Breaking News

முன்னாள் பிரதியமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்

நூருல் ஹுதா உமர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும் அக்கட்சியின் முதலாவது தவிசாளரும், முன்னாள் ஊடகத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி (வேதாந்தி) எம்.எச். சேகு இஸ்ஸதீன் இன்று (28) காலமானார்.


1944 மே 12 இல் பிறந்த இவர் தனது 80வது வயதில் சொந்த ஊரான அக்கரைப்பற்றில் காலமானார். தீவிர சமூக அரசியலில் ஈடுபட்ட அவர், முஸ்லிம் உரிமைகளுக்காக அதிகம் குரல் கொடுத்தார். இலக்கியத் துறையில் அதீத நாட்டம் காட்டிய அவர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்து வளர்த்தெடுத்ததில் பிரதான பங்களித்தவர். 1982ஆம் ஆண்டு, சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை நிறைவு செய்து பின்னர் அரசியலில் ஈடுபட்டார்.


வட கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், ஊடகப் பிரதி அமைச்சர், ஏற்றுமதி அபிவிருத்தி பிரதியமைச்சர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட அவர், பல்வேறு நூல்களை எழுதியுள்ளதோடு, அரசியலையும் கவிதை நயத்துடன் மக்கள் முன் கொண்டு சேர்ப்பதில் வித்தகராக விளங்கிய அவர், வேதாந்தி எனும் புனைப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.


இலங்கை அரசியலில் பேச்சாற்றல் மிக்க தலைவராக இருந்த எம்.எச். சேகு இஸ்ஸதீன் அவர்களின் இழப்புக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் இரங்கல் வெளியிட்டு வருவதுடன் அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து அக்கரைப்பற்றில் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments

note