தமிழர்களின் ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்கலாமா ? - யார் இந்த தமிழரசு கட்சி ?
இலங்கை தமிழரசு கட்சியின் ஹர்த்தாலினால் எதனையும் சாதித்துவிடப் போவதில்லை என்பது தெரிந்த விடயம். ஆனால் தங்கள் இனத்துக்கு ஏற்பட்ட அநீதியினை உலகம் அறியச் செய்யும்பொருட்டு கவன ஈர்ப்பாக இதனை கருதலாம். இது அவர்களது அரசியல்.
ஆனால் இந்த ஹர்த்தாலுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாக அறிக்கை வெளியிட்டதுதான் சிலருக்கு பிரச்சினை. இது முஸ்லிம் காங்கிரஸ் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியாகும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் பல்லவியை மாற்றி வாசித்திருப்பார்கள்.
இங்கே ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதல்ல விடயம். முஸ்லிம் காங்கிரஸ் என்ன தீர்மானிக்கின்றது என்பதுதான் சிலருக்கு பிரச்சினை என்பது புரிகிறது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் முஸ்லிம்களை இலக்குவைத்து பல சதிப்பின்னல்கள் பின்னப்பட்டது. அதில் ஒன்றுதான் விகிதாசார தேர்தல் முறைமையை ஒழித்துவிட்டு தொகுதிவாரி முறைமைக்கு செல்வதாகும். தொகுதிவாரி முறையில் தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் நினைத்திருந்தால் அதற்கு ஆதரவு வழங்கியிருக்கலாம். ஆனால் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து அவர்களும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்காக இந்தியாவின் உதவியை நாடினர். அது முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தது.
முஸ்லிம்களுக்கு அநீதிகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற தமிழரசு கட்சியின் மிதவாத தலைவர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த வரலாற்றினை மறக்க முடியாது.
ஜனாஸா எரிக்கப்பட்டபோது தமிழ் தலைவர்கள் அதற்காக பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் உரத்து குரல் கொடுத்ததுடன், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டனர்.
தமிழர்கள் மத்தியில் ஆயுத விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பு வடகிழக்கு முஸ்லிம்களின் அரசியலானது UNP, SLFP போன்று இலங்கை தமிழரசு கட்சி சார்ந்து இருந்தது.
தமிழரசு கட்சி மூலமாக பலர் தேர்தலில் போட்டியிட்டனர். அந்தவகையில் எம்.எம். முஸ்தபா பொத்துவில், எம்.ஈ.எச். மொகமட் அலி மூதூர், எம்.எஸ். காரியப்பர் கல்முனை ஆகிய தொகுதிகளிலிருந்து இலங்கை தமிழரசு கட்சி சார்பாக பாராளுமன்றம் சென்றிருந்தார்கள்.
தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அரசியல் பாசறையும் இலங்கை தமிழரசு கட்சி என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?
தமிழர்களும், முஸ்லிம்களும் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இனங்கள். ஒரு சிறுபான்மை இனம் அநீதிக்கு எதிராக போராடுகின்றபோது இன்னுமொரு சிறுபான்மை இனம் அதற்காக ஆதரவு கொடுப்பதுதான் ஆரோக்கியமாகும்.
ஏனெனில் நாளை முஸ்லிம்களுக்கு ஏதும் அநீதிகள் ஏற்பட்டு இதுபோன்ற ஹர்த்தால்கள் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டால், தமிழர்களின் ஆதரவினை எதிர்பார்க்கவேண்டி ஏற்படும்.
இன்று ஆதரவு வழங்காவிட்டால், நாளை என்ன முகத்தோடு அவர்களது ஆதரவினை எதிர்பார்பது ?
எனவே நாங்கள் குறுகிய பார்வையில் இல்லாமல் தூர நோக்கோடு சிந்திப்பதுதான் ஆரோக்கியமானதாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments