ஈஸ்டர் தற்கொலை தாக்குதல். சில கேள்விகளும், சந்தேகங்களும், நியாயங்களும். ஆய்வுக் கட்டுரை.
2019 ஏப்ரில் 21 இல் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் பற்றிய விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய தகவல்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாகவும், மர்மமாகவும் உள்ளது.
இந்த தாக்குதலுடன் தொடர்புள்ளவர்களின் விபரங்களை 21 ஏப்ரல் 2025 இல் வெளியிட உள்ளதாக கடந்த மாதமளவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் குறிப்பிட்டிருந்தும் இந்த பந்தி எழுதும் வரைக்கும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.
2005 கிறிஸ்மஸ் தினத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட விவகாரத்துக்காக 2015.10.11 இல் CID யில் வாக்குமூலம் வழங்க சென்றபோது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டார் என்றுதான் செய்திகள் வெளியானது. இதைத்தான் இந்த நாட்டில் உள்ள அனைவரும் இன்றுவரை நம்பியுள்ளோம்.
ஆனால் விடயம் அதுவல்ல. அப்போது ஜானதிபதி மைத்ரிபால சிரிசேனவை ஸ்னைப்பர் தாக்குதல் மூலமாக கொலை செய்ய திட்டமிட்டதன் காரணமாகவே பிள்ளையான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றது. இதனை இந்திய உளவுத்துறை ஜனாதிபதி மைத்ரிக்கு தகவல் வழங்கியதன் காரணமாக ஜனாதிபதியின் பாதுகாப்பு கருதி பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது.
அதுபோலவே கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத்தை கடத்தி காணாமல் ஆக்கப்பட்டதன் விவகாரத்திற்காக பிள்ளையான் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக வெளியே செய்திகள் கசியவிடப்பட்டுள்ளது.
ஆனால் கிழக்கு பல்கலைக்கழக சமூகம் மட்டுமல்லாது முழு தமிழ் சமூகமும் மறந்துபோன நிலையில், உபவேந்தரின் கடத்தலுக்கு பிள்ளையான் மீது எந்தவித நேரடி ஆதாரமும் இல்லாத விவகாரம் ஒன்றுக்காக இன்றைய ஆட்சியாளர்கள் கைது செய்ததானது சற்று சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் பெருமை இல்லாமல் சாதாரணமாக எல்லோருடனும் தொட்டுப் பேசி பழகக்கூடிய ஒருவர். இந்த நிலையில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியது. இதுவும் அதே இந்தியாதான் ஜனாதிபதிக்கு தகவல் வளங்கியதாக கூறப்படுகின்றது.
அவ்வாறென்றால் ஜனாதிபதிக்கு ஆபத்தை விளைவிக்கும் சக்திகள் இந்த நாட்டில் யார் இருக்கின்றார்கள் ?
அதாவது அன்றைய ஜனாதிபதி மைத்ரிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக ஜோசப் பரராஜசிங்கத்தின் கணக்கில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டார்.
அதுபோல் இன்றைய ஜனாதிபதி அனுரவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா ?
உபவேந்தர் விவகாரத்துக்காக கைது செய்யப்பட்டால், ஏன் அது பற்றி பேசாமல் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தலைப்புச் செய்திகள் வெளிவருகின்றது ?
உபவேந்தர் கடத்தலுக்கு நேரடி ஆதாரம் இல்லாத நிலையில் தொடர்ந்து பிள்ளையானை தடுத்து வைப்பதற்காக, கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் வேண்டுமென்று ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை கசியவிட்டதன் காரணமாக அதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களின் நின்மைதியை இழக்கச் செய்து அதில் அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றதா ?
பிள்ளையான் கைது செய்யப்பட்டதன் பின்பு உதய கம்பன்வில, ரணில் விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ச ஆகியோர்களின் அறிக்கைகளை பார்க்கின்றபோது, அவர்கள் நன்றாக பதட்டம் அடைந்துள்ளது போன்று தெரிகின்றது. இது அரசாங்கத்தின் திட்டத்திற்கு கிடைத்த வெற்றிபோல தெரிகின்றதல்லவா ?
குறிப்பு:
நீண்ட கட்டுரைகளை நீங்கள் வாசிக்கமாட்டீர்கள் என்பதனால் பகுதி பகுதியாக பதிவிடுகிறேன்.
தொடரும்...............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments