Breaking News

முஸ்லிம் ஆயுதக் குழுவா அல்லது இராணுவ ஒட்டுக் குழுவா ?

கிழக்கு மாகாணத்தில் “”முஸ்லிம் ஆயுத குழுக்களை”” ஸ்ரீ லங்கா இராணுவ புலனாய்வுப் பிரவினர் இயக்கி வருவதாக ஒரு ஊடகம் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிட்டுள்ளது. இது கவலையை தருகின்றது. 


தனது சுயநல அரசியலுக்காக அர்ச்சுனா எம்பியினால் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை பொறுப்பற்ற முறையில் கூறிவருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு “”முஸ்லிம் ஆயுதக் குழு”” என்ற அடையாளத்துடன் செய்தி வெளியிடுவதானது அர்ச்சுனா எம்பியின் கருத்துக்கு அங்கீகாரம் வழங்குவதாக உள்ளது. இது எரிகின்ற வீட்டில் பெற்றோல் ஊற்றுவது போன்றது.  


கிழக்கு மாகாணத்தில் கருணா குழு, பிள்ளையான் குழு, டக்ளஸ் குழு, ராசீக் குழு, மண்டையன் குழு, புளொட், டெலோ, EPRLF, ENDLF, THREE STAR என ஏராளமான குழுக்கள் அரச இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டன. 


இந்த குழுக்கள், புலிகள் என்ற சந்தேகத்தில் நூற்றுக் கணக்கான அப்பாவி தமிழ் இளைஞகளை கொலை செய்தும், சித்திரவதை செய்தும், கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக உள்ளது. 


இந்த குழுக்களில் ஆயிரக்கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் செயற்பட்டார்கள். ஆனால் இவர்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம் ஆயுதக் குழு என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய சொற்ப எண்ணிக்கையுடயவர்கள். 


இவர்கள் அரச புலனாய்வு என்ற வகையில் இராணுவத்தில் பயிற்சி பெற்று அரசிடம் சம்பளம் பெறுகின்றவர்கள். யுத்தம் நடைபெறுகின்ற நாடுகளில் அரச இராணுவத்தினர் அந்தந்த பகுதிகளில் தங்களது தேவைக்காக இளைஞர்களை இவ்வாறு ஈடுபடுத்துவது சாதாரணமான நடைமுறையாகும். 


அதுபோலவே தங்களது தேவைக்காக இளைஞர்களை இலங்கை அரச இராணுவத்தினர் பயன்படுத்தி இருக்கலாம். அவ்வாறு பயன்படுத்தப்படுபவர்கள் அரசிடம் ஊதியம் பெறுகின்ற “”இராணுவ ஒட்டுக்குழு”” என்றுதான் அவர்களை அழைக்க வேண்டுமே தவிர, அவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கியவர்கள் என்பதற்காக “”முஸ்லிம் ஆயுதக் குழு”” என்று அழைப்பது பொறுப்புள்ள ஊடகங்களுக்கு நல்லதல்ல. 


இந்த குழுக்கள் இராணுவத்தின் தேவைகளை நிறைவெற்றினார்களே தவிர, முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை ஒருபோதும் நிறைவேற்றவில்லை. அத்துடன் இவ்வாறான குழுக்களை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.     


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments