Breaking News

புள்ளிகள் அடிப்படையிலான போட்டித் தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட இருந்த பரிசுத்தொகையினை புதிய காற்பந்தாட்ட லீக் வழங்கவுள்ளது.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் கடந்த நிர்வாகத்தினால் நடாத்தப்பட்ட புள்ளிகள் அடிப்படையிலான போட்டித் தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட இருந்த பரிசுத்தொகையினை புதிய காற்பந்தாட்ட லீக் வழங்குவதற்கு முன் வந்திருப்பதாக அதன் தலைவர் முஹம்மது யமீன் தெரிவித்தார்.


புத்தளம் காற்பந்தாட்ட சங்கத்தின் முன்னைய நிர்வாகத்தினால் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக புள்ளிகள் அடிப்படையிலான  போட்டிகள் நடத்தப்பட்டிருந்தது.


எனினும் அந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு இதுவரையும் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை.


இந்த நிலையை சரி செய்ய, தற்போதைய புதிய நிர்வாகம், அனைத்து பங்குபற்றிய அணிகளுக்கும் உரிய பரிசுத்தொகையை வழங்க தீர்மானித்துள்ளது.


புள்ளிகள் அடிப்படையிலான இந்த தொடரில் சம்பியனாகிய லிவர்பூல்  அணிக்கு 100,000 ரூபாயும், இணை இரண்டாம் இடங்களை பெற்ற நியூ ஸ்டார்ஸ் மற்றும் விம்பிள்டன் அணிகளுக்கு தலா 50,000 ரூபாயும், மூன்றாம் இடம் பெற்ற போல்டன் அணிக்கு 25,000 ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளதாக லீக்கின் தலைவர் முஹம்மது யமீன் தெரிவித்தார்.


இது தவிர லீக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள 12 கழகங்களில் இந்த நான்கு கழகங்களை தவிர மிகுதி எட்டு கழகங்களுக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த பரிசுத் தொகைகளை வழங்கி வைக்கும் பொருட்டு விஷேட கண்காட்சி காற்பந்தாட்ட போட்டி ஒன்று கூடிய விரைவில் இடம்பெற இருக்கின்றது. இந்த கண்காட்சி போட்டியிலே மேற்கண்ட தொடரிலே சம்பியனாகிய லிவர்பூல் அணியும் லீக் அணியும் கலந்து கொள்ள இருக்கின்றன.






No comments