எதிரியை நெருங்குவதற்காக நண்பனை கைவிட்டுள்ள அமெரிக்காவின் தந்திரம். இதில் ஈரான் பாதிக்கப்படுமா ?
இயற்கை வளங்கள் குவிந்துகிடக்கின்ற நாடுகளில் போர் சூழலை உருவாக்குதல் அல்லது அந்த நாடுகளின் தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்து ஒப்பந்தத்தினை ஏற்படுத்தி வளங்களை சூறையாடுவதுதான் அமெரிக்காவின் ஜனநாயகமாகும்.
அண்மையில் ஜோர்டானிய மன்னரை மிரட்டியது போன்று உக்ரேனிய அதிபரை பணியவைக்க எடுத்த முயற்சியை உக்ரேனிய அதிபர் துணிச்சலுடன் எதிர்கொண்டதனை உலகம் இன்று பாராட்டுகின்றது. இந்த துணிச்சல் அரபு நாட்டு தலைவர்களுக்கும் வரவேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.
காசா மக்களை ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளில் குடியமர்த்த வேண்டுமென்ற டொனால் ட்ரம்பின் கோரிக்கையை ஆரம்பத்தில் ஜோர்டான் நிராகரித்தது. ஆனால் வெள்ளை மாளிகைக்கு சென்ற பின்பு இரண்டாயிரம் காசா சிறுவர்களை ஜோர்டானில் பராமரிக்க உள்ளதாக ஜோர்டானிய மன்னர் அறிவித்திருந்தார். இவ்வாறு அறிவிக்கும்போது மன்னரின் முகத்தில் சற்று பதட்டம் வெளிப்பட்டதானது அவர் மிரட்டப்பட்டாரா என்ற சந்தேகம் உள்ளது.
சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்துசென்ற எந்தவொரு நாட்டையும் ஆக்கிரமிப்பதற்கு ரஷ்யா முயலாத நிலையில், உக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான தூண்டுதலை அமெரிக்காவே உருவாக்கியது.
ரஷ்யாவுடனான போரில் உக்ரேன் உருக்குலைந்துள்ள இன்றைய இக்கட்டான நிலையில் ஒப்பந்தம் மூலம் அதன் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க அமெரிக்கா முயல்கிறது.
“மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களுடன் விளையாடுகிறீர்கள்” என்று உக்ரேன் அதிபரை பார்த்து முதலைக்கண்ணீர் வடிக்கின்ற இதே டொனால்ட் ட்ரம்தான் “காசாவை நரகமாக்குவேன்” என்று எச்சரித்திருந்தார். இதிலிருந்து அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டினை புரிந்துகொள்ள முடிகின்றது.
அதாவது டொனால்ட் ட்ரம் குறிப்பிடுகின்ற மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களுக்கு இருக்கின்ற பெறுமதி மத்தியகிழக்கில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு இல்லை என்பது இதன் அர்த்தமாகும்.
ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்பதுபோல் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு வல்லரசுகளும் ஒன்றாக செயற்படுவது நடைமுறை சாத்தியமற்றது. ஆனால் இன்றைய பதட்டமான காலகட்டத்தில் அவ்வாறு ரஷ்யாவுடன் சார்ந்து செல்வதற்கு அமெரிக்கா முயல்வதானது ஈரானுக்கு பாதகமானது.
பாதுகாப்பு ஒப்பந்தம் மூலமாக ஈரான் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைத்து செயற்படுவது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது. அதனால் ஈரானையும், ரஷ்யாவையும் பிரிப்பதன் மூலம் ஈரானை தனிமைப்படுத்தி இஸ்ரேலுக்கு சாதகமான களத்தினை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்துடனும்,
மற்றும் ரஷ்யா தலைமையிலான BRICS நாடுகளின் கூட்டணி பலமான சக்தியாக உருவெடுத்து டொலர் நாணயத்துக்கு எதிராக புதிய நாணயத்தினை உருவாக்கும் முயற்சியை தோற்கடிப்பதுடன், BRICS கூட்டணியை பலயீனப்படுத்தும் தந்திரத்திலும் அமெரிக்கா ரஷ்யாவை நெருக்கமாக்கிக் கொள்வதற்காக உக்ரேனை கைவிட்டுவிட்டு தனது நல்லெண்ணத்தை ரஷ்யாவுக்கு காண்பித்துள்ளது.
எனவேதான் அமெரிக்காவின் சுயநல அரசியலுக்குள் உக்ரேன் நாடும் அதன் மக்களும் அகப்பட்டு உருக்குலைந்துள்ளனர். மத்தியகிழக்கில் இன்று ஏற்பட்டுள்ள போர் சூழலில் தற்காலிகமாவேனும் ரஷ்யாவுடன் அமெரிக்கா சார்ந்து செல்வதனை தடுப்பதுதான் ஈரான் சார்பு நலன்களுக்கு உகந்ததாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments