Breaking News

நீதிமன்ற கொலையானது பாதாள குழுக்கிடையிலான போட்டியா ? அரசியலா ? ஏன் அரசாங்கம் அடக்கி வாசிக்கின்றது ?

ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் பிரபலமாக அறியப்பட்ட கஜா என்று அழைக்கப்படுகின்ற அருனவிதான கமகே என்பவர் அவரது இரண்டு குழந்தைகளுடன் 18.02.2025 திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தின் அடியாளாக செயற்பட்டவர் என்றும், பின்பு அவர்களைவிட்டு பிரிந்து சாதாரண இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவர் என்றும் கூறப்படுகின்றது. 


தாஜுதீன் கொலை உட்பட பல இரகசியங்களை இவர் அறிந்திருந்ததன் காரணமாக தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக இவர் முன்கூட்டியே வெளிப்படுத்தியிருந்தார்.  


இந்த கொலை பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கனேமுல்ல சஞ்சீவ என்னும் பாதாள குழு தலைவர் புதுக்கட நீதி மன்றத்துக்குள் மறுநாள் அதாவது 19.02.2025 திகதி கொலை செய்யப்பட்டதனால் இந்த விவகாரம் தலைப்புச் செய்தியாக மாறியதுடன், முதல்நாள் கொலை மறைந்துபோனது. 


ராஜபக்சாக்களின் ஆட்சியின்போது அவர்களுக்கு எதிராக செயற்பட்ட ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் என பலரும் மர்மமான முறையில் கொலை செயற்பட்ட விவகாரம் அப்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.     


அத்துடன் “பாதாள குழுக்கள்” என்னும் வார்த்தைக்கு பதிலாக கருணா குழு, பிள்ளையான் குழு, டக்ளஸ் குழு என்னும் குழுக்களே பிரபலமாக இருந்தது. 


நீதிமன்றத்திற்குள் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ என்பவர் சுமார் 39 கொலைகளை செய்ததாக கூறப்படுகின்றது. இந்த கொலைகள் அனைத்தும் எதற்காக செய்தார் ? யாருக்காக செய்தார் ? என்றால் அதில் அதிகமானவை அரசியல்வாதிகளுக்காக செய்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றது. 


எந்த அரசியல்வாதிகளுக்காக யாரையெல்லாம் கொலை செய்தார் என்ற ரகசியத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பு யாரும் எதிர்பாராத உயர் பாதுகாப்பு தளமான நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சந்ஜீவவின் மூச்சு அடக்கப்பட்டுவிட்டது.


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட ஓர் புலனாய்வு அதிகாரியின் கீழ் விசேட தாக்குதல் பிரிவில் கடமையாற்றியவர்தான் நீதிமன்றத்துக்குள் தாக்குதல் நடாத்திய சமிந்து டில்சான் ஆவார்.  


இதில் ஒன்றுமாத்திரம் உண்மை. அதாவது ஊடகங்களில் கூறப்படுவது போன்று இந்தக் கொலை இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையிலான போட்டியினால் ஏற்பட்டதல்ல என்பதுதான் அந்த உண்மை. 


பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம், ஊழல்வாதிகளை சிறையில் அடைப்போம் என்றெல்லாம் உணர்ச்சி பொங்க முழங்கிய இன்றைய அரசாங்கமானது ஏன் பாதாள குழுக்களை கட்டுப்படுத்துவோம் என்பதில் அடக்கி வாசிக்கின்றனர் என்பது மாத்திரம் புரியாமல் உள்ளது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments