அறபுக் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்; அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த அனுதாபம்.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கலாசாலையில் கல்விகற்று வந்த சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவர்கள் விஷேட விடுமுறையில் வீடு சென்ற போது அவர்களை ஏற்றிச் சென்ற டிறக்டர் மாவடிப்பள்ளி பாலத்தில் குடைசாய்ந்ததில் ஆறு மாணவர்களும் வேறு சிலரும் நீரில் மூழ்கி அகால மரணமடைந்துள்ளனர். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
இத்துன்பவியல் சம்பவத்தையிட்டு, அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா பெரும் துயரடைந்துள்ளதுடன் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ILM. ஹாஷிம் - சூரி, மதனி , அதன் செயலாளர் அஷ்ஷெய்க் AL. நாஸிர் கனி - ஹாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ;
மாணவர்களின் பெற்றோருக்கும் குடும்பத்தினர் உறவினர்களுக்கும், அறபுக் கல்லூரி நிருவாகிகள், ஆசிரியர்களுக்கும், டிரக்டர் வண்டியில் பயணித்து நீரில் மூழ்கி வபாத்தான ஏனையோரின் குடும்பத்தினருக்கும் தமது ஆறுதலையும் பிரார்த்தனையையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
நாம் அறிந்த வரையில், கல்லூரி நிருவாகம் மாணவர்களை மிகவும் பாதுகாப்பாகவும் வழமையான நடைமுறைகளைப் பின்பற்றியுமே அனுப்பி வைத்துள்ளனர் என்பது எமக்குத் தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும், அசாதாரண சூழ்நிலை நிலவும் காலப் பகுதியிலும் வெள்ளம் கட்டுக்கடங்காமல் வீதிகளையும் பாலங்களையும் மேவிச் செல்கின்ற சந்தர்ப்பங்களிலும் விடுதிகளில் தங்கிப் படிக்கின்ற மாணவ மாணவிகளை வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்காமல் இருப்பதே ஆரோக்கியமான அம்சமாக ஜம்இய்யதுல் உலமா கருதுகின்றது.
மேலும், எதிர்வரும் காலங்களில் சீரற்ற காலநிலை நிலவும் காலப் பகுதியில் ; ஆபத்து நிகழும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் இடர்களை தவிர்க்கும் வகையில் உரிய வேளைக்கு இராணுவம் கடமையில் அமர்த்தப்பட்டு முறையான ஒரு பொறிமுறையின் கீழ் பாதுகாப்பு மிக்க பயண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசை வினயமாக வேண்டிக் கொள்கின்றது.
வல்ல நாயன் அல்லாஹ், நீரில் மூழ்கி மரணித்த அனைவரையும் ஷஹீதுகளாக அங்கிகரித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை அவர்களுக்கு வழங்குவானாக!
No comments