் போக்குவரத்து நடவடிக்கைகள் யூ.எல்.எம். பாரூக்கின் பொறுப்பில் விடப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த இந்த இரு மாவட்டங்களிலும் இலங்கை போக்குவரத்து சேவைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவர் செய்த பெரும் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அந்த அமைச்சின் இணைப்புச் செயலாளராகப் பணிபுரிந்த எனக்கு, வடகிழக்கு தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களை மறந்து எடுத்த ஒத்துழைப்பு இன்றும் இரு மாகாணங்களிலும் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கு அளித்த ஒத்துழைப்பு என் நினைவுக்கு இன்றும் வருகிறது. 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியுற்ற போதும் இவர் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்டு, முன்னைய விட கூடுதலான அதாவது 47,765 விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
இவர் சிறந்த சிங்களப் பேச்சாளராக இருப்பதனால், எதிர்க்கட்சி தரப்பில் ஒரு முக்கிய நட்சத்திர பேச்சளராகக் கருதப்பட்டார். 2001 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் அரசின் கீழ் மத்திய போக்குவரத்து சபை, ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் இவராவார்.
பாரூக், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்த காலத்தில் கேகாலை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்களின் கல்வி அபிவிருத்திக்காக பல பங்களிப்புகளைச் செய்தார். குறிப்பாக, முஸ்லிம் பாடசாலைகளினுடைய வளங்களை அதிகரிப்பதற்கு அப்போதைய சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக இருந்த காலஞ்சென்ற ஜயதிலக பொடிநிலமே ஊடாக கேகாலை மாவட்டத்தில் 15க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு ஒரே நாளில் கட்டடங்களை நிர்மாணிக்க நிதி ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.
இதனால் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டிருந்த பாடசாலைகளுக்கு கட்டிட வசதிகளும் கிடைத்தன. கேகாலை மாவட்ட முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கம் ஒன்றை அமைத்து அதன் தலைவராக செயற்பட்ட மர்ஹும் பாரூக், கட்சி பேதமின்றி பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உதவினார். 2001 ஆம் ஆண்டு தேர்தலில் கட்சியின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிட வில்லை., தேர்தலில் போட்டியிட்ட கபீர் ஹாசிம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பளித்தார். கேகாலை மாவட்டத்தில் பெரும்பான்மை பௌத்த மக்களது பிரதிநிதித்துவத்திற்கு இடமளிப்பதற்காக இவர் அந்த விட்டுக்கொடுப்பை செய்தார். கட்சியின் கோரிக்கையை ஏற்று இந்த விட்டுக் கொடுப்பை செய்ததன் மூலம் கபீர் ஹாசிமுக்கு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி வருகிறார். பாராளுமன்ற அரசியலில் இருந்து ஒதுங்கிய மர்ஹும் பாரூக், இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தைக் கட்டி எழுப்புவதற்காக யூ.எல்.எம்.பாரூக் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி மாவட்டத்தில் பெரும் சமூகப் பணிகளை முன்னெடுத்தார். இன, மத, பேதமின்றி, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வாழும் மக்களுக்கு உணவு பொட்டலங்கள், இலவச பாடப் புத்தகங்கள், போஷாக்குப் பொதிகள், மூக்குக் கண்ணாடிகள், அங்கவீனர்களுக்கான வங்கி கணக்குகளை திறத்தல் போன்ற சமூகப் பணிகளை இவர், சுமார் 30 வருட காலமாகச் செய்து வந்தார். ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்ட மர்ஹும் பாரூக், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, கிராமிய பாடசாலையில் ஜீ.சீ.ஈ. சாதாரண தரம் வரை படித்து, உயர்ந்த நிலைக்கு வருவதற்கு காரணம், இன, மத பேதமற்ற சேவையாகும். ருவன்வெல்ல பிரதேசத்தில் வாழ்ந்த மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்தப்பிக்குகள், உலமாக்கள், இந்து கத்தோலிக்க மத தலைவர்கள் இவருக்கு வழங்கிய ஆலோசனை அவரது வெற்றிக்கு காரணமாகும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யூ.எல்.எம் பாரூக் பற்றி தெரிவித்த குறிப்புடன் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
அரசியலில் அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாரமும் பனியனும் அணிந்து சாதாரண மக்கள் மத்தியில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்த யூ.எல்.எம்.பாரூக இனங்களுக்கிடையே சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சௌஜன்யத்தைக் கட்டி எழுப்பிய ஒரு கால கண்ணாடியாகும். எனக்குப் பிறகு தன் மகனான நிஹால் பாரூக்கை அரசியலில் ஈடுபடுத்தி, சப்ரகமுவ மாகாண சபைக்கு நான்கு முறை தொடர்ந்து தெரிவாவதற்கு அவர் தலைமைத்துவம் வழங்கினார். இன்று மூன்று சதவீதம் முஸ்லிம்கள் வாழும் ருவன்வெல்ல தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளராக நிஹால் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். தந்தையின் பணியை முன்னெடுத்துச் செல்லும் நிஹால் பாரூக் மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம்கள் விஷேடமாக பௌத்த மக்கள் மத்தியில் நிறைந்த ஆதரவு காணப்படுகிறது. மர்ஹும் பாரூக் அவர்கள் எம்மை விட்டு பிரிந்து நான்கு வருடங்கள் ஆகின்றது. அவரது மறுமை வாழ்க்கைக்காக நாம் பிரார்த்திப்போம்.
(சிரேஷ்ட ஊடகவியலாளர், கலாபூஷணம் என்.எம்.அமீன்)
No comments