Breaking News

அம்பாறையில் அனர்த்தநிலை முன்னேற்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா நடவடிக்கை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அம்பாறை மாவட்டத்தில், சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா இன்று ஞாயிற்றுக்கிழமை (24) பணிப்புரை விடுத்தார்.


அனர்த்தம் ஏற்படக்கூடிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர், கரையோரத்தில் வாழும் மக்கள் மற்றும் மீனவர்களைச் சந்தித்து உரையாடினார். 


மழை, வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக, மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்குமிடத்து அவற்றில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் குறித்து அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி றியாஸைத் தொடர்பு கொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர், தற்போதைய நிலமைகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச மக்களுக்கும் உரிய பாதுகாப்புகள் வழங்கும் பொருட்டு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னெடுத்துவரும் நடிவடிக்கைகள் குறித்து தமது பாராட்டுகளையும் தெரிவித்தார்.


மேலும், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மழை காரணமாக வெள்ள நிலை ஏற்படாதவாறு பிரதேச மக்களை பாதுகாக்கும் பொருட்டு அனர்த்த முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் மற்றும் அனர்த்த முன்னேற்பாடுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கணக்காளர் வை. ஹபீபுள்ளாஹ் அத்துடன் மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.எம்.ஜௌஸி ஆகியோரை கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் நேரில் வந்து நிலமைகளைப் பார்வையிட்டனர். 


சீரற்ற காலநிலை காரணமாக கல்முனை கிறீன்பீல்ட் வீட்டுத் திட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மாநகர கணக்காளரை தொடர்புகொண்டு பேசி மரத்தை அகற்ற தேவையான நடவடிக்கைகளும் பாராளுமன்ற உறுப்பினரால் எடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன், சாய்ந்தமருது பிரதேசத்தில் வெள்ள நீரை வெளியேற்றும் முக்கிய வடிகாலமைப்பான முகத்துவாரத்தை தோண்டி வெள்ளநீர் கடலுடன் சேர துரித நடவடிக்கை எடுக்குமாறு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் கல்முனை மாநகர சபையும் இணைந்து பணியாற்றி, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முகத்துவாரம் தோண்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










No comments

note