லக்ஸ்டோ மீடியாவின் ஏற்பாட்டில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை முன்னிட்டு லக்ஸ்டோ மீடியா நடத்திவரும் முன்னோடி அரங்குகளில் ஒன்றான ஊடக அரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பல்துறை சார்ந்தோருக்கான திறமைக்கு மரியாதை விருது விழாவும் நேற்று முன்தினம் சனிக்கிழமை (26) சாய்ந்தமருது வொலிவேரியன் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
தினகரன், தினகரன் வார மஞ்சரி பத்திரிகையின் பிரதான ஊடக அனுசரணையில், லக்ஸ்டோ மீடியாவின் தலைவர் கலாநிதி ஏ.எல்.அன்ஸார் (சமாதான நீதிவான்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் தோட்ட அபிவிருத்தி பிரதியமைச்சருமான சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் ஆகியோர் முதன்மை அதிதிகளாகவும் இலங்கை வானொலி பிறை எப்.எம். பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையும், கலாசார உத்தியோகத்தர் ஏ.எச்.சபீகா ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, முன்னாள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் ஆகியோர் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கவிதை, நடனம், பாடல் என நிகழ்வை மெருகூட்டியதோடு, நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 60க்கும் மேற்பட்ட துறைசார் கலைஞர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டும் ஊடகத்துறை செயலமர்வுகளில் கலந்து கொண்ட ஊடகத்துறையினர், பாடசாலை மாணவர்கள் போன்றோருக்கும் சான்றிதழ்கள் வழங்கியும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் அனுசரணையாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், ஊடகத்துறை சார்ந்தோர், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
அச்சு ஊடகத்தில் தனித்துவமானதும் காத்திரமானதுமான சேவையை வழங்கி வரும் அரச ஊடகமான தினகரன் பத்திரிகைக்கு இதன்போது Best print media Leader Award - 2025 விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. அதனை தினகரன் சார்பாக பிராந்திய ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் வரவேற்புரையை லக்ஸ்டோ மீடியாவின் ஊடகப் பொறுப்பாளர் பாத்திமா றிஸாமா, விருது விழா பற்றிய சிறப்பரையை லக்ஸ்டோ மீடியாவின் செயலாளர் முஸ்தபா முபாரக், நிகழ்ச்சி நெறியாள்கைகை எம். ஏ. நஸீர், ஐ.எப்.இன்ஸிரா, றீனா ஜனூபர் ஆகியோர் நிகழ்த்தியோடு, லக்ஸ்டோ மீடியாவின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் ஒருங்கிணைப்பாளர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments