Breaking News

சிரியாவில் அசாத்தின் துரோகமும், மேற்குலக ஊடகங்களின் பாதிப்பும்.

ஈரானின் ஆதிக்கத்தில் இருந்தவந்த சிரியாவானது, பசர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்கு பின்பு துருக்கியின் கைக்கு மாறியது அனைவரும் அறிந்த விடையம். ஆனாலும் இந்த ஆதிக்க மாற்றத்தினால் ஈரானுக்கும், துருக்கிக்கும் இடையில் எந்தவித கருத்து முரண்பாடுகளும் ஏற்படவில்லை என்பதனையும் உற்றுநோக்க வேண்டும்.  


துருக்கியினால் ஈரானுக்கு அறிவித்த பின்புதான் போராளிகள் போரை ஆரம்பித்ததாக துருக்கியிலிருந்துவரும் செய்திகள் கூறுகின்றது. அவ்வாறென்றால் இவ்வளவு காலமும் பசர் அல்-அசாத்தை பாதுகாத்த ஈரான் இறுதியில் ஏன் அவரை கைவிட்டது ? 


ஈரானும், ரஷ்யாவும் சேர்ந்து பசர் அல்-அசாத்தை கைவிட்டார்களா ? அல்லது இந்த இரு நாடுகளுக்கும் அசாத் துரோகம் செய்தாரா ? என்பதுதான் கேள்விகளாகும்.   


கடந்த காலங்களில் சிரியாவுக்குள் நுழைந்து ஈரான் மற்றும் அதன் ஆதரவு தளங்கள் மீது இஸ்ரேலிய விமானப்படையினர் அடிக்கடி தாக்குதல்களை நடாத்தியிருந்தும், அண்மைய சில வருடங்களாக பசர் அல்-அசாத்தின் இராணுவ நிலைகள்மீது எந்த தாக்குதல்களையும் இஸ்ரேல் நடாத்தவில்லை. 


அத்துடன் பாலஸ்தீனில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தத்தில் ஹமாசுக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரானிய ஆதரவு இயக்கங்கள் தாக்குதல் நடாத்தியிருந்தும், ஈரானின் ஆதரவு படையாக விளங்கிய பசர் அல்-அசாத்தின் சிரியா இராணுவம் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கல்லைக்கூட எறியவில்லை.  


இது பசர் அல்-அசாத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஓர் இரகசிய உடன்பாடு ஏற்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் ஈரானிடம் இருந்தது.   


இவ்வாறான நிலையில் போராளிகள் சிரியாவின் பல நகரங்களை கைப்பற்றிக்கொண்டு தலைநகர் டமஸ்கஸ்சை அண்மித்தநிலையில், நாட்டைவிட்டு தப்பிச்செல்ல ஈரானிடம் கோரியபோது பசர் அல்-அசாத்துக்கு அடைக்கலம் வழங்க ஈரான் மறுத்ததாக கூறப்பட்டது.     


போராளிகள் சிரியாவை கைப்பற்றிய பின்பு பசர் அல்-அசாத்தின் ஆட்சியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டுவந்த சிரியாவின் ஆயுதக் களஞ்சியங்கள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ நிலைகள் அனைத்தும் இஸ்ரேலிய விமானப் படையினர்களினால் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டது. 


இவ்வாறு ஒருசில நாட்களுக்குள் இஸ்ரேலினால் துல்லியமாக தாக்கி அழிப்பதற்கு சிரியாவின் இராணுவ இரகசிங்கள் பசர் அல்-அசாத்தினால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டதாக அண்மையில் துருக்கியிலிருந்து செய்திகள் வெளியாகியிருந்தது. 


ஒப்பீட்டு ரீதியில் போராளிகளைவிட இஸ்ரேலை நண்பராக கருதியிருக்கலாம். அதனாலேயே சிரியாவின் ஆயுதங்கள் போராளிகளின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த இரகசியங்களை பசர் அல்-அசாத் இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளார் என்று நம்பப்படுகின்றது. 


அத்துடன் பசர் அல்-அசாத் நாட்டைவிட்டு விமானத்தில் தப்பிச் செல்லும்போது அவரது விமானம் பாதுகாப்பாக செல்வதற்கான வான் பாதுகாப்பை இஸ்ரேல் வழங்கியதாகவும் செய்திகள் கூறுகின்றன.  


விடையம் இவ்வாறு இருக்கின்ற நிலையில், போராளிகளுக்கு பின்னால் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருப்பதாக உலகை நம்பவைப்பதற்கு மேற்குலக ஊடகங்களும், சில இந்திய ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டது. அதற்கேற்றால்போல் இஸ்ரேலிய பிரதமரின் அறிக்கைகளும் இருந்தது. 


போராளிகளுக்கு பின்னால் இஸ்ரேல் இருப்பதாக நம்பவைத்தால், போராளிகள் மீது உலக முஸ்லிம்களின் வெறுப்பினை உருவாக்கலாம் என்பதுதான் மேற்குலகின் திட்டமாகும். 


சிரியா நாட்டு மக்கள் போராளிகளை கட்டியணைத்து வரவேற்ற நிலையில், இலங்கை போன்ற நாடுகளில் உள்ளவர்கள் மேற்குலக ஊடக செய்திகளை மாத்திரம் நம்பிக்கொண்டு போராளிகளை பயங்கரவாதிகள் என்பதானது மேற்குலக ஊடகங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note