ஈஸ்டர் தற்கொலை தாக்குதல். சில கேள்விகளும், சந்தேகங்களும், நியாயங்களும்.
ஆறாவது தொடர்.........
இலங்கையில் விடுதலை புலிகளுடனான போர் முடிவுற்றதன் பின்பு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக அன்றைய அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா போன்ற இயக்கங்கள் முஸ்லிம்களை அச்சுறுத்தி அவர்களது பொருளாதாரத்தினை அழிக்கும் செயற்பாடுகள் அரங்கேறியது.
அந்தவகையில் ஹலால் எதிர்ப்பு, முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு எதிர்ப்பு, பள்ளிவாசல்களுக்குள் பன்றி இறைச்சிகள் அடிக்கடி வீசப்பட்டமை, முஸ்லிம்களின் காணிகள் புனித பிரதேசங்கள் என்று சுவீகரித்தமை, முஸ்லிம்களின் தனியார் சட்டங்கள் நீக்கப்படல் வேண்டுமென்ற அழுத்தம், மர்மமான முறையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரயாக்கப்பட்டமை மற்றும் அல்-குர்ஆனில் அடிப்படைவாதக் கருத்துக்கள் இருப்பதாகவும் அதனை திருத்தம் செய்ய வேண்டுமென்ற அழுத்தங்கள் போன்றன ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமாக கட்டவிழ்த்து விடப்பட்டது.
அதுமட்டுமல்லாது இந்த நாட்டில் இஸ்லாமியர்களின் சனத்தொகை விகிதாசாரம் அதிகரித்துச் செல்வதாகவும், சிங்களவர்களின் விகிதாசார அதிகரிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இது எதிர்காலத்தில் சிங்கள நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாகவே முஸ்லிம்களுக்கு எதிராக பேருவளை, அளுத்கம கலவரங்கள் உருவாகி சொத்துக்களும், உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
இதற்கு அன்றைய அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லாமல் இருந்திருந்தால் ஞானசார தேரர் தண்டிக்கப்பட்டிருப்பார். ஆனால் அவைகள் எதுவும் நடைபெறவில்லை.
இவ்வாறான முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அச்சுறுத்தல்களினால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாகவே முஸ்லிம் சமூகத்திலிருந்து தீவிர போக்குடையவர்கள் உருவாகியிருக்கலாம்.
சஹ்றான் குழுவினர் செய்தது பயங்கரவாத செயற்பாடுகள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால் அதற்கான சூழலை உருவாக்கியவர்களும் இந்த பயங்கரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பதனை கூறுவதற்கு எவரும் துணிவதில்லை.
இருந்தாலும் பயங்கரவாதிகள் உருவாகுவதற்கு காரணமாக இருந்த பொதுபலசேனா இயக்கத்தை தடை செய்ய வேண்டுமென்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆச்சர்யமாக இருந்தது. இந்த அறிக்கையின் மூலம் யதார்த்தத்தை புரிந்துள்ளார்கள் என்பதனை உணர முடிகின்றது.
ஆனாலும் அரசாங்கம் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்துவதன் மூலம் தடை செய்வதற்கு பதிலாக பொதுபலசேனா இயக்கத்தை பாதுகாத்தே வந்துள்ளது.
தொடரும்............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments