Breaking News

புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் புதிய நிர்வாகம் தெரிவு. உடனடியாகவே புதிய தொடரும் ஆரம்பம்.

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் புதிய தலைவராக புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஸ்தாபக தலைவர் முஹம்மது யமீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இதே வேளை புதிய செயலாளராக அப்துல்லா முராதும், புதிய பொருளாளராக முஹம்மது ரஸ்லானும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யும் நோக்கில் அதன் வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் புத்தளம் மாநகர சபை விளையாட்டு அரங்கின் கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் முன்னாள் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் நடைபெற்றது.


இதன் போது புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யும் நோக்கில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் ஐ.எம்.நஜீமின் தற்காலிக தலைமையில் நடைபெற்ற அமர்வின் போதே புதிய நிர்வாகம் தெரிவானது.


புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக  முதலாவது புதிய காற்பந்தாட்ட தொடர் ஒன்றும் ஆரம்பமாகியுள்ளது.


இந்த புதிய சுற்றுத்தொடர் ஒரு நாள் தொடராக இம்மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளது.


கட‌ந்த காலங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்பிட்டியில் இருந்து புத்தளம் நகருக்கு வருகை தந்து போட்டி தொடர்களில் விளையாடிய கல்பிட்டி பேர்ள்ஸ் அணியை கெளரவிக்கும் நோக்கிலேயே இந்த தொடர் கல்பிட்டி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


காற்பந்தாட்டத்தில் தீவிர ஆர்வம் கொண்ட லீக்கின் புதிய தலைவர் முஹம்மது யமீன், லீக் தலைவராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னதாகவே அவரது லெஜன்ட் கழகத்தின் மூலமாக நாட்டின் பல தலைசிறந்த காற்பந்தாட்ட அணிகளை புத்தளம் நகர் வரவழைத்து சிநேகபூர்வமான ஆட்டங்களை நடாத்தியதோடு பல இரவு நேர போட்டி தொடர்களை நடாத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

















No comments