Breaking News

உடப்பை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் இரா.பாலகிருஷ்ணன் கலாபூஷணம் விருதினை பெற்றுள்ளார்.

எம்.யூ.எம்.சனூன்,க.மகாதேவன், எம்.எச்.எம்.சியாஜ்

இலங்கை அரசின் உயர் தேசிய விருதான “கலாபூஷணம்” (2023) விருது புத்தளம் மாவட்டம் உடப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் திரு. இரா.பாலகிருஷ்ணன்  அவர்களுக்கு 12 ம் திகதி வியாழக்கிழமை கொழும்பு அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.


உடப்பை பிறப்பிடமாகவும், ஆண்டிமுனையை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்பவர் இரா. பாலகிருஷ்ணன் அவர்கள்.


இவர் இராமலிங்கடப்பன் சேனம்பாள் குடும்பத்தின் மூன்றாவது புதல்வர் ஆவார். இவர் ஒரு மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்.


1973 ம் ஆண்டு முதன் முதலாக உடப்பு தமிழ் கிராமத்திலிருந்து கல்வி கற்று கண்டி பேராதனை பல்கலைக்கழகம் சென்றவர் என்ற பெருமையை தன்வசமாக்கிக் கொண்டவர்.


ஆரம்பத்தில் நாவற்காடு தமிழ் வித்தியாலயத்தில் தமது ஆசிரியர் பொறுப்பை ஏற்றதோடு, பின்னர் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், சிலாபம் சென்ட் பேனட் கத்தோலிக்கப் பாடசாலையில் ஆசிரியராகவும், குசலை தமிழ் வித்தியாலயத்தில் அதிபராகவும், இறுதியில் உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் இருந்தவர்.


உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராக இருந்த நிலையில் தமது 60 வது வயதில் பணி நிறைவு பெற்றார்.


இவர் கலைத்துறையில் ஈடுபட்டதுடன், முந்தல் பிரதேச மற்றும் புத்தளம் மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் பங்கு பற்றி முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்று சான்றிதழ், விருதுகளையும் பெற்றவர்.


அத்துடன் புத்தளம் மாவட்ட “கலாதினீ ”விருதையும் பெற்றுள்ளார்.


உடப்பில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் திருவிழா நிகழ்வுகளின் போது மரபிசைப் பாடல்களை பாடி பெருமை பெற்றவர்.


மேலும் உடப்பு இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவராகவும், ஒரு மேடைப் பேச்சாளராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.






No comments

note